ஆழ்ந்த நன்றிகள்… அடச்சே... ஆழ்ந்த இரங்கல்கள்!

இப்போது அந்தக் கொசு கடிப்பது நான்காவது முறையாக இருக்கலாம். அதுவும் முழங்கைப் பகுதியில். அரைக்கை சட்டையாக இருப்பதால், நாற்காலியில் ஊன்றியிருக்கும் முழங்கைப் பகுதி கொசுவுக்கு ஏதுவாகப் போய்விடுகிறது. சிலமுறை கையை எடுத்து மறு உள்ளங்கையில் வைத்து ’கும்மாயம் கும்மாயம்’ சுற்றுவதுபோல் தேய்த்துக்கொண்டேன். முதலில் கடித்தபோது பெரிதாக உரைக்கவில்லை. எந்தக் கடி அதிக எரிச்சலை உண்டாக்கியதெனத் தெரியவில்லை. கையைக் கொஞ்சம் சொறிந்துகொண்டேன். அருகில் கொசு பறப்பது தெரிந்தது. அடிக்கடி முளைக்கும் வன்மக் கொம்பு விர்ரென நீண்டது. கொசுவை கைகளால் அடித்து வீழ்த்துவதில் எப்போதும் ஒரு பெரு மிதப்பு உண்டு. அது என்ன வகையான உணர்வென்றெல்லாம் தெரியவில்லை. இரு கைகளையும் நீட்டி கொசுவை பின் தொடர்ந்து அடிக்க முயலும்போது தப்பித்துவிட்டது. சுவற்றில் ஒரு மூலைக்குச் சென்ற கொசு ஒரு மாதிரி தவிப்பது தெரிந்தது. உற்றுப் பார்க்க, சிலந்தி வலையில் சிக்கியிருப்பது புரிந்தது.



சில நூலிழைகள்தான். உற்றுப் பார்த்தால்தான், அங்கே வலையிருப்பதே தெரிகிறது. கொசுவின் விதி இன்றைக்கு சரியில்லையெனப் புரிந்தது. இறக்கைகள் சிக்கிக்கொண்டிருந்தன. வலையில் ஏற்பட்ட அதிர்வுகளைக் கண்ட ஒரு சிலந்தி ஒற்றை நூலிழை வழியே சரசரவென நெருங்கிக் கொண்டிருந்தது. கொசுவின் உடல் துடித்துக் கொண்டிருந்தது. சிலந்தியை நாங்கள் எட்டுக்கால் பூச்சி என்போம். எட்டுக்கால்கள் இருக்கிறதாவெனப் பார்த்தேன். ஆறு கால்கள்தான் இருந்தன. அப்போ இது ஆறுகால் பூச்சியா இருக்குமோ? அல்லது இரண்டு கால்கள் உடைந்து போயிருக்குமோ எனத் தோன்றியது. இடையில் கால்கள் உடைந்திருக்குமா அல்லது பிறப்பிலேயே ஆறு கால்களோடு மட்டும் பிறந்த மாற்றுத் திறனாளி சிலந்தியாக இருக்குமா? ஆறு கால்களோடும் அதன் வாழ்க்கை நகர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. இன்றைக்கு அதற்கு பெரியதொரு தீனியும் தானே வந்து சிக்கிக் கொண்டிருக்கின்றது.

கொசுவை அடித்துவிட்டால் என்ன? வேணாம், எட்டுக்கால் பூச்சி என்ன செய்கிறதெனப் பார்க்கலாம். ஆரம்பித்தது கொசுவுக்கும் எட்டுக்கால் பூச்சிக்குமான போர். அந்த வலையின் மற்றொரு பகுதியில் ஒரு சிறிய சிலந்திக் குட்டி இருந்தது. அதை குட்டி எனச் சொல்லவேண்டுமா, குஞ்சு எனச் சொல்ல வேண்டுமா? அந்தக் குட்டிச் சிலந்தியோடு பெரிய சிலந்தியை ஒப்பிடுகையில், அது மினியேச்சர் போலவும், சிலந்தி ஒரு டைனோசர் போலவும் தோன்றியது.

எப்போதும் சிலந்தி வலை மீது சொல்ல முடியாத ஆச்சரியமுண்டு. இவ்வளவு சிறிய ஒரு சிலந்தி எப்படி அவ்வளவு நுண்ணிய வலையைப் பின்னுகிறது. அதன் கோடுகளும் கணக்கீடுகளும் எத்தனை அதிசயம் நிறைந்தவை. ஊர் உலகத்தின் குப்பைகளெல்லாம் காற்றின் வழியே கடந்து போகையில் படிந்து அது ஒட்டையாக மாறி, நமக்கு ஒவ்வாத ஒன்றாகவும், அதற்கு பயணப்பட பயன்படாததாகவும் ஆகிவிடும் அவலமும் உண்டு.

கவனம் கொசுவின் போராட்டம் மேலும், சிலந்தியின் தாக்குதல் மீதும் குவிந்தது. இதுநாள் வரை சிலந்திக்கு எப்படி இரை கிடைக்கிறதென்றெல்லாம் யோசித்ததில்லை. இப்படித்தான் வலிய சில இரைகள் சிக்கிக்கொள்ளுமோ? எவ்வளவு கஷ்டப்பட்டு வலையமைத்திருக்குமென்று ஒரு போதும் யோசிக்காமல், போகிற போக்கில் விரல் நுனியால், ஸ்கேல் துணை கொண்டு சில சமயங்களில் சீமாறு கொண்டு என எத்தனை எளிதில் கலைத்துவிடுகிறோம். என் வீடு, என் அறை, என் இடம் இங்கு உனக்கு கூடமைக்க என்ன உரிமையென எளிதில் நசுக்குகிறோம். இதே சமூகம் தான் ஊருக்குள் எப்போதாவது நலம் விசாரிக்க வரும் யானை, புலிக்கு இத்தனை கூப்பாடு போடுகின்றது.

சிலந்தி கால்களை நிலையாக வைத்துக்கொண்டு உடலை மட்டும் முன்னோக்கி வெடுக்கென நகர்த்தி, மிருகப் பாய்ச்சலாய் முத்தமிடுவது போல் கொசு மீது மோதிவிட்டு பின்வாங்கியது. அடுத்தடுத்து சமகால இடைவெளியில் மோதிக் கொண்டேயிருந்தது. அதே சமயம் நெருங்கிக்கொண்டும் இருந்தது. நூலை அறுத்து கொசுவை விடுவித்துவிடலாமா எனத் தோன்றியது. சற்றுமுன் கொசுவை அடித்துக்கொல்ல விரட்டியபோது இருந்த கடுப்பு, கோபம், வெறுப்பு இப்போதில்லை. விடுவிக்கும் அளவுக்கு கருணையும் சுரக்கவில்லை. கை முட்டியில் கொசுக் கடியின் உறுத்தல் மீண்டும் நினைவுக்கு வந்தது. இன்னொரு கை அந்த இடத்தை மெல்ல வருடிவிட்டது. கொசுவைக் காப்பாற்றிவிட்டால் சிலந்தியை பட்டினி போட்டதாகாதா என்ற வியாக்கியானம் வேறு தோன்றியது.

கொசுவை முழுதும் ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது சிலந்தி. மெல்ல மெல்ல கொசுவின் இறக்கைகள் தவிர்த்த உருவம் மறையத் தொடங்கியது. ஒரு நுண்ணோக்கி கையில் இருந்தால் நன்றாக பார்க்கலாம் என புத்தி நினைத்தது. அதே நேரத்தில் “சாகட்டும் கொசு, பாவம் கொசு, பசியாறட்டும் சிலந்தி” என மனம் சுழன்று சுழன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு கொலையை, ஒரு மரணத்தை, ஒரு பசியாறலை சலனமின்றி ரசிக்கும் மனநிலை வாய்த்திருப்பது என்ன வகையான நிலைப்பாடு எனப்புரியவில்லை.

அவ்வப்போது இப்படி ஒரு நிலைப்பாடு வருகின்றது. இதில் எது சரி, எது தவறெனத் தெரியவில்லை அல்லது தெளிவில்லை. தீர்மானிக்க இயலுவதுமில்லை.

எல்லோருக்கும் அவ்வப்போது ஒரு மனநிலை அமைகின்றது. அது நிலையாக நீடித்திருப்பதில்லை. நீடித்திருக்க வேண்டுமென என்ன நிர்பந்தம் அல்லது சட்டம். சூழல்கள் தீர்மானிக்கின்றன. சூழல் ஒரு பெருவெள்ளம்போல் அதன் போக்கில் மனநிலையை உருட்டிச் செல்கின்றது.

வேறென்ன…
முதல் பத்தியில் இருந்த மனநிலைக்குச் சென்று, சொல்ல இரண்டு வரிகள் உண்டு… அவை

* கொசுக்கு ஆழ்ந்த நன்றிகள்…. அடச்சே ஆழ்ந்த இரங்கல்கள்.

* சிலந்திக்கு ஆழ்ந்த நன்றிகள்!


7 comments:

கிருத்திகாதரன் said...

அருமையான கவனிப்பு..

vasu balaji said...

இப்புடித்தான் ஊரூரா மேயருங்க வேடிக்கை பாக்கறதுக்காக கொசுவ வளத்துடறாங்க போல.:))

ராஜி said...

நல்ல கவனிப்பு

தினேஷ் பழனிசாமி said...

நான் உங்க ஆபிஸ்கு வந்தப்ப கடிச்ச அதே கொசுவா இருந்தா ரொம்ப ஹேப்பி.. :)

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் வியாக்கியானம் யாருக்கும் தோன்றாது...! ஒட்டடை அடிக்கவில்லை என்பதும் தெரிகிறது... ஹிஹி...

'பரிவை' சே.குமார் said...

நல்லாத்தான் கவனிச்சிருக்கீங்க...
அருமையான எழுத்து நடை அண்ணா...

மகிழ்நிறை said...

Bruce and the spider என்றொரு கதையுண்டு .சிலந்தி வலை பின்ன படும் முயற்சியை கவனித்த பதுங்கு குழி மன்னன் எப்படி போரில் வென்றான் என்று விரியும் கதைக்கு வெகு காலத்துக்கு பின் இப்போ தான் இத்தனை நுட்பமான கவனிப்பை பார்கிறேன்.உங்களுக்கு என் ஆழ்ந்த சீ மனமார்ந்த பாராட்டுக்கள் !