பிணைந்திறுகும் பித்து




சாலையோரம் நின்று
இருளைப் பிய்த்து
கடந்தேகும் வாகனங்கள்
வீசியெறியும் வெளிச்சத்தில்
ஓவியங்கள் தீட்டுகிறான் அவன்

வாகன ஓசைகளிலிருந்து
இசை மணிகளைப் பிரித்து
மாலையாக்கி
ஆட்காட்டி விரலில் மாட்டிச்
சுழற்றுகிறான்

வளர்ந்தும் தேய்ந்தும்
வந்தும் வராமலும்
போகும் நிலவிடம்
கவிதைகள் சில சொல்லி
அருகில் வரப் பணிக்கிறான்

எரிந்து விழும் நட்சத்திரங்களின்
பாதையில் பயணம் போக
வேப்ப மரக்கிளையுடைத்து
ஏணி செய்யப் பிரியப்படுகிறான்

பிரபஞ்சத்தின் செல்ல மகவாய்
உலகையாளும் பேரரசனாய்
தன்னைப் பாவிக்குமவன்
மிரண்டோடும் குழந்தைகளின்
பாத அடிகளில்
பால்யத்தைக் கண்டெடுத்துச்
சிலிர்க்கிறான்

அவனுக்கும் ஆசை வரும்
பித்து மனநிலைவிட்டுப்
பிரிந்து விட்டாலென்ன!
 
பாதியில் நிற்கும் ஓவியமோ
விரலில் சுழலும் இசையோ
நிலவோ நட்சத்திரமோ
மழலையின் பாதச்சுவடோ
கண் சிமிட்டுகையில்
பிணைந்திறுகிப் போகாதோ பித்து!


No comments: