ஏ.பி.ஆர் எனும் ஆளுமை



ஒரு ஞாயிறு காலை என்பது, ஏதாவது காரணங்களை பகடையாய் உருட்டி தனக்கே தனக்கென வைத்துக்கொள்ள விரும்பும் ஒன்று. அவர் வருவதாகச் சொல்லிவிட்டார். அவரை ஓரிரு மாதங்களாகத்தான் அறிவேன். நண்பர் ஷான் மூலம் அறிமுகம். சிங்கப்பூரில் தான் செய்ய விரும்பும் ஒரு திட்டத்தின் பணியை ஷான் மூலமாக என்னிடம் வழங்கினார். ஆரம்பம் முதலே ஏதோ ஒரு பிசிறு எங்களுக்குள் இருந்தது. பிசிறு என்பதைவிட அலைவரிசை சரியாக அமையவில்லை எனச் சொல்லலாம். ஆனாலும் வேலைகளை அவர் சொல்வதிலும், அதை நாங்கள் செயல்படுத்த முயல்வதிலும் உயிர்ப்போடு இருந்தோம்.

அதே காலகட்டத்தில் தொடர் அலைச்சல்,  பயணங்கள், கூட்டங்கள், கூடுதலாய் சில பணிகள், அதுவும் இரண்டு மாத காலகட்டத்தில் செய்ய வேண்டிய ஒரு பணியை இரண்டு வாரத்தில் முடிக்கும் வகையில் சவாலாய் எடுத்துக்கொண்ட கால நெருக்கடி என என்னால் அதில் ஒன்றவும் முடியவில்லை, ஒன்றினாலும் அவரால் நான் கேட்பதை அனுப்ப முடியவில்லை. அந்த வேலையில் கொஞ்சம் அலுப்பு சேர்ந்துகொண்டது.

மனமும், உடலும் அப்படியாக சோர்ந்திருந்த ஒரு ஞாயிறு காலைதான் அவர் வருவதாக அறிவித்துவிட்டார். அதை நான் எவ்வகையிலும் தவிர்க்கவோ, மறுக்கவோ இயலாது. சனிக்கிழமையே வருவதாக ஏற்பாடுகளில் இருந்தார். நகர் முழுவதுமான ஒட்டுமொத்த மின் தடையைக் காரணம் காட்டி, ஞாயிறுக்கு நகர்த்தினேன். சனிக்கிழமை மாலை ஷான் வந்து சந்தித்தார். எங்களுக்குள் ஏதோ ஒன்று மிக இயல்பாக ஒத்துப் போகிறது. அடுத்த நாள் அவர் வருவதை எதிர்கொள்ளும் மனநிலையை ஷான் உடன் பேசிப்பேசி தயார் நிலையில் வைத்துக் கொண்டேன்.

கோவையிலிருந்து இண்டர்சிட்டியில் கிளம்பினார். பொறுமையாக திருச்சி () நாகர்கோவில் பாஸஞ்சரில் வாருங்கள் எனச் சொல்லியும், இன்டர்சிட்டியில் வருவது வசதி எனச்சொன்னவர் திருப்பூரைக் கடந்துவிட்டேன் என ஏழு மணிக்கு அழைத்தார். இடம் சொல்லுங்கள் வந்துவிடுகிறேன் என்றார். இல்லை நானே வந்து அழைத்துக்கொள்கிறேன் என்றேன்.

அவர் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்திருப்பதையும், அந்த வேலையை முடிக்க ஈரோடு நேரிடையாகவே வந்துவிடுவது குறித்தும், அவரின் வயது, அவருடையை நிலை என அதுவரை நான் கேள்விப்பட்டது குறித்தும் மனைவியிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தேன். ஒருவகையில் அவரை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு அது.

ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயிலிலிருந்து இறங்கி நிலைய முகப்பிற்கு அவர் வந்து நிற்கும் நொடிகளில், அவரை அடையாளம் கண்டு அருகில் சென்று, கதவு திறந்துவாங்க சார்” என்றேன்.

அவர் பெயர் : .பி.ராமன். வயது : 82

1951ல் சிங்கப்பூர் (அப்போது அது மலேசியா) சென்றவர் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசிக்கிறார். மலேசியா சிங்கப்பூர் வானொலிகளில் 700 நாடகங்கள், அறுபது ஆண்டுகளாக பத்திரிக்கைப் பணி, பல தொலைக்காட்சி நாடகங்கள், சினிமாத் துறையோடு தொடர்ச்சியாக நீண்ட தொடர்பு என அவரைப் பற்றிய விபரங்கள் வியப்பையும், மகிழ்ச்சியையும், மிரட்சியையும் தருகின்றன.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தோள் மீது கை போட்டிருக்கும் அளவிற்கு நட்பு கொண்டிருந்தவர்.

பார்த்த மாத்திரத்தில் அவருடைய வயதை என் தாத்தாவோடும், அவருடைய சிங்கப்பூர் வாழ்நாள் வயதை என் தந்தை வயதோடும் ஒப்பிட்டுக் கொள்கிறேன்.

கேட்டிருக்க வேண்டாத அதே கிளிஷே கேள்வியை நானும் கேட்கிறேன்எப்படி சார் இந்த வயசிலும் இப்படி அலையறீங்க, எல்லாத்தையும் இழுத்துப் போட்டுறீங்க!?”

இப்படி அலையாட்டி, இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்காட்டி, என் வயசுக்கு நான் முடங்கிப் போய்றுவேன். என் வயசுல நான் தொடர்ந்து நல்லா இருக்கனும்னா... இப்படி இயங்கிட்டே இருக்கனும் என்கிறார்.

அவரின் வயதில் பாதிக்கும் குறைவாய் இருக்கும் என்னை அவருக்கு மிக மிக சமமாக உணர்ந்து பேசும் மனநிலை வாய்த்திருப்பது திறன் என்று சொல்வதைவிட ஒரு வரம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு காஃபி மட்டும் வேண்டுமென்கிறார். ஷான் அதே நேரம் வருகிறேன் எனச் சொன்னதால், அரசு மருத்துவமனை முன்பு அவருக்காக காத்திருக்கும் நிமிடத்தில்

கதிர், சிங்கப்பூர் போயி அறுபது வருசத்துக்கும் மேல ஆச்சுங்க... அங்க எங்க வாழ்க்கை பாத்தீங்கன்னா... எங்களுக்குனு கஷ்டம், வருத்தம், அலைச்சல், பதட்டம், உளைச்சல், கவலை, பயம், சங்கடம் இப்படி எதுமே இல்ல.  எதுமே இல்லாம இருக்கிறதேகூட நம்மை ஒரு மாதிரி வீழ்த்திடும். நான் சும்மா இருக்கவே கூடாது. எதாச்சும் செய்துட்டே இருக்கனும்” என்கிறார்.

அவருடைய எதிர்பார்ப்புகளை பொறுமையாகக் கேட்கிறேன். தன்னுடைய அனுபவம், உழைப்பு, வயது, தகுதி, தொலைவு என்று எதுகுறித்தும் பேசாமல் வேலையில் ஒன்றிப்போகிறார். தன் விருப்பங்களை மிக மிகப் பக்குவமாய் எடுத்தியம்புகிறார். அவரின் மீதான வியப்பு என்னுள் படிந்து கிடக்கிறது. மாலைக்குள் அவருடைய வேலைகளை திருப்திகரமாக முடிக்கிறேன். அவருக்கும் மிக நிறைவாக இருக்கிறது.



அவர் சென்னை செல்வதற்கான பயண ஏற்பாடுகளில் முடிந்தவரை உடன் இருந்து பத்திரமாக அனுப்பி வைத்தது நிறைவையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது.

’நாற்பதுகளுக்குள் நுழைந்து விட்டோம், இனி என்ன’ என்பதான என் எண்ணங்களில் தன் செயல்பாடு எனும் சம்மட்டி கொண்டு அடித்துவிட்டுப் போயிருக்கிறார். புகை படிந்திருந்த கண்ணாடியை பளிச்சென துடைத்து விட்டதுபோல் மனதிற்குள் ஏதோ ஒரு தெளிவு. மனிதர்களை விட ஆகச்சிறந்த பாடங்கள் உலகில் இல்லை எனும் நினைப்பை மீண்டும் ஒருமுறை இவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் எழுதும் சூழலில் நான் எதுவும் உணர்வுவயப்பட்ட நிலையில் இருக்கிறேனா என மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பிக் கொள்கிறேன்.

அவரோடு நெருக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள், அவர் குறித்த விசயங்களை முடிந்தவரையில் ஆவணப்படுத்துங்கள் என்பதுதான். இந்த தலைமுறை எக்காரணம் கொண்டும் தவிர்த்துவிடவோ, தொலைத்துவிடவோ கூடாத ஒரு நபர் ஏ.பி.ஆர் அவர்கள்.

6 comments:

Rathnavel Natarajan said...


கசியும் மௌனம்
”இப்படி அலையாட்டி, இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக்காட்டி, என் வயசுக்கு நான் முடங்கிப் போய்றுவேன். என் வயசுல நான் தொடர்ந்து நல்லா இருக்கனும்னா... இப்படி இயங்கிட்டே இருக்கனும்” என்கிறார்.- எனது கருத்தும் அது தான். எதிரிலிருப்பவரை விட எனக்கு 2 வயது குறைச்சல் என நினைப்பேன், எதிரிலிருப்பவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதால் - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Erode Kathir.

Unknown said...

" எதுமே இல்லாம இருக்கிறதேகூட நம்மை ஒரு மாதிரி வீழ்த்திடும். நான் சும்மா இருக்கவே கூடாது. எதாச்சும் செய்துட்டே இருக்கனும்”
ஓர் அற்புதமான அனுபவத்தின் அருமையான பதிவு, கதிர் சார் ! நானும் நாற்பதுகளின் தொடக்கத்தில் தான் இருக்கிறேன் ! இயற்கை அளித்த இந்த வாழ்வை நேசித்து, ஊக்கத்தோடு என் பணிகளை செய்துவருகிறேன். என்னைப்போன்றவர்களுக்கு, திரு. ஏ.பி.ஆர். போன்றோர்களைப்பற்றி அறிந்துகொள்வது என்பது, மேலும் ஆர்வத்தோடு நம் பணிகளைச் செய்ய உத்வேகமாய், உதவியாய் அமையும் ! திரு.ஏ.பி.ஆர். அவர்களைப்பற்றி தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

ஷான் கருப்பசாமி said...

அவர் சரியான வயது 83. எப்போதும் ஒரு இன்ஸ்பிரேஷன். நீங்கள் சிங்கப்பூர் செல்லும்போது அவரது உபசரிப்பு தனிப்பட்ட முறையில் இருக்கும்.

'பரிவை' சே.குமார் said...

வயசு ஏறியதும் முடங்கிப் போகாமல் தன் பாதையில் இயங்கிக்கிட்டே இருக்கணும்... உண்மைதான்...
அருமை... ஐயா ஏ.பி.ஆர் அவர்களை வாழ்த்தும் வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.
அருமை அண்ணா...

KANNAA NALAMAA said...

83 வயதில் 38 வயது
இளைஞனைப்போல் சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும்
ஐயா APR அவர்களும் ,
38 வயதில் 83 வயதிற்கான
அறிவு முதிர்வும் அமையப்பெற்ற
எனது இனிய சகோதரர் ஈரோட்டாரும் ,
சந்தித்ததில் பேருவகை கொள்கிறேன் !
கற்றாரை கற்றாரே காமுறுவர்
என்பதில் ஏதும் ஐயமுண்டோ ?

KAVINGAR THIL BHARATHI said...

https://www.youtube.com/user/thilbharathi