முடிந்து வைத்திருக்கும் ஒப்பாரி





மரணத்தின் ருசி இதழோரம் கசிய
விரைத்துக் கிடக்கிறாள் கெழவி
இரவில் தடுக்கி விழுந்து
தனக்காகக் காத்துக்கிடந்த மரணத்திற்கு
கதவு திறந்துவிட்டிருக்கிறாள்

கெழவியின் கதை பேசும் அக்கம்பக்கம்
பெருஞ்சாவைக் கும்பிடும் பிள்ளைகள்
காரிய விருந்துக்கு விவாதிக்கும் உறவுகள்
மாரடிக்கும் அவசோட்டுக் கிழவிகள்

அம்மா மாமியா அம்மாயி ஆத்தா
மாமூட்டு அத்தை மூலையூட்டாயா
சின்னம்மா கண்ணாடிக்காரம்மா
வெவ்வேறு அடையாளம் அவள்

லாந்தர் வெளக்கும் சாக்குப்பையுமாய்
ஊரூராய் கூத்துப் பார்க்க அழைத்துப்போன
வாழ்வின் முதல் தோழியும் அவள்
நல்லதங்காளும் குன்னுடையான் கதையும்
படிப்பித்த ஆசிரியக்கெழவியும் அவள்

ஒத்தை எழவு விடாமல் ஒப்பாரி பாடியவள்
தன் சாவுக்காக முந்தானைக்குள்
முடிந்து வைத்திருக்கும் ஒப்பாரியை
அவிழ்ப்பார் யாரோ, பாடுவார் யாரோ!?

-

No comments: