இரண்டு நாள் பயணமும் 2600+ சொற்களும்


வலைப்பக்கம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் ஆர்வமாக எழுத, வாசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு பரவலாக எல்லா ஊர்களிலிருந்தும் புதிய புதிய நட்புகளை ஈட்டிவிடுதல் எளிதாய் இருக்கிறது. அதே சமயம் அந்த நட்பு நீடித்தல் என்பது ஒரு அழகிய வரம்தான்.

அமெரிக்காவில் இருக்கும் நண்பர் மணிவாசகம் (அந்தியூரன் பழமைபேசி) ஒவ்வொரு முறை விடுமுறைக்கு ஊருக்கு வரும்போதும், ஈரோடு வருவதையும், எங்களோடு பொழுதுகளைக் கழிப்பதிலும் மிகுந்த மகிழ்வெய்துவதை கடந்த ஐந்து ஆண்டுகளாக நானும், நண்பர் ஆரூரனும் உணர்கிறோம். அவரின் ஒவ்வொரு விடுமுறையும் எங்களுக்கு ஒரு பயணத்தை உருவாக்கித் தருகிறது. அதையொட்டிய நினைவுகள் மனதில் நீந்திக்கொண்டேயிருக்கும்.





அவரோடு என்னை இணைத்து யோசிக்கும் எவரும் கேட்பது நீங்கள் "உறவுக்காரர்களா? பால்யகால நட்பா?" என்பதுதான். உறவுமற்ற, பால்ய நட்புமற்ற இருவர் தமது முப்பதுகளில், மாயவெளியாய்த் தெரியும் இணையத்தில் சந்தித்துக்கொண்டு, அதன்பிறகும் மனதால் மிக நெருக்கமாய் உணரமுடியும் என்பதற்கு நாங்கள் சரியான உதாரணமாய் இருப்போம் என நினைக்கின்றேன்.

இந்த ஆண்டு பழமைபேசி ஊருக்கு வரும் தகவல் கேட்டவுடன், இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்ளவேண்டுமெனத் திட்டமிட்டோம். ஆனால், எங்கு, எப்போது என்பதில் துளியும் தெளிவில்லை. பல யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தது. ஆனைகட்டி, ஆசனூர், ஏலகிரி, குற்றாலம் என நான்கு திசைகளின் மீதும் காதல் இருந்தது. இறுதியாக ஜூலை 17ம் தேதி வியாழன் மாலை அழைத்த பழமைபேசி வெள்ளி காலை 11 மணிக்கு ஈரோட்டில் இருப்பேன், 21ம் தேதி ஞாயிறு பின்னிரவில் கோவையை அடைந்தால் போதும் என்றவுடன் பயணம் குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தோம்.

கடந்த வாரம் தனிப்பட்ட ஒரு பணி காரணமாக குற்றாலம் செல்ல வேண்டியது தள்ளிப்போயிருந்தது. அப்பொழுதே அந்த வேலையோடு கூடுதலாய் ஒருநாள் குற்றாலத்தில் தங்கும் திட்டமிருந்ததால், அது தள்ளிப்போனவுடன் இந்தப் பயணத்தை குற்றாலத்திற்கே அமைக்கலாம் என வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு முடிவெடுத்தோம். தொலைவு மட்டும் மிரட்சியாய் இருந்தது. நான், ஆரூரன், பழமைபேசி, ஜெயபாலன் என நால்வரும் மதியம் 2 மணிக்கு புறப்பட்டோம். கரூர், திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், குற்றாலம் என மனது பாதையைக் கோடுகளாய்த் தீட்டிக்கொண்டது.
 
பொதுவாக வெளியூர் பயணங்கள் குறித்து அவ்வளவாக நட்புகளிடம் சொல்லிக் கொள்வதில்லை. அப்படி சொல்லாததாலேயே அந்தந்த ஊர்களில் சந்திக்க விரும்பியிருந்த சிலரைத் தவறவிட்டதுமுண்டு. இந்த முறை நண்பர்களுடன் குற்றாலம் பயணம் என்பதை ஃபேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலாக இட உள்ளுணர்வு உந்திக் கொண்டேயிருந்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் வழி செல்கிறோம் என்றவுடன் ரத்னவேல் அய்யா அவர்களை அன்பு மற்றும் மரியாதை நிமித்தமாக அழைக்க விரும்பினேன். இதுவரை அவரை நான் மூன்றுமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி சென்றபோது, பின்னிரவுப் பொழுதில் தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்து பெரிதும் உதவியாக இருந்தார். அதோடு அடுத்தநாள் தேடிவந்து உரையாடி பால்கோவா வழங்கி மகிழ்வித்தார். அடுத்ததாக சிவகாசி ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டு அங்கிருந்து இணைய நட்புகளோடு கழுகுமலை சென்றுவிட்டு, இவரைச் சந்திப்பதற்காகவே ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து சிவகாசி திரும்பினோம். கடந்த ஆண்டு கூழாங்கற்கள் கூட்டத்திற்கு நான் மதுரை வந்தபோது, சந்திக்கவேண்டும், பேச்சைக் கேட்கவேண்டும் என்பதற்காகவே அங்கும் வந்திருந்தார்.

வயது ஒரு தடையில்லையென்று நட்பிற்கான அவரின் தேடலையும், வயது வேறுபாடின்றி நட்புகள் அவர் மீது செலுத்தும் அன்பைக் காணும்போது ஒரு அழகிய நீள்கவிதை வாசிப்பதுபோல் தோன்றும். அவரை அழைக்காமல் ஸ்ரீவில்லிப்புத்தூர் தாண்ட மனம் வரவில்லை. திண்டுக்கல் தாண்டும்போது அழைத்தேன்.

குற்றாலம் போறீங்ளா சார்? ஸ்ரீவில்லிப்புத்தூர் எப்ப வந்து சேருவீங்க என்றார். ’ஆஹா மனிதர் ஏற்கனவே ஃபேஸ்புக்ல பார்த்துட்டு தயாராக இருக்கார் போல எனத் தோன்றியது. ”கிருஷ்ணன் கோவில் தாண்டும்போது போன் பண்றேன் சார் என்று சொன்னேன். உடன் வரும் நண்பர்களுக்கு வீட்டுக்குச் சென்று அவரை தொந்தரவு செய்ய விருப்பமில்லை, அதே சமயம் ஆண்டாள் கோவிலைப் பார்த்துச் செல்லலாம் என்பது மட்டும் விருப்பமாக இருந்தது. கிருஷ்ணன் கோவில் தாண்டியவுடன் நியாபகமாக அவரை அழைத்தேன். அழைப்புக் காத்திருந்தவர்போல்கிருஷ்ணங்கோயில் வந்தாச்சா!?” என்றார். கடந்துவிட்டோம் எனச்சொல்ல வீட்டுக்கு வழி சொன்னார். நான் தடுமாறியபடி நண்பரிடம் போன் கொடுக்க அவரும் மறுக்க முடியாமல் வருகிறேன் என ஒப்புக்கொண்டார். அவர் சொன்ன இடத்தில் நாங்கள் காத்திருக்க, தேடியபடி வந்து சேர்ந்தார். வீட்டிற்குச் சென்றோம்



சுடச்சுட இனிப்பும் காரமும் பரிமாறினார்கள். பயணக்களைப்பில் கிடைக்கும் சிற்றுண்டியின் சுவைக்கு நிகரேது. அவரது மனைவி உமாகாந்தி அம்மா இருசக்கர வாகனம் ஓட்டுவது குறித்தும், அதன் வேகம் குறித்து வெட்கம் பூக்க விவரித்தார். தம்முடைய 50 ஆண்டுகால தீப்பெட்டி ஆபிஸ் வாழ்க்கை குறித்துப் பேசி, இணைய நட்புகள் குறித்த நினைவுகளைக் கிளறி, மகிழ்ந்து மனமின்றிப் புறப்பட்டோம்.

செங்கோட்டை பார்டர் கடையில் சாப்பிட இடம் பிடித்தோம். சாப்பிட அலைமோதும் அவ்வளவு கூட்டத்தை வேறெங்கும் கண்டதில்லை. மசால்வடை அளவிற்கு பரோட்டா வைத்தார்கள். அவர்களாகவே இரண்டு கோழித்துண்டையும் வைத்துவிட்டார்கள். குழம்பு இனிப்பாய் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கல்லாவில் இருப்பவருக்கும், சாப்பிட்ட ஒரு குழுவிற்கும் இடையே சாப்பிட்ட ஆட்களின் எண்ணிக்கை குறித்து கலவரம் வரும் அளவிற்கு வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. சாப்பிட்டு முடித்தபின் காசு கொடுக்கும்போது 2 முட்டை அதிகம் கணக்குச் சொன்னார்கள். விளக்க வேண்டியதாக இருந்தது. அடுத்த நாள் காலை கோமதி விலாஸ் மெஸ்ஸில் சாப்பிடும்போது இரண்டு இட்லி அதிகம் கணக்குச் சொன்னார்கள். மாலை பார்டர் கடையில் மீண்டும் சாப்பிட்டபோதும் இரண்டு பரோட்டா கூடுதலாய்க் கணக்கு சொன்னார்கள். இது வெறும் கவனக்குறைவா அல்லது ஒருவித யுக்தியா எனப் புரியவில்லை.

நீள் பயணத்தின் பின் தங்கும் அறைகுறித்து நாங்களே ஏற்படுத்திக்கொண்ட குழப்பம் என சிறிது நேரம் அல்லாட வேண்டியிருந்தது. நிறையக் களைத்திருந்தோம். அறைக்கு வந்தவுடன் ஒரு ஐந்து நிமிடம் படுத்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்ததை யோசிக்கலாமென படுக்கையில் விழுந்தபோது மணி பத்தைத் தாண்டியிருந்தது. வெளியில் இனம்புரியா சுகம் தரும் காற்று வீசிக்கொண்டிருந்தது. காற்றின் தழுவல் மிகப்பெரிய ஆறுதலாய் இருந்தது.

பவானி, ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் குழுக்களாக குற்றாலம் செல்வது வெகு பிரசித்தம். வருடம் முழுதும் சீட்டு போட்டு ஆடி மாதம் வேன் எடுத்துக்கொண்டு ஏழெட்டு நாட்கள் சமையல்காரரோடு சென்று சாப்பாடு, குளியல் என்பதை மாற்றி மாற்றி செய்யும் குழுவில் நண்பர் செந்திலின் அழைப்பின்பேரில் இரண்டு மூன்று முறை போய் வந்த அனுபவம் உண்டு. குறைந்தபட்சம் குற்றாலம் வந்து 15 ஆண்டுகள் இருக்கும் எனத் தோன்றியது. நகரம் குறித்து, அருவிகள் குறித்து எதுவும் நினைவில் இல்லை. பழைய குற்றாலமும், கேரளாவில் இருக்கும் பாலருவியும் மட்டும் நினைவில் இருந்தன.

நண்பர்களோடு அரட்டை நீடித்தது. வந்த களைப்பிற்கு உறக்கமா, அருவிக்குளியலா என்ற எண்ணம் வந்தபோது, என்னவானாலும் சரி குளியல்தான் என முடிவுக்கு வந்தோம். பேரருவியை நெருங்கும்போது இரவு 1 மணி இருக்கும். சாரல் காற்றும், அருவியின் பேரிறைச்சலும் அளவுக்கதிகமான குளிரைப் புகுத்தியது. குளித்துக் கொண்டிருப்போரைக் காணும்போது இந்தக்குளிரில் எப்படிக் குளிக்க முடிகிறது என ஆச்சரியமாக இருந்தது.

தண்ணீரில் கால் வைக்கவே உயிரை உலுக்கியது. அப்படியே திரும்பி ஓடிவிடலாமா என்பது போல் குளிர். 1999 குற்றாலத்திற்கு பிறகு எங்கேனும் அருவியில் குளித்தோமா என நினைவை மீட்டிப்பார்த்தேன். எட்டிப்பிடிக்கும் தொலைவில் ஏதுமில்லை. உடன் வந்த நண்பர்களில் ஜெயபாலன் முதன்முதலாக களம் புகுந்தார். பலமுறை அவர் குற்றாலம் வந்திருப்பதாகச் சொன்னதால் சிங்கம் இதெல்லாம் சமாளிக்கும்போல என நானே நினைத்துக்கொண்டேன். பழமைபேசியும், ஆரூரனும் இன்னும் எட்ட தள்ளி நின்று கொண்டார்கள். ஆரூரன் கார் சாவியை நான் வெச்சிருக்கேன் முதல்ல நீங்க குளிச்சிட்டு வாங்க என தப்பித்துக்கொண்டதாய்த் தோன்றியது.

ஊஊஊஊஊஊஊஊ என சப்தத்தோடு ஓடி அங்கே குளித்துக் கொண்டிருந்த கூட்டத்தில் முட்டி மோதிய ஒரு ஆளைப் பார்த்தபோது அயர்ச்சியாகிப்போனது. நம்ம உடம்பு பிஞ்சு உடம்பால்ல இருக்கு எனத்தோன்றியது. ஒவ்வொரு அடியாய் மெல்ல நகர, சாரல் அண்மித்தது. பழமை அங்கேயே நின்று கொண்டிருந்தார். அருவியில் ஊஊஊஊஊஊ ஊஊஊஊஊ என கத்திக்கொண்டிருந்த இருவரை சரியாக குச்சியில் தட்டி வெளியேற்றிக்கொண்டிருந்தார் ஒரு காவலர்.



சிங்கம் உள்ளிருந்து கை ஆட்டியது. திரும்பி ஓடிவிட்டால் என்ன என மனசு ஏங்கியது. இதற்குத்தானே இத்தனை தொலைவு பயணப்பட்டாய் என புத்தி விரட்டியது. சரி நனைந்து விடுவோம் என நெருங்க, கூட்டம் முழுதும் ஆக்கிரமித்திருக்க, கொஞ்சமே கொஞ்சமென அருவித்தண்ணீர் நனைத்தது. வாழ்நாளில் இதுவரை உணர்ந்திடாக் குளிரொன்று பிடித்து உலுக்கியது. சில நொடிகளில் நடுக்கத்தோடு வெளியேற உடல் தொடர்ந்து வெட்கத்தைவிட்டு நடுங்கிக்கொண்டேயிருந்தது. தாடைகள் தடதடத்தன. எல்லோரும் திடமாய்க் குளிக்க நான் மட்டும் நடுங்குகிறேன் என்றால், உடல் அந்த அளவுக்கு பலவீனமாக இருக்கின்றதா என சந்தேகம் வந்தது. அருவிக்கு வரும்போது இடது கை விரலிலிருந்து தோள்பட்டை வரை வலி குத்தி எடுத்தது. ”ஏம்பாஸ் இப்படி வலிச்சா ஹார்ட் அட்டாக் வருமா?” என நண்பர்களை கலவரப்படுத்தியதை நினைத்து புன்னகை வந்தது. புன்னகையும் நடுங்கிக் கொண்டேயிருந்தது. லாவகமாக சிங்கம் அருவியின் உள்ளே அழைத்து(இழுத்து)ச் சென்றார்.

பூரணமாய் நனைந்தேன். அருவியில் கரைந்தேன். நீர் மோதி, அணைத்து, தழுவி அதன் வேகத்தோடும் அழுத்தத்தோடும் சென்று கொண்டேயிருந்தது. குளிர் காணாமல் போனது, உடலின் ஒட்டுமொத்த செல்களும் நீரை கதகதப்பாய் தகவமைத்துக் கொண்டன. இன்னும் இன்னும் என தண்ணீருக்குள் புகுந்துகொள்ளும் வேட்கை இருந்தது. தண்ணீரின் வேகத்திற்கும், குளிர்ச்சிக்கும், பிரியத்திற்கும் மனதும், உடலும் முயங்கியது. சொல்லொணாச் சுகம் ஆட்கொண்டது. சொட்டுச் சொட்டாய் களைப்பு நீங்கியது. நிமிடங்கள் கரைந்ததன. கரையும் நிமிடங்களை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டுமென பேராசை வந்தது. வெளியேறி காற்றைத் தழுவதும், உட்புகுந்து நீரில் கரைவதுமென அதியுன்னத மனநிலை வாய்த்தது.

நண்பர்கள் போதுமென காற்றில் காய்ந்து கொண்டிருக்க நானும் அரை மனதாய் வெளியேறினேன். மேலாடை உதறி உடலைத் துவட்ட அதுவொரு சுகமாய் உணர்ந்தது. பிரமிப்பாய் இருந்த அருவி பெரும் பிரியத்தின் அடையாளமாய் மாறிப்போனது.

சூடானே தேநீரோடு குளியலின் பரவசத்தை பேசிபேசிப் கதகதப்படைந்தோம். ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என வீதிகளில் அலைந்தோம். அறையை அடைந்து கட்டிலில் வீழ்ந்தபோது மணி இரவு 2.30. போகும்போது கையில் குத்தியெடுத்த வலியின் வாசனைகூட என்னிடம் இருப்பதாய் தெரியவில்லை.

நீண்ட பயணத்தின் அலுப்பும், அருவிக்குளியலின் பரவசமும் சேர்ந்ததில் அடுத்த ஆறரை மணி நேரம் சொட்டு விழிப்பின்றி உறக்கத்தில் கரைந்திருந்தேன்.

மிகச் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்றாலும் எப்படியும் என் வாழ்நாளில் பத்துக்கும் மேற்பட்ட அருவிகளைப் பார்த்திருப்பேன். அதில் சிலவற்றில் மட்டுமே நனையும் பேறு பெற்றிருக்கலாம். இதுவரை நான் நனைந்த அருவிகளில் மிகப் பிடித்தது எதுவெனக் கேட்டால் பாலருவி என்றே சொல்வேன். அதற்கொரு காரணமும் உண்டு.

1999ல் குற்றாலம் வந்திருந்தபோது, சுத்தமாக சாரல் இல்லை. நான்கைந்து நாட்கள் இருந்தாலும் சாரலுக்கான அறிகுறியே இல்லை. நண்பர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டதென்பதால் சாரல் இல்லாத சமயமெனினும் தவிர்க்கவியலாமல் வந்ததன் பலன் கர்ண கொடூரமாய் இருந்தது. பேரருவி, ஐந்தருவி என எல்லாமே காய்ந்து கிடந்தன. பழைய குற்றால அருவியில் மட்டும் சிறிது தண்ணீர் வருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றபோது, திருவிழாக்கூட்டம் போல் ஒட்டமொத்தக் கூட்டமும் அங்கேதான் மொய்த்தது. நான்கைந்து மிகச்சிறிய நூல் கயிறுகளைத் தொங்க விட்டதுபோல் கோடுகளாக மட்டும் வடிந்து கொண்டிருந்தது அருவி. நின்று உடல் நனைப்பதென்பது ஆகாத காரியமென்பதால் பலர் கையில் டப்பாக்களோடு எட்டியெட்டிப் பிடித்து தலையில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் பாலருவிக்குச் செல்வதனெ முடிவானது. அது வித்தியாசமான அனுபவமும் மறக்கமுடியாத அனுபவமும் கூட. குற்றாலம் ஒட்டுமொத்தமாய் காய்ந்து கொண்டிருக்க பாலருவி மட்டும் கருணையோடு சுரந்து கொண்டிருந்தது.

குற்றாலத்தில் தண்ணீர் இல்லாமல் காய்ந்து, வறண்டு, வெறுத்துப்போய், பாலருவியில் பொங்கும் தண்ணீர் பார்த்து மனது சிலிர்த்ததில், நண்பர்களில் சிலருக்கு உள்ளுக்குள் கூடுதலாய்தண்ணீர் பாய்ந்தது. அருவியில் மிகமிக மிதமான மென்மையான அழுத்தத்தில் தண்ணீர் வீழ்ந்து கொண்டிருந்தது. உள்ளுக்குள் தண்ணீர் பாய்ந்ததில் உற்சாகத்தின் உச்சத்திற்குப் போன ஒரு நண்பர் நீர் வீழ்ச்சியில் நீரின் அருகே ஈரமாய் பாசிபிடித்திருந்த பாறையைப் பிடித்து மேலே ஏற ஆரம்பித்தார். நதி மூலம் தேடும் முசுவு இருந்தது. நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் பத்துப் பதினைந்து அடிகளுக்கு மேல் ஏறியிருப்பார். ஒரு சிறு வழுக்கலில் கையும் காலும் கைவிட சறுக்கிய வேகத்தில் ஒரு பாறைப் புடைப்பில் தாடை மாட்டிக்கொண்டு தொங்கி, பின் தண்ணீருக்குள் விழுந்தார். கழுத்திற்கும் தாடைக்கும் இடையே ஆட்காட்டி விரலின் பாதி நீளத்திற்கு பிளந்துபோயிருந்தது. அதற்குச் சற்றும் அசராத அந்த நண்பர் அதன்பின்னரும் குளிக்கக் குளிக்க உள்ளுக்குள் இருந்ததண்ணீரின் சாயம் வெளுக்க வெளுக்க, வலி கூடிவிட அடித்துப் பிடித்து குற்றாலம் திரும்பி, பின் தென்காசி சென்று தையல் போடப்பட்டது. அதோடு காயத்தில் தண்ணீர் படக்கூடாதென குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆர்வமிகுதியால் ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தாலும், அருவிகள் காய்ந்திருந்ததில் மனம் வறண்டு போயிருந்த எங்களுக்கு அப்போது பாலருவி வயிற்றில் பால் வார்த்ததுபோலேவே தோன்றியது.

ஆழ்ந்த நித்திரைச் சுகத்திலிருந்து உற்சாகமாய் எழும்போதே மென் சாரலும் காற்றும் அந்த நாளுக்குள் எங்களை உற்சாகமாக வர்வேற்றது. சாப்பிடலாம் என ஊருக்குள் சென்றவர்களை வாகனமும் கூட்டமும் மிரட்டியது. சனி, ஞாயிறென்பதால் நெரிசல். பேரருவிப் பக்கம் போக திராணி போதாதென, பாலருவிக்குச் செல்லலாம் எனப் புறப்பட்டோம். பாலருவி கேரளத்தில் ஆரியங்காவு எனும் இடத்தில் இருக்கிறது. சிரமமான தொலைவொன்றுமில்லை. அரை மணி நேரப் பயணம்தான். செங்கோட்டை புலியறை ஆகிய ஊர்களைக் கடக்க, வனப்பாதை தொடங்குகிறது. சாரல் திசையெங்கும் தன் பார்வையை பாய்ச்சிக்கொண்டிருந்தது. ஆரியங்காவு வரவேற்கிறது. இதற்கு முந்தைய முறை வந்தபோது ஐயப்பன் கோவிலுக்கு வந்தது நினைவுக்கு வந்தது.

இடது பக்கம் பாலருவிக்குச் செல்லும் பாதை பிரிகிறது. வனத்திற்குள் புகும் உணர்வுக்குள் மூழ்குகிறோம். வனப்பாதையின் இருமருங்கிலும் பசுமையின் அடர்த்தி சிதையாமல் வைத்திருக்கும் வனத்துறையை பாராட்டியே தீரவேண்டும். வனத்துறை ஆட்கள் தொடர்ந்து நடமாடுகிறார்கள். சாப்பிட்டுவிட்டு கீழே போட்டுச் செல்லும் மக்களை மென்மையான அழுத்தத்தோடு அறிவுறுத்துகிறார்கள். வாகனங்களை நிறுத்த பொறுப்பாக இடம் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். ஆண்களை அருவிக்கும், பெண்களை ஓடைப்பக்கமும் பிரித்து அனுப்புகிறார்கள். உயரமான பகுதியில் இருந்து அருவியில் குளிப்போரை தொடர்ந்து கவனிக்கிறார்கள்.

குற்றால அருவிகளில் போன்று தள்ளுமுள்ளு இல்லை. அதைவிட மிக மிக முக்கியம் இங்கு ஊஊஊஊஊ, ஈஈஈஈஈஈ போன்ற ஊளைகள் இல்லை. நம்ம ஊர் ஆட்களேயெனினும் குற்றாலத்தில் எழுப்பும் குரலை ஏனோ கேரளத்தின் பாலருவிகளில் எழுப்புவதில்லை.



அருவி பெரும் ஆற்றலோடு விழுந்து கொண்டிருக்கிறது. சுற்றிலும் ஒரு ஒழுங்கில் கிடைக்கும் பாறைகளுக்கு மத்தியில் ஒரு நீச்சல் குளத்திற்கு ஒப்பான வெளி இருக்கின்றது. தனது இரு ஓரங்களில் மட்டுமே நம்மை மெல்லச் சொருகிக்கொள்ள அனுமதிக்கிறது அருவி. தன் மையத்திற்குள் அனுமதிக்க நிர்தாட்சன்யமாய் மறுக்கிறது. அதன் ஆற்றல் மிகு வீழ்ச்சியும் அது கொண்டுவரும் அழுத்தமும், கனமும் மெல்ல மிரட்டுகிறது.

மெல்ல நம்மை நுழைத்து ஓரிரு நிமிடப்பொழுதுகள் தாக்குப் பிடித்தலே பேரின்பம். நீரின் அடியும் அது தரும் இனிய வதையும் சொல்லொணாச் சுகம். அப்படியே சரிந்து தண்ணீருக்குள் விழுந்து, முங்கி நீச்சலடித்து, ஒரு பாறையைப் பிடித்து ஏறி அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

துணிவிருந்தால் கழுத்து ஒடியும் அளவிற்கு தலையை பின்பக்கமாய்ச் சாய்ந்து வெள்ளை நுரையாய் வீழும் தண்ணீரின் உயரத்தையும், அதற்குமேல் தெரியும் நீலவானத்தையும் பார்க்கலாம். துணிவையும் தாண்டி ஒரு மிரட்சியை நொடிப்பொழுதேனும் உணர்வோம். அருவிக்கு மிக அருகில் நெருங்கி அதன் ஆற்றலைத் தாங்குவதாய் நினைக்கும் நொடிப்பொழுதில் உன்னை எதிர்த்து நிற்கிறேன் பார் என அபத்தமாகவும் நினைத்துக் கொள்ளலாம். ஆற்றலோடு பொங்கி விழும் தண்ணீருக்குள் மீண்டும் மோதலாம், போதுமென நினைக்கும் கணத்தில், சில அடிகள் சரிந்து விழுந்து, சடசடவெனத் தெறிக்கும் சாரலில் கரையலாம்.

திட்டமிட்ட சந்திப்புகளைவிட, எதிர்பாராமல், திட்டமிடாமல், முன்முடிவுகளற்று நிகழும் சந்திப்புகள் தரும் சுவை அலாதியானது. குற்றாலம் பயணம் என நிலைத்தகவல் போட்டதில் சில நண்பர்களை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. வெள்ளிக்கிழமை மாலை ஃபேஸ்புக் இன்பாக்ஸில் கவிஞர். கலாப்ரியா குற்றாலத்தில் சாரல் அருமை என்றும், எதும் உதவி தேவைப்படின் அழையுங்கள் என கைபேசி எண்ணையும் அனுப்பியிருந்தார்.

சனிக்கிழமை காலையிலேயே அண்ணன் மைக்கேல் அமல்ராஜ் அழைத்தார். மாலையில் சந்திக்க அறைக்கு வந்தார். அவருடன் சேர்ந்து ஐந்தருவி சாலையில் கவிஞர். கலாப்ரியா
தங்கியிருக்கும் விடுதியைத் தேடி மாலை சென்றோம். அவர்கள் இருவரும் அக்கம்பக்கம் என்றாலும் அன்றுதான் சந்தித்துக்கொள்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியம். இப்படி ஒவ்வொருவராகத் தொடர்பு கொள்ளும்போதும், சந்திக்கும் போதும்தான் அவர்கள் குற்றாலத்தின் மடியிலேயே இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

விடுதியில் பொதுவானதொரு உரையாடல் காபி சுவையோடு தொடங்கியது. கிட்டத்தட்ட ஒருவருக்கொருவர் புதிதென்பதால் வார்த்தைகள் தேங்கித் தேங்கி நின்றன. அந்த இடமும் சப்தமாக இருந்த காரணத்தால் வெளியில் காற்றோட்டமாகப் பேசலாமெ என்றபோது அறைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அறைக்குச் சென்றால் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் .இராசேந்திரனும், ஃபேஸ்புக் நண்பர் திரு. ஸ்ரீனிவாசனும் இருந்தார்கள்.

ஏற்கனவே மின்தமிழ் கூகுள் குழுமத்தில் பழமைபேசியும், .ரா அவர்களும் நிறைய உரையாடியிருப்பதால் அவர்களுக்கு ஒருவரையொருவர் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி.

எதைப் பேசுவதென்ற திட்டமில்லாதபோது திடீர் சந்திப்பு என்பதால், மிக எளிதாக ஃபேஸ்புக் குறித்த பேச்சு அதன்போக்கில் ஆரம்பித்தது. மெல்ல மெல்ல . ரா கேள்விகளை விதைக்க ஆரம்பித்தார். பந்துபோல் விழும் கேள்விகளை முதலில் அடித்து பறக்கவிட வேண்டுமென்றே எனக்குத் தோன்றியது. கேள்விகளில் இருந்த தேடலும், தீர்க்கமும் புரிய ஆரம்பித்த பிறகு நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொருவராய் உரையாடலுக்குள் நுழைய நுழைய, சூழல் உரையாடலை இன்னும் இலகுவாக்கியது.



ஃபேஸ்புக் லைக்குகள், கமெண்ட்களில் தொடங்கி, திருக்குறள், பாரதியார், ஒரு படைப்பை எழுதுவதின் நோக்கம், சிலபல எழுத்தாளர்கள் என எங்கெங்கோ நகர்ந்து, நடனமாடி, சிலிர்த்து, மண்டியிட்டு, குழைந்து என, பல வடிவங்களில் அந்த உரையாடல் அமைந்தது.

மென் குரலில், மென் அழுத்தமாய் உதிரும் கவிஞர். கலாப்ரியாவின் உரையாடற் சொற்களும் கூட கவிதையின் மென்மையையும் அழுத்தத்தையும் தனக்குள் கொண்டுள்ளன.

பொதுவாகவே வாதம் வேறு, விவாதம் வேறு. விவாதங்கள் தான் நீண்டு செல்லும் பாதையெங்கும், நமக்குள் இருக்கும் உலகத்தின் எல்லைகளை விரிவு படுத்துகிறது.

அந்த மாலைப் பொழுது அழகியதொரு பரிசென்றே சொல்ல வேண்டும்.


வெள்ளிக்கிழமை இரவு 1 மணிக்கு அருவிக் குளியலில் எட்டிய உச்ச சுகம் இன்னொரு முறையும் வேண்டுமெனத் தோன்றியது, சனிக்கிழமை காலை பாலருவி, மாலை கவிஞர். கலாப்பிரியா சந்திப்பு, இரவில் நெடுநேரம் 3-Iron சினிமாவில் நாயகனும், நாயகியும் ஏன் பேசிக்கொள்வதில்லை என சிங்கம் எழுப்பிய கேள்விகள் என நகர்ந்து கொண்டிருந்த தினத்தை ஐந்தருவியில் குளித்து நிறைவு செய்வோம் என முடிவெடுத்தோம். முந்தைய இரவு போலவே 1 மணியளவில் ஐந்தருவியை நெருங்கினோம். கூட்டமும், கூட்டத்தின் ஊளையும், குடிமகன்களின் ஆட்டமும் என ஏதோ ஒரு மாதிரி நனைந்து திரும்பினோம். இதற்குமுன் குளித்த இரண்டு அருவிகளின் சுகத்தையும், அப்போதைய சூழல் அழித்து ஒழித்துவிட்டதாக மனதுக்குத் தோன்றியது. சனி இரவும் அதேபோல் 2 மணிக்கு ஆரம்பித்து ஆழ்ந்த உறக்கம்.

மதியத்திற்குமேல் ஊர் திரும்பலாம் என்ற திட்டத்தில் அதற்கு முன் மீண்டும் ஒரு தீர்க்கமான குளியல் வேண்டுமென விரும்பிய கணத்தில் அண்ணன் மாஸ்டர் சிவா அழைத்துதயாரா இருக்கீங்ளா!?” எனக் கேட்டார்.

2011 டிசம்பரில் இருந்து மாஸ்டர் சிவாவும் நானும் ஃபேஸ்புக்கில் நட்பில் இருக்கிறோம் என ஃபேஸ்புக் தகவல் சொல்கிறது. முகப்பில் ரமணர் படம் இருக்கும். இரண்டு மூன்று வரிகளில் நறுக்குத் தெறித்தார்போல் வாழ்க்கையின் சூட்சுமங்களை நிலைத்தகவலாய் இடுவார். பொதுவாக ஐந்து பத்து லைக்குகளுக்குள் இருக்கும். எப்போதும் அதில் என்னுடையது ஒன்றாக இருக்கும். அவர் குறித்து வேறெதுவும் தெரியாது. சிலரிடம் அவர் பக்கத்தைப் பாருங்கள் என தனிப்பட்ட முறையில் பரிந்துரைத்ததுண்டு. இவ்வளவுதான் எங்கள் நட்பு. ஒரு வருடம் இருக்கும் மாஸ்டர் சிவாவிடம் இருந்துஒருமுறை குற்றாலம் வாங்க என்ற அழைப்பு வந்தது. அப்பொழுதெல்லாம் குற்றாலம் குறித்து நினைத்தே பார்த்ததில்லை.

வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பும்போது குற்றாலம் வருகிறோம் என தகவல் தெரிவித்தேன். கைபேசி எண் பெற்று அழைத்தார். அங்கு சென்றபின் எங்களால் நிகழ்ந்த சிறிய குழப்பங்களுக்குப் பிறகு, தங்கும் இடம் குறித்து உதவி கேட்டு 10 மணி சுமாருக்கு அழைத்து அவருடைய தூக்கத்தைக் கெடுத்தேன். அந்த நேரத்திலும் பேருதவி புரிந்தார். அடுத்த நாள் காலையில் சாலையில் ஒரு அரை நிமிடம் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. மதியம் குண்டாறு அணைக்கு அருகில் ஒரு அருவிக்குப் போகலாம் என்றார். தவிர்க்க இயலாத காரணத்தால் அது நிறைவேறவில்லை. நாங்கள் பாலருவிக்கு போய் வந்தோம். இரவு ஐந்தருவில் குளித்ததை சமன் செய்ய நல்ல குளியல் வேண்டும் என நினைத்த கணத்தில்தான் மாஸ்டர் சிவா அழைத்துதயாரா இருக்கீங்ளா!” எனக் கேட்டார்.

அவர் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் சந்தித்தோம். அதுவரை அவர் குறித்து எதுவும் தெரியாது. அங்கிருந்த அவரின் நண்பர் வாயிலாக அவர் குறித்து அறிய வந்த தகவல்கள் ஆச்சரியத்தை அள்ளிக்கொண்டின. மாஸ்டர் சிவா ஆணழகன் திருநெல்வேலியாக இருந்தவர். சிலம்பம் மற்றும் வர்மத்தில் கரை கண்டவர். தியானம் யோகா பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அழகியதொரு கட்டிடம் எழுப்பி வருகிறார்கள். அவர் எழுதும் வரிகளில் இருக்கும் அழுத்தமும், தத்துவமும், நிதர்சனமும் மெல்லப் புரிய ஆரம்பித்தன.

அவருடைய சகோதரர் மகனை எங்களோடு அனுப்பி குண்டாறு அணைக்கு பின்னால் இருக்கும் அருவிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அணையை அடைந்து அங்கிருக்கும் அருவிக்குச் செல்ல ஜீப்பில் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள். புறப்படும் நேரத்தில் மாஸ்டர் சிவாவும் எங்களோடு வந்து சேர்ந்துகொண்டார். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் கற்தடத்தில் ஜீப்பில் ஒரு சாகசப் பயணம் மேற்கொண்டோம். அந்தப் பாதையில் முப்பந்தைந்து ஜீப்புகள் ஓடுகின்றனவாம். மக்களும் சாரைசாரையாகச் செல்கின்றனர். ஜீப் ஓட்டுனர்களிடையே வழிவிடும்போது இருக்கும் புரிதலை ஒரு ஆவணப்படமே எடுக்கலாம்.



தனியார் எஸ்டேட் வழியே ஓடும் ஓடையில் சுவர் கட்டி அருவியாக்கியிருக்கிறார்கள். உயரம் குறைவென்றாலும் கனமாக விழும் நீர் தரும் சுகம் சற்றே வித்தியாசமாகவும் மிகவும் பிடித்ததாகவும் அமைந்திருந்தது. மெல்லத் தூறும் சாரலும், அடர்ந்த வனத்தின் பசுமையும், கனமாய் விழும் நீருமென பிரிய மனமில்லாமல் மீண்டும் மீண்டும் தாய்மடி அடைவதுபோல் தண்ணீருக்குள் புகுந்துகொள்ளப் பிரியமாய் இருந்தது. ஜாதிக்காய், மிளகு என எஸ்டேட் விரிந்து கிடக்கிறது. அடர்வனத்திற்குள் இருக்கும் அழகு மனதை இன்னும் இன்னும் என இளமையாக்குகிறது. ஒரு வனத்திற்குள் அதன் பரிசுத்தமான முலைப்பாலாய் ஓடும், அதன் நீரில் முங்கியெழுதலின் சுகம் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிமிடங்கள் கரைந்து மணியாக நிரம்புகிறது. வெளியேற மனமேயில்லை. நிதர்சனம் பிடித்திழுக்கிறது. பேரருவி, பாலருவிக்கு நிகரான ஒரு குளியலின் திருப்தியை உணர்கிறோம். இரண்டு நாள் பயணத்தில் எங்களைப் புதுப்பித்துக் கொண்டவர்களாய், உற்சாகப்பூக்களை மனமெங்கும் சூடிக்கொண்டர்களாய், தேகமெங்கும் சுத்தமான நீரின், காற்றின் தன்மையை அப்பிக்கொண்டவர்களாய், அருவியிலிருந்து வெளியேறி மெல்ல உலர்ந்து மலையைவிட்டு இறங்க ஆரம்பிக்கிறோம்.

ஃபேஸ்புக்கில் சொற்களால் சந்தித்துக்கொண்ட ஒருவருக்காக தங்கும் இடம் ஏற்பாடு செய்துகொடுத்து, தன் நாளை ஒதுக்கி தம் மக்களோடு உடன் வந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுத்து உடனிருந்து கவனித்துக்கொண்ட அண்ணன் மாஸ்டர் சிவா அவர்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

இணையத்தில் எழுதத் தொடங்கிய பிறகு தொடர்புகளில் வந்து செல்வோரின் எண்ணிக்கை நிறைய உண்டு. அப்படி வந்து செல்வோரில் நட்பாய் மாறி நிலைத்துப்போவோரும் ஓரளவு இருப்பதுண்டு. நட்பாய் நிலைப்பதற்கு உரையாடல் கூட அவசியமிருப்பதில்லை. தங்கள் எழுத்துமூலமோ அல்லது நாம் எழுதுவதற்கு பின்னூட்டம் இடுவதன்மூலமோ கூட இணக்கமான ஒரு நட்பு மனோபாவத்தை ஏற்படுத்தி ஆண்டுக்கணக்கில் எடுத்துச் செல்லமுடியும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நட்புதான் அண்ணன் மைக்கேல் அமல்ராஜ். தொடர்ந்து தனது பின்னூட்டங்கள் மூலம் அருகில் இருப்பது போன்ற உணர்வைத் தருபவர். சமீபத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு அனுப்புவதற்காக மட்டுமே முகவரி கேட்டு உரையாடினார். கணவன் மனைவியாக ஃபேஸ்புக் நட்பில் இருக்கும் வெகு சில தம்பதிகளில் மைக்கேல் அமல்ராஜும் கிறிஸ்டினாவும் ஒருவர்

குற்றாலம் வருகிறோம் என்ற நிலைத்தகவலை பார்த்துவிட்டு சனிக்கிழமை காலையிலையே அழைத்தார். பின் மதியம் அழைத்தார். பின் மாலை அழைத்தார். தங்கியிருந்த இடத்திற்கே தேடி வந்தார். விவசாயம் செய்து வருபவர் என்பதை முன்பே அறிவேன். சந்தித்தபோது நண்பர் ஒருவரின் சுற்றுலா விடுதியை இந்த சாரல் பருவத்திற்கு பராமறித்து வருவதாகத் தெரிவித்தார்.

கவிஞர் கலாப்பிரியாவைச் சந்திக்கச் சென்றபோது, நானும் அவரும் அருகருகில் இருந்தாலும் இதுவரைச் சந்திக்கவில்லை, நானும் சந்திக்க வருகிறேன் என அவர் தங்கியிருந்த விடுதிக்கு வழிகாட்டி எங்களோடு சந்தித்தார்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் நாங்கள் அங்கிருந்து ஊருக்குப் புறப்படுவோம் என்பதை அறிந்திருந்ததால், காலையில் அழைத்தார். நீங்கள் செல்லும் வழிக்கு அருகில்தான் எங்கள் ஊர் உள்ளது, மதிய உணவிற்கு வரவேண்டும் என அழைத்தார். ஒரு விடுமுறை தினத்தில் நமக்காக சமைத்து சிரமப்படவேண்டாமே என நண்பர்கள் தயங்கினர். அவரின் அழுத்தமும் நண்பர்களின் தயக்கமும் என சிறிய போராட்டத்திற்குப் பிறகு சரி வருகிறோம் என ஒப்புக்கொண்டோம். மீண்டும் அழைத்தவர் மட்டனா சிக்கனா என்றார். நான் வெகு எளிதாக உங்களுக்கு எது ஈஸியோ அதைச் செய்யுங்கள் என்றேன்.

அவரின் வீடு கடையநல்லூரிலிருந்து சேந்தமரம் செல்லும் வழியில் உள்ளது. எங்கள் வருகைக்காக மதியம் 1 மணியளவில் கடையநல்லூரில் எங்கள் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்துள்ளார். நாங்கள் குற்றாலத்தில் புறப்படவே 2 மணிக்கு மேலாகிவிட, அவர் அடுத்தடுத்து போன் அடிக்க, நாங்கள் இதோ வந்துட்டோம் எனச் சொல்லிச்சொல்லி 2.45 மணிக்கு நாங்கள் கடையநல்லூரை அடையும் போது அவர் பசியில் மயங்கிவிடும் நிலையில் இருந்தார்.

அவரோடு இணைந்து அவரது கிராமத்து வீட்டுக்குச் சென்றோம். திருமதி. கிறிஸ்டினா அவர்களும் பசியோடு காத்திருந்தார்கள். இரண்டு நாட்களாக கடைகளில் தின்று நொந்து போயிருந்த எங்களின் பசிக்கு அந்த சோறும் கறியும் அமிர்தமாய் இருந்தன. மூச்சுமுட்ட தின்று, அவை செரிக்க நிறைய உரையாடி, விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம். திரும்பும் வழியெங்கும் மிகமிக பிடித்துப் போன, அந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்துட்டு வந்திருக்கலாம் என்று மாப்பு பழமைபேசி புலம்பித் தீர்த்துவிட்டார்.



சில ஆண்டுகள் வரை குற்றாலச்சாரல் அவர்கள் ஊர் வரைக்கும் இருந்ததுண்டாம். ஆனால் தற்சமயம் வெறும் வறண்ட காற்று மட்டும் கடும் வேகத்தில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படியான காற்றை நான் இதுவரை எங்கும் கண்டதில்லையென்றே சொல்ல வேண்டும். அவர்களில் ஊருக்கு அருகே வாராணாச்சி மலை என்ற அழகியதொரு மலை இருக்கின்றது. பல்லவர் காலத்தில் மலையைக் குடைந்து சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், மகாவிஷ்ணு, பிரம்மா போன்ற தெய்வங்கள் குகையிலேயே வடிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் அந்தக் கோவில் தற்சமயம் உள்ளதுமலையின் மேல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மாதாகோவில் ஒன்று இருக்கிறது

திரும்பும் வழியில் அமல்ராஜ் அண்ணன்எங்க வீட்ட இப்படி நாலஞ்சு பேருக்கு சமைச்சுப் பழக்கமில்ல. சமைச்சது எப்படி இருக்குமோனு புலம்பினாங்க. நாலு பேர் வர்றாங்க எப்படியும் நல்லாருக்கும்னு சொல்லிடுவாங்க கவலைப்படாதேனு சொல்லியிருந்தேன் என்றார். அப்படியேதுமின்றி மிகச் சுவையாகவே இருந்தது என்பதை அவரிடம் அழுத்தமாகச் சொன்னோம்.

*
பொறுப்பி : 

நட்புகளோடு பல பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும் இந்த இரண்டு நாள் பயணத்தை மட்டும் 2600+ சொற்களில் எழுதக்காரணம் இதுவரை மேற்கொண்ட பயணங்களில் எனக்கு மிகுந்த மகிழ்வைக் கொடுத்த பயணம் இதுவாகவே இருந்தது என்பதும், இரண்டு நாள் ஓய்வு, குளியல் என்ற நோக்கம் மிகச் சரியாக பூர்த்தியானதும் என்பதும்தான்.

அதைவிட மிக முக்கியமானது……

இணையத்தில் அடையாளம் காணப்பட்டு நெருங்கிய நாங்கள், திட்டமிடல் ஏதுமின்றி தொடங்கிய பயணத்தை மிகமிக அழகியதாக்கிய பெருமை, நாங்கள் இணையத்தில் கண்டெடுத்த நட்புகளாலேயே சாத்தியமானது என்பதை எப்போதும் மறுக்கவியலாது. ”இந்த ஃபேஸ்புக்ல எழுதி, ப்ளாக்ல எழுதி என்னங்க ஆயிடப்போவுது என்பவர்களுக்குச் சொல்ல ஆயிரமாயிரம் உண்டு என்னிடம். அதில் மிக முக்கியமானது என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புவதுஇப்படியான அழகிய நட்புகள் கிடைக்கும் என்பதுதான்.


-