சேமிப்பிலிருக்கும் சில சொற்கள்



கடந்தோடிய காலம் தன்னோடு அரவணைத்திருந்த உணர்வுகளின் கதகதப்பையும், கனத்திருக்கும் எண்ண மேகத்திலிருந்து நழுவும் சிறு தூறலின் குளிரையும் எத்தனை காலம் தான் மனதெங்கும் தூக்கிச் சுமக்கவியலும். தூக்கிச் சுமக்கும் நினைவுகளில் உயிர்க்கும் சிந்தனைகளைத் தோள் சாய்க்கையில், பாந்தமாய் அணைத்து வருடுகையில் விரலெங்கும் ஒட்டும் ஈரமான சொற்களின் தொகுப்போடு உங்கள் முன் நிற்கிறேன்.

தன் விருப்பம் போல், தன்னியல்பில் வாழ்க்கைச் சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டிருக்கிறது. அதன் வேகத்திற்கு ஓட முடிவதும், ஓட முடியாமல் போவதும்தான் இங்கிருக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சில நேரங்களில் திறனை நிரூபிக்கும் விளையாட்டு போலவும், சில நேரங்களில் விளையாட்டின் வெற்றி தோல்விகள் மூலம் ஏதோ ஒன்றை ஈட்ட எத்தனிக்கும் முயற்சி போலவும் காட்சியளிக்கின்றது. யார் யாரோ விளையாட, அவர்களின் வெற்றி தோல்விகள் மூலம் பலன் ஈட்டுவது, ஒருவகைப் பந்தயம் அல்லது சூதாட்ட வடிவமாகின்றது. இந்த வாழ்க்கை விளையாட்டில் நாம் இருப்பதும், நம்மைச்சுற்றி பல்வேறு பாத்திரங்கள் நிரப்பப்பட்டிருப்பதும் உண்மையிலேயே சுவாரசியமானதுதான்.

கற்றுக்கொள்ளல் எனும் தேடல் முதுகில் தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது. சலனமற்று அமைதியாய்க் கடக்க முடிவதில்லை, எதோ ஒன்றை மனம் இடைவிடாது தேடுகிறது. கற்றுக்கொள்வதற்கென இங்கு அச்சடித்த பாடங்களும், போதனைத் திட்டங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை. அந்தத் தேடலை செம்மையாகப் பூர்த்தி செய்பவர்கள் சிலர். அதில் மிக முக்கியமானது காலம். கரைந்தோடும் வாழ்நாளில் இந்தக் கணத்தை அர்த்தமுள்ளதாக்கி இருக்கும் காலத்தைத்தான் எப்போதும் முதலில் வணங்க விரும்புகிறேன். அடுத்து தங்கள் ஒவ்வொரு அசைவுகளாலும் கற்றுக் கொடுத்தபடியிருக்கும் சக மனிதர்கள். சற்றே பார்வையை விசாலமாக்கிக் கொண்டால், திகட்டத் திகட்ட பாடமாய் வந்து குவிகிறார்கள். நிறைய நிறைய என நிறைவாய்க் கற்றுக் கொண்டேயிருக்கலாம். காலடியில் அமைதியாய் இருக்கும் புல் தொடங்கி, தலைக்கு மேல திரண்டு நிற்கும் மேகம் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய் கற்றுக் கொடுத்தபடியே இருக்கின்றன.

அவ்வப்போது கற்றுக் கொண்டதிலிருந்து நிர்பந்தமாகவோ, விருப்பமாகவோ எழுதிய தேர்வுகளின் தொகுப்பே பெயரிடப்படாத புத்தகம்”. விடைகள் சரியோ தவறோ என்ற குழப்பங்கள் இருந்தாலும், ஏதேனும் ஒன்றை எழுதிக் கொண்டேயிருப்பதில் இருக்கும் பெரு விருப்பமும், வியப்பும், எழுதியவுடன் இறக்கி வைக்கும் தளர்வான நிம்மதியும் அலாதியானதொரு உணர்வு.  



என் உணர்வுகளை ஒரு விதையாய் தன்னுள் தாங்கி, செம்மையாய் வளர்த்தெடுக்கும் நம் தோழிஇதழுக்கும், இதழை நடத்தி வரும் சக்தி மசாலா குழுமத்திற்கும், இதழ் ஆசிரியர் திரு..செ.ஞானவேல் அவர்களுக்கும் பேரன்பும் பெரும் பிரியங்களும். வேர்களையும், கிளைகளையும் அவ்வப்போது அனுமதித்த அந்திமழை, தி இந்து இணையம், தமிழின் அமுதம் இதழ்களுக்கும் அன்பு நிறை நன்றிகள்.

பிரியத்தின் வழி நின்று எனது இரண்டாவது நூலான இதனையும் வெளியிட முன்வந்திருக்கும் இனிய நண்பர் வேடியப்பன் அவர்களுக்கு நெகிழ்வான பிரியம் நிறை நன்றிகள்.

இந்த கட்டுரைகளின் சொற்களுக்குள் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ உறைந்திருக்கும் என் மகள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் என் கூடுதல் நேசமும் வாழ்த்துகளும். வாசித்த சொற்கள்தான், வாசித்த நடைதான், ஆயினும் வாசிப்போம், உடனிருப்போம், ஊக்குவிப்போம் எனும் மனது படைத்த உறவுகளுக்கும், தோழமைகளுக்கும், வாசக மனங்களும் அன்பும் நன்றிகளும்.

இந்தப் பயணத்தில் இடையிடையே நாம் சந்தித்துக் கொண்டேயிருப்போம்! 

பிரியங்களுடன்
-கதிர்

No comments: