இனிதாவது எங்கும்...!

வேறொன்றும் பெரிதாய்த் தேவைப்படவில்லை. சூழல்களிலிருந்து மீண்டுவிடமுடியும் எனும் நம்பிக்கையும், இந்தச் சூழலை இப்போதோ, இதற்கு முன்னரோ எவரேனும் கடந்திருக்க முடியும் என்ற நினைப்பும் மட்டுமே அவசியமாயிருக்கிறது. நம்பிக்கை மனதில் ஆழ வேரூன்ற ஒரு தனிமை அவசியமாக இருக்கின்றது. தனிமை அவ்வளவு எளிதில் வாய்த்து விடுவதில்லை. தனிமை உத்திரவாதமான தனிமையாகவும் இருப்பது அவசியம். பெரும்பாலும் நெரிசலும், அழுத்தமும் கூடும்பொழுது ஒரு தனிமை கிடைக்காதா என மனம் ஏங்குகிறது. தனிமைபோல் இனிதாவதெங்கும் காணோம். தனிமை போல் மிரட்டுவதும், சுமையூட்டுவதும் எங்கும் காணோம் என்பதும் நிதர்சனம்.

அவசியத் தேவையாக இருக்கும் தனிமை, ஒரு காப்பீடு செய்யப்பட்ட தனிமையாக அமையவேண்டும். தனிமை எனக்கு இனிமை மட்டுமே சேர்க்கவேண்டும். என்னை அச்சுறுத்தக்கூடாது. தனிமை மூச்சு திணற வைக்கக்கூடாது. மௌனமாக இருக்கச்சொன்னால் தனிமை மௌனிக்க வேண்டும். பேசச்சொன்னால் தனிமை சொற்களை உதிர்க்க வேண்டும். இசைக்கச் சொன்னால் மெல்லிசை வழிந்தோட வேண்டும். அழச் சொன்னால் தனிமை தேம்ப வேண்டும். நம்மோடு போரிடச் சொன்னால் நம்மிடம் தனிமை மண்டியிடவேண்டும். இதையெல்லாம் விட இந்த தனிமை எனும் முகமூடி, நம்மேல் நிற்கும் தனிமை எனும் குடை எந்த நொடியிலும் தன் நிலைப்பாட்டை மாற்றியமைத்துக் கொள்ளும் குணம் படைத்ததாகவும் இருக்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட தனிமை, தனிமையின் நாட்கள் முடிந்த பிறகு முன்பு போலவே ஒரு பரபரப்பான வாழ்க்கைக்குள் எந்தச் சேதாரமுமின்றை நம்மை அனுமதித்திட வேண்டும்.



எனக்குக் கடற்கரைத் தனிமை ஒரு கனவாகவே இருக்கின்றது. எவருமற்ற ஒரு இளமாலைப் பொழுதாய் அது இருக்க வேண்டும். சூரியன் தன் கண்களை மூடியபிறகும் மெலிதாய் தகதகக்கும் மாலையின் மோகம் நிறைந்த பொழுதாய் இருத்தல் நலம். கடல் நீர் அருகாமையில் மென் பச்சை நிறமாகவும், தொலைவில் அடர் நீலமுமாய் இருக்க வேண்டும். உடன் யாரும் இல்லாதிருத்தல் சிறப்பு. அப்படியே இருந்தாலும் தனிமைத் தாகம் அவர்களை தன்னுள் அமிழ்த்தி வைத்திருக்கவேண்டும். ஒரு வார்த்தைகூட அந்தக் கணங்களில் பேச விரும்பாதவராக இருத்தல் வேண்டும். தேவைப்படுமாயின் விழிகள் உரசிக்கொள்ளும் உரையாடல் கூடப் போதும். தனிமையை ஆழ்ந்து சுவாசிக்க ஏதுவாகவும் இருக்கவேண்டும். ”உஸ்தாத் ஹோட்டல்” திரைப்படத்தில் வருவது போன்ற தனிமையான கடற்கரை. கூடவே பருக சுலைமானி இருத்தல் இன்னும் சுகம்.

ஏதும் இல்லா பொட்டலில் பரிமாறப்படும் தனிமையைவிட, நீரும் மரங்களும் சார்ந்த இடங்களின் தனிமை மிகவும் பிடித்தாக இருக்கின்றது. மிகச் சமீபத்தில் அப்படிப்பட்ட தனிமையை உணர்ந்தது, ஒரு அணைக்கட்டுப் பகுதியில். அது ஒரு மதியப்பொழுதுதான். உடன் நட்புகள் இருந்தார்கள்தான். சில ஆசிர்வதிக்கப்பட்ட கணங்களில் மட்டும் எத்தனை பேர் உடனிருந்தாலும் ஏகாந்தம் வந்து மடிமீது அமர்ந்துகொண்டு, தன் உச்சந்தலையை நம் தாடையில் உரசிக்கொண்டிருக்கும். அது அப்படிப்பட்ட ஒரு கணம் தான். அந்த அணைச்சுவர் மீதமைந்த பாதையில் கால்களை வீசி நடைபோடுகிறேன். இடது பக்கம் அணையில் பாதி நிரம்பிய தண்ணீர் அலையடித்துக்கொண்டிருக்கிறது. வலது பக்கம் அடிபெருத்த சுவற்றுச் சரிவு. கைகளாலும் கண்களாலும் அளந்து பார்க்கத் துணியமுடியாத அளவுக்கு நீண்டு பருத்துக்கிடக்கும் அணைக்கட்டு அது. மெல்ல அலையடிக்கும் நீரில் உரசி வரும் காற்று மனதிற்குள் ஊஞ்சலாட்டுகிறது. அணையை அரவணைத்தபடி மூன்று திசைகளிலும் சாய்ந்துகிடக்கும் மலையும் காடும் கொள்ளை அழகு.

இந்த அணையை இங்கு எழுப்ப முதன்முதலில் யோசித்த மூளை எதுவாக இருக்கும்?. முதற்சிந்தனை எப்படி துளிர்த்திருக்கும்? முதற்சிந்தனை உதித்த பொழுதில் அவரும் ஆழ்ந்த தனிமையில் இருந்திருப்பாரோஅங்கே ஒரு பெரும் காட்டாறு காலம்காலமாய் ஓடிக்கொண்டிருந்திருக்கலாம். வெள்ளத்தைத் தடுக்கவோ, விவசாயத்தைப் பெருக்கவோ, எதன்பொருட்டோ அங்கே ஒரு சுவர் எழுப்ப தீர்மானித்த நொடி எத்தனை அற்புதமானது.

நிரம்பித் தளும்பும் அந்த நீரின் பெரும்பான்மைகூட சொட்டுச் சொட்டாகத்தானே சொட்டியிருக்க வேண்டும். சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழி எத்தனை உண்மை நிரம்பியது. அணை முழுக்க கட்டிமுடித்த நாளின் ஒரு இரவில் அதனினின்று எல்லோரும் விலகி வீட்டுக்குப் போன முதல்நாள் அந்த அணையின் உணர்ந்திருக்கும் தனிமை எத்தகையாக இருந்திருக்கும். சுவற்றில் முதலில் வந்து மோதிய நீர், கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்து அழுத்தமாய் திரண்டு சுவற்றின் உள்பக்கம் முழுதும் உரசிக் கிடக்கும் நீர் எத்தனை கதகதப்பாய் இருந்திருக்கும் அணைக்கு. அணை தனிமையில் இருக்கின்றது. தண்ணீர் தனிமையில் இருக்கின்றது. எனினும் இரண்டும் ஒன்றாய் இருக்கின்றது. தண்ணீர் இல்லா அணை வெறுமை. அணையில் அடைபடாமல் ஓடும் நீர் பெரும்பாலும் வீண். ஏகாந்தத்தைப் போர்த்திக்கொள்ளும் அணைக்கு தாலாட்டுப் பாடி உறங்கவைப்பது கூட காற்றினால் உந்தப்பட்டு மெல்லச் சிலும்பிக்கொண்டிருக்கும் அலைகளாகத்தான் இருக்கவேண்டும்.

எதிர்பாராமல் உள் மனதில் தோன்றும் வெற்றிடம் கூட, மழை பொய்த்த பருவங்களில், தன் உடல் முழுதும் காட்டிக்கொண்டு வெற்று மேனியாய்ப் குப்புறப் படுத்திருக்கும் ஒரு அணையையே நினைவூட்டுகிறது. எந்த அணையும் எல்லாக் காலங்கிலும் காய்ந்தே கிடந்துவிடுவதில்லை. வெற்றிடமாகும் அணைகள் வேகமாய் நிரம்புவதும், மெல்லமாய் தீர்வதுமான ஒரு மாயக் கணக்கிலே பெரும்பாலும் கடந்துவிடுகின்றன. அணையின் ஒரு கரையோரம் இருக்கும் மரத்திலிருந்து ஏதோ ஒரு குயில் ஏக்கமாய்க் கூவுகிறது. குயிலின் குளிர வைக்கும் கூவல் எதாவது பாடலை நினைவில் நிரப்பிவிடுகின்றன.

தனிமையில் ஒன்றிக் கேட்கும் பாடல்கள் யாராவது ஒருவரின் நியாபகத்தை நிரப்பிவிடுகின்றன. எந்தச் சூழலில் இருந்தாலும் அப்படி நினைவில் வருபவர்கள் மேல் கூடுதலாய் அன்பு துளிர்த்து விடுகின்றது. சில நினைவுகள் அத்தனை இதமானவை. இறகுபோல் வருடுபவை.

நம் ரசனையறிந்து சிலர் பரிந்துரைக்கும் பாடல்கள், ஒருவகையில் மிகுந்த அணுக்கமானதாக மாறிவிடுகின்றன. திடீரென மனதைச் சுண்டும், திடீரென பொங்கச் செய்யும், திடீரென பூக்கச் செய்யும், திடீரென மனதை அமிழ்த்தும்…. என்னவோஎன்னென்னவோ  செய்யும்.

பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாரதியின்பாயுமொளி நீ எனக்குப் பாடலை ஒரு தனித்த நள்ளிரவு பணியின் போதுதான் முதன்முதலில் கேட்டேன். முதன்முறை செவி தீண்டியபோதே நேரடியாக மனதைத் தீண்டி, அப்படியே உள்ளழுந்தி மனதின் ஆழம்வரை அப்படியே ஒட்டிக்கொண்டது. அதையொத்த பாடல்களைக் கேட்கும் பொழுதெல்லாம் எப்போதாவது கண்ட ஏதாவது ஒரு காட்சி அப்படியே மனதில் ஓட ஆரம்பித்துவிடுகின்றது.

ஒரு மாலை நேர ரயில் பயணத்தில் சன்னலோரம் அமர்ந்திருக்கிறேன். பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒரு முனை அது. அங்கு கொஞ்சம் பரபரப்பு குறைவு. நடைமேடைப் பலகையில் ஒரு நடுத்தர வயது ஆணும், இளம் பெண்ணும் அமர்ந்திருக்கின்றார்கள். எதோ ஒன்றை உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் எதையோ உற்சாகமான உடல்மொழியோடு விவரித்துக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்கும் அந்தப் பெண்ணின் முகத்தில் நவரசங்களும் நடனமாடுகின்றன. அவர் பேசும் வார்த்தைகளுக்கு ஏற்ப அவள் விழிகள் வெவ்வேறு அபிநயங்கள் பிடிக்கின்றன. பெட்டிக்குள் எத்தனையோ பேர் இருந்தாலும் சன்னல் வழிக்காட்சியில் சிக்குண்ட நான் அந்தக் காட்சியில் ஒன்றிய கனம் ஏகாந்தத்தில் தறித்து விடப்பட்டிருந்தேன். நேரம் கடந்துகொண்டிருப்பதை உள்ளுணர்வு சொல்கிறது. 10 நிமிடங்கள் மட்டும் நிற்கவேண்டிய ரயில் அசைந்த பாடில்லை. பரபரப்பாய் மக்கள் அங்கும் இங்கும் உலவும் சூழலில் அந்த நடைமேடைப் பலகையில் தங்கள் உரையாடலால் தங்களுக்கென தனிமையை ஆட்சி செய்துகொண்டிருக்கும் அவர்களின் உரையாடலும் நின்ற பாடில்லைஉள்ளுணர்வு மெல்லச் சிரிக்கிறது. ரயில் முதலில் நகருமா, மனிதர்களின் பரபரப்பு அடங்குமா, அவர்களின் உரையாடல் நிறைவு பெருமா? முதல் பத்து நிமிடங்கள் தீர்ந்தன. தனிமையில் லயித்து அவர்களின் தனிமையை ரசித்த மனது, நிமிடங்களை நீட்டிக்கச் சொல்கிறது. நிமிடங்கள் கரைகின்றன. ஒருவழியாய் ரயில் மெல்ல அதிர்வெழுப்புகிறது. அந்த மனிதர் பெண்ணுக்கு கை அசைத்தவாறு ஓடி வந்து, எனக்கும் அடுத்த பெட்டியில் தொற்றிக்கொள்கிறார். அவள் கை அசைத்துக் கொண்டேயிருக்கிறாள். சட்டென தனிமை அவளைச் சூழலாம். ஆனால் அந்த மனிதர் கொட்டிவிட்டுப் போன சொற்கள் அவளோடு  துணையிருக்கலாம்.

அந்தப் பயணம் முழுக்க நான் தனிமையில் ஆழ்ந்து போனேன், அங்கு காற்றில் மிதந்த சொற்கள் இவைகளாக இருக்குமோ என யோசிக்கவும், அந்தப் பெண்ணின் விழியசைவு நடனம் இப்படியானதாக இருந்ததோ என மீட்டவும்.

நானாய் விரும்பி, அடைந்து, வென்று, கொண்டாடும் தருணங்களில் தனிமை போல் இனிதாவது எங்கும் காணோம்.

-*-



5 comments:

Unknown said...

உம்முள் உதித்த இந்த " ஏகாந்த தனிமை நொடி...அணை தனிமையில் இருக்கின்றது. தண்ணீர் தனிமையில் இருக்கின்றது. எனினும் இரண்டும் ஒன்றாய் இருக்கின்றது." ... கடவுளே .. ! வார்த்தைகளின் வழி ஏகாந்த பயணம் .... (மொழிகளுக்குள்ளும் ஊடல் , தேடல் வார்த்தை இன்றி பாராட்டுவதற்கு )

manjoorraja said...


இன்று காலை கணினியில் படிக்கும் முதல் கட்டுரை இது தான். அப்படியே தனிமைக்குள் இழுத்து சென்று விட்டீர்கள். படித்து முடித்ததும் ஒரு நிமிடம் கண் மூடி அந்த தனிமையை அனுபவித்தேன். தனிமை தனி சுகம் அதுவே சில சமயம் கடும் பாரமும் கூட.



/நானாய் விரும்பி, அடைந்து, வென்று, கொண்டாடும் தருணங்களில் தனிமை போல் இனிதாவது எங்கும் காணோம்.//
முத்தாய்ப்பாய் முடித்திருக்கும் விதம் அருமை//

கசியும் மெளனம் = தனிமை

சு.மு.அகமது said...

மௌனத்தை மௌனத்தால் மட்டுமே மனனம் செய்ய முடியும்.தனிமையோ வெறுமையோ வலுவில் மௌனத்தை ஸ்தாபிக்க முடியாது.மனம் விரும்பும் போது மட்டுமே மௌனம் சாத்தியப்படும்.மனதை விரும்பும் சூழலுக்கு ஆட்படுத்தலாம்.விரல் வழி கசியும் மௌனம் கூட வார்த்தைகளால் தான் அலங்கரிக்கப்படுகிறது.உண்மை.

அதியா வீரக்குமார் said...

அற்புதம். உரைநடைக்குள் கவிதையைப் புதைத்துவைத்திருக்கும் எழுத்து...

-வீரா

Unknown said...

I just melted and moved. what an excelant writing. wonderful. How is it possible to write in such a way. Really excelant.
One doubt to me.How Tiruvannamalai failed to attract u