ப்ளீஸ்.... முதுகுல குத்தாதீங்க எசமான்



ஒரு பள்ளிக்கூடத்தின் சுதந்திர தின விழாவில் பேச அழைத்திருந்தார்கள். 8.45 மணிக்கு காங்கயத்தில் இருக்க வேண்டும். 7.30 மணியிலிருந்து பேருந்துக்கு காத்திருந்தேன். எப்படியும் 10 நிமிடத்திற்கு ஒன்றென இருக்கும் பழனி வண்டி அரை மணி நேரமாகியும் வரவில்லை. அநேகமாக அந்தியூர் குருநாதசாமி கோவிலுக்கு சிறப்பு பேருந்தாக திருப்பிவிடப் பட்டிருக்கலாம்.

காலையிலிருந்து மக்கள் மார்பில் தேசியக்கொடி அணைந்திருந்ததை ஆங்காங்கே காண நேர்ந்தது. காத்திருந்த நேரம்வரை கடந்து செல்லும் பேருந்துகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு விடுமுறை தினத்துக்குரிய அழகோடு பேருந்துகள் மந்தமான கூட்டத்தோடு நகர்ந்து கொண்டிருந்தன. அந்த நேரத்திற்கு ஈரோட்டிலிருந்து மயிலாடுதுறை, தேவகோட்டை ஆகிய ஊர்களுக்கெல்லாம் பேருந்துகள் இயக்கப்படுவது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வழியாக பதட்ட மனநிலைக்குள் வழுக்கத் துவங்கினேன். ஒழுங்கா கார் எடுத்துட்டு வந்திருக்கலாமோ எனத்தோன்றியது. எப்படியும் 7.30 மணிக்கு கூட்டம் இருக்காது ஜம்னு ஒரு தூக்கம் போட்டுட்டுப் போகலாம் என்ற என் ஆசை பேராசையாக இருந்திருக்கும் போல. பெருநஷ்டம் என்பதைவிட பெருங்கஷ்டம் என்ற நிலைக்கு ஆளாகியிருந்தேன்.

ஒரு வழியாக 8 மணிக்குத்தான் ஒரு தனியார் பேருந்து பிதுங்கி வழிந்தபடி வந்தது. அரை மணி நேரம் கழித்து என்பதால் கூட்டத்திற்கு சொல்லவே வேண்டாம். ஏறவே வழியில்லை. ஆனாலும் என்ன தி.நகர் கடைவீதி போலத்தான். படிக்கட்டில் கால் வைத்துவிட்டால் போதும், அடுத்து வருவோர் அப்படியே தங்கள் விருப்பம் போல் நசுக்கி நகர்த்தி விடுவார்கள்.

தனியார் பேருந்து நடத்துனர்கள் போல் சாமர்த்தியசாலிகளைப் பார்க்கமுடியாது. முன் படிக்கட்டு அருகில் நின்றுகொண்டு அங்கிருப்பவர்களை பின்னால போங்க பின்னால போங்க என விரட்டுவார்கள். பின்னர் பின் படிக்கட்டு அருகில் வந்த முன்னால போங்க முன்னால போங்க என விரட்டுவார்கள். நடுப்பேருந்தில் எதும் வீட்டுமனை திட்டம் அமைக்கும் அளவிற்கு இடம் வைத்திருக்கிறார்களோ என தோன்றும். அவர்கள் பாடு அவர்களுக்கு.

மூலப்பாளையம், பூந்துறை எனச் சேர்ந்த கூட்டம் போதாதென்று, அரச்சலூரில் ஒரு அரை ஊரே ஏறியது. நான் நின்று கொண்டிருந்த வடிவத்தை அப்படியே படம் எடுத்தால் அஷ்டகோணல் என பள்ளியின் பாடத்திட்டத்தில் சேர்த்துவிடலாம். வீட்டில் பெண்டு பிள்ளைகளிடம் கொஞ்சம் தள்ளித்தான் உட்காரேன் என எப்போதாவது சொன்னது மண்டைக்குள் பல்பாக எரிந்தது.

நொய்யல் தாண்டும்போது ஒருவர்அய்ய்ய்ய்ய்யோவெனக் கத்தினார். இங்கே எத்தனைய்போட்டாலும் அந்த சப்தத்தை புரிய வைத்துவிட முடியாது. அப்படி ஒரு பெரும் சப்தம். அத்தனை நெருக்கத்தில் அஷ்டகோணலாய் நொறுங்கி நிற்கும் ஒரு மனிதன் எப்படி அவ்வளவு சப்தமாக கத்தினார் என ஆச்சரியமாக இருந்தது. அது ஒரு சாதாரணக் கத்தலே அல்ல. பேரலறல். ஒன்றுமே புரியவில்லை. கூட்டம் பரபரத்தது.

ஒருவர்ஏங்க இரத்தம் வருதுஎன்றார்.

ஒருவர்அய்யய்யோ….. சாரிங்கசாரிங்கஎன்றார்.

ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதில் மெல்ல என்ன நடந்ததென்று புரிந்தது.

கூட்டத்திற்குள் இருந்த ஒரு தேசபக்தர் பழையகோட்டையில் இறங்க, கூட்டத்தைக் கடக்க நுழைந்து பிதுங்கி வெளியே வர முயற்சித்திருக்கிறார். தேசபக்தியோடு காலையிலேயே கர்ம சிரத்தையாக கொடி வேறு அணிந்து வந்திருக்கிறார். கொடி அணிய குண்டூசியை குத்தியிருக்கிறார். நுழைந்து பிதுங்கும்போது அவரின் நெஞ்சிலிருந்த குண்டூசி அவருக்கு முன்பக்கம் இருந்தவரின் முதுகில் பாய்ந்து குத்தி கிழித்திருக்கிறது



அய்யோஎனக் கத்தியவரின் முதுகில் வெள்ளைச் சட்டையில் சிவப்பு கோடொன்று ஒழுகியிருந்தது. அனிச்சையாய் என் முதுகு கூசிச்சிலிர்த்தது. ஆனாலும் கிறுக்கு மனம் அப்படியே பொதினாச் சட்னியை கொஞ்சம் ஒழுகவிட்டா கொடியாய்டும்ல என குறுக்காய் யோசித்தது. அந்த யோசனை அல்பமாய்த் தெரிந்தது. வெள்ளைச்சட்டையிலிருந்து சிவப்புச் சட்டைக்கு மாறிக்கொண்டிருந்தவர் சுதந்திர தினத்தன்று குண்டூசிக் குத்து அதுவும் முதுகில் குத்தப்படுவோம் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார். பழைய கோட்டையில் இறங்கிய தேசபக்தரைப் பிடித்து.... “யோவ் உன் சுதந்திரம் உன் நெஞ்சோடுதான், அடுத்தவங்க முதுகோடு அல்ல என முழங்க(!) வேண்டுமெனத் தோன்றியது. அதற்குள் பேருந்து நத்தக்காடையூரை அடைந்திருந்தது. இந்த அறச்சீற்றம் பல நேரங்களில் தாமதமாகத்தான் வந்து தொலைக்கிறது.

மீண்டும் ஒருமுறை என் முதுகு கூசிச் சிலிர்த்தது. எச்சரிக்கையாக என் அருகில் நின்று என்னை நெருக்கி நொறுக்கிக் கொண்டிருப்பவர்களின் நெஞ்சை மேலோட்டமாய்ப் பார்த்தேன். ஒருவர் கொடி குத்தியிருப்பது தெரிந்தது, அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். உற்றுப் பார்த்தபோது எனக்குள் ஒரு பயம் இருந்தது அவருக்கு தெரிந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. யோசனையோடு இருந்தவர் மெல்ல கொடியைக் கழட்டி சட்டைப் பையில் போட்டுக் கொண்டு, அந்தக் குண்டூசியை என்ன செய்வததென்று யோசித்தபடி முழிக்க ஆரம்பித்தார்.

இப்போது உடம்பின் வேறு பகுதிகள் கூசிச் சிலிர்த்தது. இந்த இடம் சரிவராது என நான் நெளிந்து வளைந்து கூட்டத்திற்குள் புகுந்து பிதுங்கி இரண்டு ஆட்களைத்தாண்டி நின்று கொண்டேன். ஆசுவாசமாய் இருந்தது. இனியொன்னும் பயமில்லை என, பள்ளிக்கூடத்தில் பேசுவது குறித்து அசைபோட ஆரம்பித்தேன். என்னவோ தோன்ற என்னைச் சுற்றிலும் அங்கே நிற்பவர்களின் நெஞ்சைப் பார்க்க ஆரம்பித்தேன். அங்கேயும் ஒருவர் கொடி குத்தியிருந்தார். கொடி குண்டூசியால் வேறு குத்தப்பட்டிருந்தது.

-