தண்ணீரின் நியாயங்கள்

உறக்கம் கலைகிறது. தண்ணீர் லாரி வந்து நின்ற அந்த ஓசையில்தான் உறக்கம் கலைந்திருக்க வேண்டும். பேச்சுக்குரல்களையும் பரபரப்பையும் உணர முடிகிறது. எல்லாம் கனவில் நிகழ்வது போல் தெரிந்தது. மீண்டும் உறக்கம் தழுவுகிறது, திடீரென பெருமழை கொட்டும் சப்தம். அருவியின் இரைச்சலுக்கு நிகரானதொரு ஓசை. திடுக்கிட்டு எழுந்து, திறந்திருக்கும் சன்னல் வழியே ஆவலோடு பார்க்கிறேன். தண்ணீர் லாரி நின்ற சப்தமும், பேச்சுக்குரல்களும் நினைவிற்கு வருகின்றன. அந்த அருவி ஓசை, அண்டை வீட்டு தரைத்தள தண்ணீர் தொட்டியில் கொட்டும் நீரின் ஓசையெனத் தெளிவாகிறது. இந்தத் தண்ணீர் எங்கிருந்து வந்திருக்குமெனும் யோசனை உறக்கத்தைத் துண்டிக்கிறது.

இப்போது இருக்கும் வீட்டிற்கு குடி வந்த புதிதில், ‘கோடையில் தண்ணீர் வாங்க வேண்டியிருக்கும்என்று சொன்னபோது காசுக்கு தண்ணி வாங்கிப் புழங்க வேண்டிய நிலையை மிகமிகக் கசப்பாகவே ஏற்றுக்கொண்டதை  மறுப்பதற்கில்லை. ஆனால், காலம் வெகு வேகமாய் அந்தக் கசப்பைப்  புகட்டியது.

ஊரில் விளைந்து வெட்டி எடுப்பதற்கு ஈரமின்றி வாடிக் கிடக்கும் மஞ்சள் வயல் மனதில் நிரம்புகிறது. ஒரு வழியாய் தம்கட்டி விளைய வைத்ததை மண்ணிலிருந்து வெட்டியெடுக்க தண்ணீர் போதவில்லை. வயலில் லாரித் தண்ணீர் விட்டேனும், வெட்டியெடுக்க வேண்டும் என ஊரிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு சொன்னது நினைவுக்கு வருகிறது. நகரத்தில் லாரி தண்ணீர் வாங்கிப் புழங்கவேண்டி வந்ததையே கசப்பாக எதிர்கொண்டவனுக்கு, விவசாய நிலத்திற்கு லாரித் தண்ணீர் என்பதை எவ்வகையிலும் ஜீரணிக்கவே முடியாது. நள்ளிரவுக் குளுமையையும் தாண்டி கூடுதலாய் வியர்க்கிறது. உறக்கம் முழுக்கத் தொலைந்து போகிறது.

அணையில், ஆற்றில், ஏரி குளங்களில் என எங்கும் நீரில்லாத கடுங்கோடை இது. நகர்ப்புற வசிப்பிட மற்றும் தொழில்களுக்கான நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அவசரமாய் செய்வது, அக்கம் பக்கமிருக்கும் தண்ணீரை லாரிகள் வாயிலாக கொண்டு வந்துவிடுவது. விவசாயத்தை விட நீரை விற்பனை செய்வது புத்திசாலித்தனமானதொரு செயலாக சில விவசாயிகளால் பின்பற்றப்படுகிறது. அது குடியிருப்புகளுக்கு மட்டுமல்லாது, அநியாயமாய் நீர் வீணாகும் தொழிற்சாலைகளாக இருந்தாலும், நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது?.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன யார் யாரோ ஏதேதோ அடிப்படையில் தரவுகளைக் கொண்டு விளக்கங்களை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நூறாண்டுகள் என்பதுள்ளிட்ட  தரவுகளைப் பேசிப் பேசி என்ன செய்யப் போகிறோம்? அம்மாதிரியான தரவுகளை வைத்துக் கொண்டு மேகக் கூட்டத்திடம் எதுவும் சமரசம் பேசவா முடியும்? கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் நிலம் பொட்டலாய்க் கிடக்க, தன்னந்தனியாய் இருக்கும் வீட்டோரத்தில் ஓரிரு தென்னைகளும் வேம்பும் மட்டும் மிஞ்சியிருக்கின்றன. நாள்தோறும் இரவுகளில் பளிச்சென நட்சத்திரம் பூத்திருக்கும் வானத்தை ஆற்றாமையும், இயலாமையும் இனியென்ன செய்வதுஎன்கிற பயமேறிய கேள்வியுமாய் வெறித்துப் பார்க்கும் விவசாயி எவரையேனும் கண்டதுண்டா? அவரிடம் இது இந்த யுகம் காணாத வறட்சிஎனும் தரவுகளை வைத்துக் கொண்டு என்ன சமாதானம் பேசிவிட முடியும்.

நூற்றாண்டுகள் காணாத வறட்சிஎன்பதைவிட, ஒவ்வொருவருக்கும் தெளிவாகப் புரிந்திருப்பது, ‘இது தம் வாழ்நாளில் கண்டிராத வறட்சிஎன்பதுதான். விவசாயம் என்பதைக் கைவிட்டு பல மாதங்கள் ஆகின்றன. நிலமெங்கும் வெயில் மட்டுமே விதையாய் விழுந்து முளைத்துக் கொண்டேயிருக்கிறது. கிணறு தூர்ந்து, திணறித் திணறி உமிழ்ந்து கொண்டிருந்த ஆழ்துளைக் குழாய்க் கிணறும் ’என் மடியில் ஒன்றுமில்லைஎன உதறி விட்டுவிட்டது. வீட்டைச் சுற்றியிலிருக்கும் செடி கொடிகளுக்கும் தண்ணீர் இல்லை. கட்டுத்தரையில் இருக்கும் எருமைகளுக்கு தீவனம் குறைந்து கொண்டேயிருக்கும் ஆபத்தைவிட, அவைகளுக்கான குடிநீருக்கும் அலைய வேண்டிய அவலம்.

ஆங்காங்கே வறட்சியில் வாடும் கரும்பினை வெட்டச் சொல்லி சர்க்கரை ஆலைகளை விவசாயிகள் மன்றாட, வெட்டப்படும் கரும்பின் நுனிப்  பகுதியானகோந்தாழைக்கு போட்டியோ போட்டி. பொதுவாக இந்தக் கோந்தாழை துளியும் சீண்டப்படாதது. சீண்டப்படாமல் கிடந்த ஒன்றிற்கு பல மைல்கள் தூரம் ஓடி, கட்டு பத்து ரூபாய், பதினைந்து ரூபாய் எனக் கொள்முதல் செய்து எடுத்து வந்து, தம்மிடம் இருக்கும் எருமை, மாடுகளை காப்பாற்றியே ஆக வேண்டிய நிர்பந்தம்.

கொஞ்சம் காசும், நம்பிக்கையும் இருப்பவர்கள், தம் நிலத்தில் புதிது புதிதாய் நீர் தேடி ஆழ்துளைக் கிணறு தோண்டுகிறார்கள். ‘இந்த இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்என்கிற உத்தரவாதம் எதுவும் கிடையாது. தேவை மிகுந்துவிடின், எதன்மீதும் நம்பிக்கை வைக்கத் துணிந்து விடுகிறோம். இருக்கும் கொஞ்சம் தென்னைகளைக் காப்பாற்ற வேண்டி அரை ஏக்கர் நிலப்பரப்பிற்குள் போடப்பட்ட இரண்டு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளிலும் நீரின் சுவடுகளைக் கூட கண்டறிய முடியாதவர்... ஏற்கனவே இருக்கும் ஆழ்துளைக் குழாய்க் கிணற்றை ஆழப்படுத்தும் முயற்சியில், கடைந்தெடுக்கும் பகுதி உள்ளே சிக்கிக் கொண்டதால், இருந்த ஒரே ஆழ்துளைக் குழாய்க் கிணற்றையும் இழந்தவர்... ஆயிரத்து எழுநூறு  அடிகள் ஆழம் வரை கிணறு தோண்டியதில் கடல் நீருக்கு நிகரானதொரு உப்புநீரை அடைந்தவர்... இப்படி தோல்வியின் வடுக்கள் பதிந்த மனிதர்களால் நிரம்பியிருக்கின்றன நம் கிராமங்கள்.

குடிக்கவும் தண்ணீர் இல்லை எனும் இக்கட்டு நேர்வதுபோல், வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் ஒவ்வொருவருக்கும் முடிச்சு விழுகிறது. வாழ்க்கையின் எத்தகைய நிலையை எடுத்துக் கொண்டாலும், அது விரும்பிய வண்ணம், பழகிய வண்ணம் இடையூறுகள் ஏதுமின்றி அமைந்துவிடுதலே அனைவரின் விருப்பமும். அந்த விருப்பத்தின் மிக முக்கியக் காரணம், அது விருப்பம் என்பதையும்விட பழக்கம் என்பதே முதன்மையானது. ஏற்கனவே பழகிப்போன ஒன்றிலிருந்து புரண்டுவிடுதல் என்பது எவ்வகையிலும் எளிதானதல்ல. எல்லாம் அதனதன் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் வரைக்கும், எல்லாமுமே இதமாக இருக்கும். ஏதோ ஒரு புள்ளியில் முடிச்சு விழும்போதோ, தேங்கும்போதோ, அது முன்வைக்கும் புதிர்தான் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனை.

இப்படியான தருணங்களில் புரள்வதை விரும்பி ஏற்பது ஒருவகை, தன் மேல் திணிக்கப்படுவதை உள்வாங்குவது இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகையை எதிர்கொள்ளும்போது ஏற்படும் அச்சம் கலந்த பதற்றமும், அலுப்பும், திடுக்கிடலும்தான் அரக்கத்தனமாக நம்மை வதைக்கத் துவங்கும்சுருண்டு மிரளும் புள்ளியிலிருந்துஅடுத்து என்னஎனும் கேள்வியோடு தவிக்கையில் ஏற்படும் உளப்போராட்டம் சாதாரணமானதல்ல.

அந்தப் புள்ளியில் ஏற்படும் தவிப்பிற்கான மிக முக்கியக் காரணம் அதுவரைக்கும் கடந்த காலம் நமக்குள் படிய வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கருதியிருப்பவை. ‘இவையெல்லாம் இப்படித்தான்என நாமாக நினைத்துக் கொள்வதை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை. எல்லாச் சூழல்களில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்அடுத்தது என்ன!?” எனும் கேள்விக்கு பல பதில்களை நாம் தயாரித்து வைத்துக்கொண்டே காத்திருக்க வேண்டும்.



இங்கே நீரின்மை மட்டும்தான் பிரச்சனையாஎன்ற கேள்விக்கு ஆம்எனும் பதில் முழுமையானதாக இருக்க முடியாது. எதையெதையோ கணிக்கத் தெரிந்த நமக்கு, இப்படியானதொரு வறட்சி வரப்போகிறது என கணிக்கத் தெரியவில்லை அல்லது கணித்ததை மக்களிடம் விழிப்புணர்வாக ஏற்படுத்த முடியவில்லை. வந்தபின் எந்த அறிவுரையும், தரவுகளும் எரிச்சலைத்தான் தரும். வரும்முன் காப்போம் என்பதில் தொடர்ந்து பிழை நிகழ்கிறது.

ஒருவகையில் இம்மாதிரியான வறட்சியை, நிலத்திற்கான ஓய்வென்று புரிந்து கொள்தல் நலம். சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் முறைப்படுத்தல்கள் இருந்திருந்தால், இந்த வறட்சியை எதிர்கொள்ள சற்று முன்னேற்பாடாய் இருந்திருக்க முடியும். சில விவசாய பயிரிடல்களை கை விட்டிருந்திருந்தால், இப்போது இவ்வளவு அழிவுகளைச் சந்திக்க வேண்டிய அவலம் நேர்ந்திருக்காது. ‘எப்போதும் ஒரே மாதிரியான பயிர்களைத்தான் பயிரிடுவேன்எனும் பிடிவாதம், இம்மாதிரியான வறட்சிக் காலத்தில் நம்மை வாரிச் சுருட்டி மிதித்துவிடும். ’எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் நீரைப் பயன்படுத்துவேன்எனும் வீம்பில் சிக்கல் நமக்கு மட்டுமல்ல. அந்த நீருக்கு தாகத்தோடு காத்திருக்கும் இன்னொரு உயிருக்குச்  செய்யும் வஞ்சனையும் கூட.

லாரியில் நிரம்பி, தளும்பித் தளும்பி வரும் தண்ணீருக்காக நகர்புறத்தில் வசிப்பவர்கள் காத்திருக்கிறார்கள். தம்மை அண்டியிருக்கும் கால்நடைகளையும், செடி, கொடி, மரங்களையும் காப்பாற்றத் தவிக்கும் விவசாயி இந்தத் தண்ணீரைத் தரமுடியாமல் மனப்போராட்டம் நடத்துகிறார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிகழும் நிலை வந்து வெகு காலமாகிவிட்டது. இதில் யார் வெல்ல, யார் தோற்க!? ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையின் அடிப்படையிலான நியாயங்களுண்டு.

காசு கொடுத்தால் தண்ணீர் லாரிக்கு டீசல் கிடைக்கலாம், ஆனால் தண்ணீருக்கு எங்கே செல்வது!?. லாரித் தண்ணீர் என்பது நேர்மையில்லா ஒரு சமன்பாடு. அந்தந்த நிலத்து மனிதர்களுக்கானா நீரையும் உணவையும் பணத்தால் அடித்துப் பிடுங்குவது நியாயமான செயலாகுமா!? ஒருவகையில் அங்கிருந்த மனிதர்களெல்லாம் நகரத்துக்கு நகர்ந்து விட்டதால், நீரும் லாரிகளில் நகர்ந்து வர வேண்டியிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமோ?

-

நம்தோழி மே வெளியான கட்டுரை


1 comment:

ராஜி said...

யோசிக்க வைத்தது உங்கள் கட்டுரை