இயற்கையும் வஞ்சித்திடின்... என் செய்வானடி கிளியே!

இயற்கை சுத்தமாய்க் கைவிட்டதில் காய்ந்து பொட்டல் காடுகளாய் கிடந்த நிலத்தை கர்நாடகக் காடுகள் கறந்து, அணை நிரப்பி வாய்க்கால் வழியனுப்பிய நீரில் நனைந்து உயிர் பிடிக்கின்றன. இந்த முறை ஊருக்குப் போகும்போதே கவனித்தேன். வாய்க்கால் நீர் எட்டும் இடங்கள் கூடுதல் பசுமையாகவோ, சேற்று வயலாகவோ கிடந்தன. 

பெரும்பாலும் கரும்பும் மஞ்சளுமாக போர்த்திக் கிடக்கும் ஒரு சாலையோர செழிப்பான நிலம் அது. மிகமிக சமீபத்தில் தென்னை மரங்கள் பிடுங்கப்பட்டு, சமன் செய்யப்பட்டு, வீட்டுமனைகளாக கல் நடப்பட்டு, எல்லைகளில் வண்ணக்கொடிகள் பறக்கவிடப்பட்டு கர்வமாய் நின்றுகொண்டிருந்த அந்த நிலத்தில் இப்போது தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கின்றது.  மூன்று மாதங்களுக்கு முன்பு ஆயிரம் அடி துளைத்தும் சொட்டுத் தண்ணீர் இல்லையென்றிருந்த நிலம் அது. இப்போது சுற்றிலும் நீர் நிரம்பி ஒறம்பெடுத்துக் கிடக்க, வீடு கட்டுகிறேன் என யார் அஸ்திவாரம் பறித்தாலும் நீர் சுரக்கும் என்பது புரிந்தது. 

மெயின் ரோட்டிலிருந்து 1 கி.மீ தூரம் உள்ளே சென்றால் வரும் நாலு ஏக்கர் பூமியை “ஏக்கரா 40 லட்சத்துக்கு வெலை சொல்றாங்க, பேசிட்டிருக்கோம், வாங்கினா ப்ளாட் போடலாம் இல்லைனா ஃபார்ம் ஹவுஸ் கட்டிடலாம்” என நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அந்த நிலத்தைப் பார்த்தேன். அதைச்சுற்றிலும் இருந்த வயல்கள் சேற்று வயல்களாக இருந்தன. இப்போதைக்கு அந்த நிலத்தில் சேற்று உழவுக்கு டிராக்டர் இறக்குவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாது எனப் புரிந்தது. 

ஒவ்வொரு வறட்சியிலும் தண்ணீர் பற்றாக்குறையில் பூமி காய்ந்து போகும்போது இதுதான் சாக்கென ரியல் எஸ்டேட் அரக்கன் அதிவேகமாக தன் கால்களை பூமி அதிர ஊன்றி பசிக்கு இரையெடுத்து விடுகிறான். தப்பிப் பிழைப்பது அவ்வளவு எளிதல்ல. எதற்கு, எப்படி என்று தெரியவில்லை, எனினும் எவர் நிலத்தையும் வாங்கும் அளவுக்கு காசு வைத்துக்கொண்டு வேட்டை மனோபாவத்தோடு பலர் இருக்கத்தான் செய்கின்றனர். 

படம் : தி இந்து


தன் நிலத்தை வீட்டுமனைத் திட்டத்திற்கு விற்கும் விவசாயிகள் மீது, மேம்போக்காக, வெறுமெனக் கோபம் கொள்வது வெட்ககரமானது. 

கிணற்றில் தண்ணீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மின்சாரம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், மழை பொய்த்து எல்லாம் காய்ந்து போனாலும், பேய் மழை கொட்டி எல்லாம் அழுகிப் போனாலும், விதைபோட்டு, உரம் போட்டு, வெட்டிப்பார்க்கையில் மண்ணோடு மண்ணாக மட்கிக் கிடந்தாலும், பூச்சிகள் வந்து அரித்துத் தின்றாலும், புழுக்கள் வந்து கொறித்துத் தின்றாலும், மயில்கள் வந்து துவம்சம் செய்தாலும், தன் வயிற்றுக்கு ஒழுங்கா தின்னும் தின்னாமலும், சுவாசித்தும் சுவாசிக்காமலும் போராடும் விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம் சாதாரணமல்ல.

கிலோ 2 ரூபாய்க்கு வெங்காயம் விற்கும்போதும், 3 ரூபாய்க்கு தக்காளி விற்கும்போதும் விவசாயிகள் படும் வேதனையைச் சொல்ல வலிச் சாயம் பூசிய வார்த்தைகள் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கும்போதும், அதே தக்காளி கிலோ 45 ரூபாய்க்கு விற்கும்போது, தத்தம் நிலத்தில் மட்டும் வெங்காயமும் தக்காளியும் இல்லாமல் போகும் வரலாற்றை எழுதவும் வார்த்தைகள் கிடைப்பதில்லை.

கடன்பட்டு, உடன்பட்டு, உடலை உருக்கி, மண்ணுக்குள் போட்டது முளைக்குமா?, பூச்சிக்கு தப்புமா?, நோயைத் தாங்குமா?, அறுவடை வரை தண்ணீர் தாட்டுமா? எனப் பல போராட்டங்களைத் தாக்குப்பிடித்து ஒரு விவசாயி விளைவித்ததை, விலை பேசி வாங்கும் வியாபாரி எல்லாக் காலகட்டத்திலும் செழிப்பாகவே இருக்கின்றார். 

வியாபாரிக்கும், வியாபாரியிடம் வாங்கிச் சாப்பிடுவோருக்கும் நகக்கண்ணில் என்ன, நகத்தில் கூட அழுக்குப்படுவது ஆச்சரியமான ஒன்று. விவசாயிக்கு நகக்கண்ணில் அழுக்குப் படுவது மட்டுமல்ல, நகமே கூட நைந்துபோவதோ அழுகிப் போவதோ உண்டு. 

ஆறு மாதத்திற்கு முன்பு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கியதை, இப்போது கிலோ 60 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணும் நிலையில் இருக்கும் மனிதர்கள் எதையும் சமாளிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர். இப்போது கிலோ 60 ரூபாய்க்கு போகிறதே என்று வெங்காயத்தை பயிர் செய்யும் விவசாயி, விளைந்து அறுவடை செய்யும் போது, கிலோ 4 ரூபாய்க்கே கேட்கப்படாத சூழல் வரும்போது அதை தாங்கும் திராணியற்றுப் போகிறான்.

எவரும் சந்திக்காத போராட்டங்களைச் சந்தித்து மூட்டைகட்டி, சந்தைக்கு வரும் விவசாயி ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் என கணக்குப் பார்த்து, காபி டீ குடிக்க கணக்குப் பார்த்து சிரமப்பட மட்டும் உரிமையுண்டே தவிர, தன் பொருளுக்கு தான் விலை நிர்ணயிக்கும் உரிமை ஒருபோதும் இருப்பதில்லை. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என சிரமப்பட்டு, விற்று நிமிரலாமேயேன வருபவனின் பொருளுக்கு வியாபாரி மட்டுமே எப்போதும் விலை நிர்ணயம் செய்கிறார், அவரே அந்தப் பொருளுக்கு லாபமும் தீர்மானிக்கிறார். வேறு வழியின்றி, வக்கின்றி வியாபாரி கொடுக்கும் காசை ஓரிரு சமயங்களில் மகிழ்வாகவும், பெரும்பாலான சமயங்களில் கசப்போடும் மட்டுமே பெற்றுச் செல்கிறான் விவசாயி. 

விவசாயி என்பதற்கான அடையாளத்தோடு கசங்கிய வேட்டி, சட்டை, துண்டுமாய் வருபவன் பேருந்தில் ஏறும்போதுகூட, “யோவ் சில்லறை இருந்தா ஏறு இல்லாட்டி எறங்கு!” என்றே அதட்டுகிறார்கள். தாலுக்கா ஆபீசில் ஒரு சான்றிதழ் வாங்கவோ, போஸ்ட் ஆபீசில் ஒரு மணி ஆர்டர் அனுப்பவோ, வங்கியில் நகை அடகு வைக்கவோ, பயிர்க்கடன் வாங்கவோ செல்லும்போது அவனுக்கு புரியாத மொழியில், பழக்கப்படாத வரிகளில் மட்டுமே கேள்வி கேட்கிறார்கள், பதில் சொல்லும்போது அது தவணையாக தரப்படும் என்கிறார்கள். நகரத்தின் அகலமான நெரிசல் மிகுந்தசாலையில் தடுமாற்றமாய்க் கடக்கையில் “ஏய்யா என் தாலியை அறுக்கிறே!” எனக் கேவலப்படுத்துகின்றனர். கோவிலுக்கு போனால் கூட பளபளக்கும் வெள்ளையில் வருபவர்களைக் காண்கையில் “எல்லாரும் கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நில்லுங்க” என்றே பூசாரி கற்பூரம் போல் எரிந்து விழுகிறார். இவ்வளவு ஏன், எத்தனை ஏக்கர் நிலம் வைத்திருந்தாலும், எத்தனையோ சம்பாதித்தாலும் விவசாயத்தை மட்டுமே செய்பவனுக்கு, திருமணத்திற்குப் பெண் தர உள்ளூர் விவசாயி, உறவுக்கார விவசாயிகளே கூட ஒப்புக்கொள்ளாத முரணும் இங்கு மட்டுமே சாத்தியம்.

துன்பப்பட்டு, அவமானப்பட்டு, ஒதுக்கப்பட்டு ஏன் விவசாயத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் விவசாயிகளுக்கு எழாமல் இல்லை. “யாரோ சம்பாதிக்க, யாரோ தின்ன நான் மட்டுமே நாயாப்பேயா காலம் முழுதும் அல்லாடிக்கொண்டேயிருக்க வேண்டுமா!?” என்ற அலுப்பு எழாமல் இல்லை. இரண்டு திட்டங்களைக் கையில் எடுத்தார்கள். ஒன்று தம் பிள்ளைகளை விவசாய நிலத்தை விட்டு வெளியேற்றுவது. “இந்தா நல்லா படி, எங்களை மாதிரி கஷ்டப்படாதே, எங்காச்சும் வேலைக்குப் போயிடு.. அல்லது தொழில் செய்து பிழைத்துக்கொள்” என்று. அடுத்து, சாலையோரம் இருக்கும் நிலங்களை நல்ல விலைக்கு விற்றார்கள் அல்லது அவர்களே கூட்டணி அமைத்து, வீட்டுமனைகளாகப் பிரித்துப்போட்டு கல் நட்டு வண்ணம் பூசி, மையத்தில் ஒரு குடிசை போட்டு வியாபாரம் செய்து முதலாளியாக உயர்கிறார்கள்.

அதன்பின் சில்லறை வைத்துக்கொண்டு பேருந்தில் ஏறவேண்டிய அவசியம் இருப்பதில்லை. பளபளக்கும் உடையில் பொலிரோ காரில் சென்று இறங்கும் முன்னாள் விவசாயி என்கின்ற இன்னாள் முதலாளிக்கு சமூகம் கூடுதல் மரியாதை கொடுக்கத் துவங்குகிறது. உள்ளூர் வார்டுச் செயலாளரோ, வட்டமோ எதிரில் பார்க்கும்போது வணக்கம் வைக்கிறார். தாலுக்கா ஆபீஸில் சிறப்புக் கவனிப்பில் அதனதன் முறையில் வேலை நடக்கிறது. வங்கி மேலாளர் வரவேற்று, குளிர்பானம் வாங்கிக் கொடுக்கிறார்.

அடுத்த கட்டமாய் அக்கம்பக்க ஊரில் சாலையோரம் இருக்கும் நிலங்களை விலை பேசுகிறார்கள், வீட்டுமனையாக்கி சின்னத்திரை பிரபலங்களை வைத்து விளம்பரப் படமெடுத்து சுழல் நாற்காலிகளில் செல்போன் பிடித்த படி “எங்க வீட்டுமனைத் திட்டத்திலே பார்த்தீங்கனா.” என மோதிரத்தில் வைரக்கல் மினுமினுக்கப் பேசுகிறார்கள். வியாபாரிபோல், நகரத்துவாசி போல் எந்தக் கவலையுமின்றி 60 ரூபாய் கொடுத்து வெங்காயம் வாங்குகிறார்கள். பிள்ளைகளுக்கு 3000 பத்திரிக்கை அடித்து, நாலாயிரம் பேருக்குச் சோறுபோட்டு பெரிய அளவில் திருமணம் நடத்துகிறார்கள். புதிதாக ஷூ அணிந்து வாக்கிங் செல்கிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்கிறார்கள்.

இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு நிலமெங்கும் தண்ணீர் செழித்திருக்கும். காலம்காலமாக செய்த விவசாயம் எல்லோரையும் தன்னுள் சுழற்றி இழுத்துப் போட்டுக்கொள்ளும். கனிந்த மடியில் பால் சுரப்பது போல, எந்த நிலத்தையும் கூறுபோட்டு கல் நடமுடியாது. வண்ணக் கொடிகள் நடமுடியாது. விவசாயம் செய்வதில்லை என விட்டிருந்த நிலத்தை கூலிவேலைக்குச் சென்று வந்த எவரேனும், குத்தகைக்கு உழுது விவசாயம் செய்வார்கள்.

எந்த ஒரு விவசாயியும் வியாபாரிகளுக்கோ, சமூகத்திற்கு அவ்வளவு எளிதில் அஞ்சி தன் முதுகெலும்பை உடைத்துக் கொள்வதில்லை. சூழலும் இயற்கையும் சேர்ந்து சதி செய்யும்போது சூழும் புழுக்கத்தில் தடுமாறிப் போகிறான், கூடவே தடம் மாறியும். என்னதான் செய்வான் அவனும், என்னைப்போல, உங்களைப்போல எல்லா ஆசாபாசங்கள் கொண்ட, ரத்தமும் சதையுமான மனிதன்தானே! 

-

நன்றி :  தி இந்து 

-

எச்சம் விழுந்த இடம்






வயிறு நிரம்பிய பசியில்
சோர் நடையில்
கண்களை உறுத்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
தட்டுச் சில்லறைகள்

குரைத்து மிரட்டும்
நான்காவது வீட்டு நாய்
தண்ணி லாரியில்
சிதைந்த சேதி
சேர்த்த சிற்றமைதி

காமம் தோய்ந்த
வெக்கை இரவினில்
விருப்பமற்றவளை
மனதிற் கொண்ட பொழுது

எங்கிருக்கும்....
கடைசிப் போதி மரத்தின்
பழம் உண்ட
பச்சைக்கிளியின்
எச்சம் விழுந்த இடம்!


-


கேரி பேக்


காலை நேரம். கொஞ்சம் மருந்தும் காலைச் சிற்றுண்டியும் கடையில் வாங்க வேண்டிய சூழல். ஒரு பெரிய, இரண்டு சிறிய பாத்திரங்களோடு புறப்பட்டேன். மருந்துக் கடையில் ‘சிரப்’ ஒரு பாட்டிலும், மூன்று மாத்திரைகளையும் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டு மருந்துக்கு கை நீட்டினேன், மருந்துப் பாட்டில், மாத்திரையோடு ஒரு கேரி பேக்கை அந்தப் பையன் நீட்டினான். 

இப்பொழுதெல்லாம் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினாலும் கூட,”விய்ஷ்க்” என பிய்த்து,”ப்பூ” என ஊதி ஒரு கேரி பேக்கில் போட்டுக் கொடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். 

“தம்பி…. கேரி பேக் வேணாம்” என்றேன். 

“பரவால்ல சார் வாங்கிக்கங்க” என்றான். 

மறுத்து விட்டு மருந்துப் பாட்டில், மாத்திரை மட்டும் வாங்கி பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு திரும்பினேன். திடீரென அந்தப் பையனை திரும்பிப் பார்க்கத் தோன்றியது. பார்த்தேன். அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி முடித்திருக்க, அந்தப் பெண் கண்கள் சிலிர்க்க சிரித்துக் கொண்டிருந்தார். நான் அவர்களைப் பார்ப்பதை கண்டவுடன், சிரிப்பை நிறுத்தி தங்கள் வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பது போல் நகர்ந்தார்கள். 



சிற்றுண்டிக் கடையில் ஆறு இட்லிகள் வேண்டுமென்று கூறி பாத்திரங்களைக் கொடுத்தேன். இட்லிகளை பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டு, சாம்பார் மற்றும் சட்னிகளை தயாராக வைத்திருந்த பாலித்தீன் மூட்டை முடிச்சுகளாக அள்ளிக் கொடுத்தார். 

அதை மறுத்து விட்டு, என்னிடமிருந்த பாத்திரத்தில் ஊற்றித் தருமாறு கேட்டேன். பணியாளர் மறுத்தார். ஏனென்று கேட்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளாகத் தான் கொடுக்கச் சொல்லி தங்களுக்கு உத்தரவென்று சொல்லிவிட்டு என்னை எளிதில் ஒதுக்கிவிட்டு, அடுத்த வாடிக்கையாளரை கவனிக்க, நான் ஒருவித வெறுமை நிறைந்த கோபத்துடன், பணம் கொடுக்குமிடத்தில் இருந்த நபரிடம் “ஏங்க நா கொண்டுவந்த பாத்திரத்தில் ஊத்தித் தராம, பிளாஸ்டிக் பொட்டலமா தர்றீங்க” என சற்றே எரிச்சலோடு கேட்டேன். 

“யார் சார் இப்பல்லாம் பார்சல் வாங்க பாத்திரம் கொண்டு வர்ராங்க! எல்லாரும் பிஸி, வர்ற வேகத்ல சட்னு, கட்டி வச்சிருக்க சாம்பார், சட்னினு ஈஸியாக வாங்கிட்டு போறாங்க, அது தான் எங்களுக்கும் ரொம்ப ஈஸிங்க” எனச் சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளரிடம் “சார் குடுங்க” என்று என்னை எளிதாகப் புறந்தள்ளினார். 

மனது சுருங்கி வெளியில் வந்தேன், அங்கேயே மேசை மேல் வைத்து பொட்டலங்களைப் பிரித்து சாம்பார், சட்னியை பாத்திரத்தில் ஊற்றலாமா என்று நினைத்தேன், எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பார்களோ என வெட்கப்பட்டது வெட்கங்கெட்ட மனது. 

சாலையோரம் இறைபட்டு கிடக்கும் கசங்கிய கேரி பேக்குகள் போல் மனது கசங்கிப் போனது. எந்த நாகரிகம், கேரி பேக்குகளுக்காக மனிதர்களை இப்படி அடிமைப்படுத்தியது. நான்கு கடைகளில் நான்கு பொருட்கள் வாங்கினால் நான்கு கேரி பேக்குகள் இலவசமாய்க் கிடைக்க, நமது கைகள் மகிழ்ச்சியோடு வாங்கி ஊஞ்சலாட்டிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறது.

வீட்டுக்கு போனவுடன் கசங்கிய அந்த கேரி பேக் குப்பைத்தொட்டி ஓரத்திலோ, சன்னல் வழியாகவோ தூக்கி வீசப்படுகிறது. சில சமயம் பின்னர் பயன்படுமென்று அரிசி மூட்டை சந்திலே சொருகி வைக்கப்பட்டு கிடக்கிறது. சில நாட்களில் அதுவும் வீதிக்கு வருகிறது. பெரும்பாலும் அந்த நாள் குப்பை கேரி பேக்கில் மூட்டையாகக் கட்டப்பட்டு வாசலில் குப்பை சேகரிப்பவருக்காக வைக்கப்படுகிறது. 

கேரி பேக்குகளுக்கு இணையாக, உபயோகித்தவுடன் தூக்கியெறியும் பிளாஸ்டிக் டம்ளர்களும், பாட்டில்களும், தட்டுகளும் பார்க்கும் இடமெல்லாம் பரவிக் கிடக்கின்றன. பயன்படுத்திய பின் தூக்கி எரியும் பிளாஸ்டிக் பொருட்களில், வெறும் பத்து சதவிகிதம் கூட மறு சுழற்சிக்காக சேகரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையோரமும், பயன் படுத்தாமல் கிடக்கும் காலி இடங்களிலும் படர்ந்து பரவிக் கிடக்கின்றன.
காமுகனின் மனதில் ஊறும் வெற்றுக் காமம் போல், மண்ணோடு ஊடுருவிக் கிடக்கிறது. மண்ணில் ஊறிய இந்த பிளாஸ்டிக் சனியன் மண்ணோடு மண்ணாக மட்கிப் போக எத்தனை நூற்றாண்டுகள் பிடிக்கும்? மிக எளிதாக பிளாஸ்டிக்கை மண்ணில் கலக்கச் செய்யும் கொலை பாதகத்தை மனித சமுதாயம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து கொண்டேயிருக்கிறது. 

மழை கொட்டி வெள்ளம் வடிந்த பின் ஒவ்வொரு சாக்கடை பள்ளத்தின் குறுக்கே இருக்கும் குழாய்களிலும் கொத்துக் கொத்தாக பிளாஸ்டிக் குப்பைகள் குட்டிச் சாத்தான்கள் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான சாட்சியம் மனித சமூகத்திற்கு மிகப் பெரிய எச்சரிக்கை மணி. சாக்கடைகள் அடைபட்டு கலங்கிய கழிவுநீர் சர்வ சாதாரணமாய் வீடுகளுக்குள் வருவதை சிறு முகச் சுழிப்போடு நகரத்தில் மன்னிக்கவும் நரகத்தில் வாழும் மனித சமூகம் சகித்து வாழப் பழகிவிட்டது. 
அடுத்த பத்து இருபது ஆண்டுகளில் இந்த பிளாஸ்டிக் நகரத்தின் தரை முழுதும் பரவி விடலாம். மழை நீர் மண்ணில் செல்ல வாய்ப்பற்று நிலமெல்லாம் மலடாகிவிடலாம். பெய்யும் நீரும் சாக்கடை அடைப்புகளை மேவி ஆற்றுக்கு ஓடி கடலை எட்டிவிடலாம். நகரத்தின் தாகம் தீர்க்க எங்கிருந்து நீர் கிடைக்கும், 2000 அடி தோண்டுவோமா இல்லை 3000 அடி இல்லையில்லை 10,000 அடி அல்லது பூமிப் பந்தின் மறுபக்கம் வரை தோண்டுவோமா, நம் விஞ்ஞானம் தொண்ட வைக்கலாம், ஆனால் விஞ்ஞானத்திற்கு தண்ணீரை சிதைத்து சீரழிக்கத் தெரியும், புதிதாய் ஒரு சொட்டு தண்ணீரை உருவாக்கத் தெரியுமா? 

கடந்துபோகும் வாகனத்தின் பின்னால் எழுதப்பட்டிருந்த வரி என் கண்ணுக்குள் எரிச்சலோடு தகிக்கிறது... 

“மூன்றாம் உலகப் போர் - தண்ணீருக்காக!” 

-
பொறுப்பி :  மீள் இடுகை சற்றே மாற்றப்பட்ட வடிவில்

-

நன்றி: தி இந்து

முதற் சந்திப்பு





சுவாரசியமற்றதாய் நினைத்த
இந்தச் சந்திப்பிற்கு
முதற் சந்திப்பென்றே
பெயரிடலாம்

வெடவெடத்த வார்த்தைகளை
வெட்கம் பூத்த மனதறியும்

இருவருமே விரும்பிடினும்
ஏனோ உடைக்கவில்லை
பாராட்டுச் சொற் கீறலில்
நொறுங்கும் பனிச்சுவற்றை

விரல்களின் உரசல்களில்
மழைச் சாரலும்
கண்களின் ஸ்பரிசத்தில்
வானவில்லுமென
நிமிடங்களுக்கான சந்திப்பு
மணிகளை தின்றிருக்க
முதல் வார்த்தை
நினைவில்லை
முடிவு வார்த்தை
திட்டத்திலில்லை

விலகுகையில் தோன்றுகிறது
எல்லாம் பேசிவிட்டோம்
ஆனாலும்
எதுவுமே பேசவில்லை

*

கீச்சுகள் - 39



இந்த தேசத்தின் ஆகச்சிறந்த வளர்ச்சியை கொசுக்களின் எண்ணிக்கையில் உடனடியாக உணர முடிகிறது.

···

மனிதனின் சிக்கலை மனிதனும் நாயின் சிக்கலை நாயும்தான் நன்கு உணர முடியும்!

···

கச்சத்தீவை மீட்க முடியாது - மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு பதில்.
# பாஸ் அடமானம் வெச்சஇந்திய தீபகற்பத்தைஎப்ப மீட்பீங்க!

···

பயணித்த எல்லாச் சாலைகளும் நான் தெரிவு செய்ததல்ல! இடமும் வலமுமாய் பிரிந்த இடத்தில், ஏதோ ஒன்றில் திரும்பியதும் கூட!!!

···

ஊருக்கு பண்ற அறிவுரையை, ஒரு நாளைக்காவது ஆள் உயர கண்ணாடி முன்னாடி தைரியமா செய்து பார்த்துடனும்!

···

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை!

···

வீட்டுக்காரம்மா ஊருக்குப் போனா 'ஹைய்யா...ஜாலி' னு ஸ்டேட்டஸ் போடத் தெரியுது.
கருமம் 'டீ'க்கு சரியான அளவுக்கு சர்க்கரை போடத்தான் தெரியல.

···

பாலியல் கொடுமைகளுக்குபெண் / அழகு / ஆடை / கவர்ச்சிஎன பல காரணங்கள் சொல்வோர், ”அது ஆணின் கேடுகெட்ட செயல்என்பதை மட்டும் மறப்பது ஏன்?

··· 

பதிலே சொல்லாதவனிடம், ’பதில்கள் இல்லைஎன்று மட்டுமே அர்த்தமில்லை. பதில் சொல்ல வேண்டிய அவசியமற்ற நிலையும் இருக்கலாம்.

··· 

போதும் போய்விடலாம் எனத் தோன்றுகையில்.. இல்லை இருக்கலாம் எனவும் தோன்றுகிறது!

···
 
ஹமாம் சொல்ற ”10 சரும நோய்கள்ஆர்பிடெக் சொல்ற ”6 தசை நார்கள்என்னென்னனு யாருக்காச்சும் தெரியுமா? அட அவங்களுக்கேயாச்சும் தெரியுமா?

···

எதையெல்லாம் உண்மையென நம்புகிறோமோ அது அப்படி இல்லாமல் இருப்பதுபோலவே, எதையெல்லாம் பொய்யென நம்புகிறோமோ அதுவும் அப்படி இல்லாமல் இருப்பதுண்டு

··· 

திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது...” எந்தப் படமா இருந்தாலும் முதல் நாளே டிசைன் பண்ணி வெச்சுக்கிறாங்க!


···

எந்த நோய் வந்தாலும், அப்போதைக்கு அந்த நோய்தான் உலகத்தின் கொடிய நோயாக மனதுக்கு தோன்றுகிறது! :)

···

ஒரு காலத்தில்ஃபேக் ஐடிஎன்பதை, பேய், பிசாசு, பூதங்கள் தான் வைத்திருக்கும், மனிதர்கள் வைத்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன்! :)

···

மழைக்கு ஒதுங்குகையில் மனதுக்கு உகந்தவர்களோடு உரையாடுதலில் உணரலாம் சொர்க்கம் இப்படியும் இருக்குமென!

···

கோபப்பட்டு குழந்தைகள் முறைக்கும் தருணங்களில் கடவுளும் கூட நடுக்கம் கொள்வான்!

···

சமீப காலங்களில் இரண்டு நிகழ்கின்றன...! 1. எதையுமே நிழற்படம் எடுத்துக் கொள்வது! 2. எடுத்த நிழற்படங்களை பார்க்காமலேயே இருந்துவிடுவது!

··· 

வரவர காவிரி மாதிரி ஆயிடுச்சு தூக்கம், மகிழ்ச்சி, காசு, எழுத்து etc திடீர்னு வறண்டுடுது, திடீர்னு வெள்ளமா அடிச்சிக்கிட்டுப் போகுது!

··· 

ஒருசுதந்திரம்என்பது மட்டுமே உன்னை எல்லாத் தவறுகளுக்கும் அனுமதிக்கிறதெனில், அது சுதந்திரம் அல்ல, அதுவும் ஒருவித விலங்கு தான்! #மீள்

··· 

ஒரு வாரக்கடைசியில் ஆடி 18 ஒரு வாரக்கடைசியில் ரம்ஜான் ஒரு வாரக்கடைசியில் சுதந்திர தினம்! யாருப்பா சொன்னது ஆடி மாசம் சரியில்லாததுனு!? :)

··· 

மழை பெய்கையில் உங்களுக்கு வருவதாகச் சொல்லும் நினைவுகள், மழை பெய்யாதபோதும் எங்கள் நினைவில் வரலாம்! # மழை பெய்யாத ஊரில் வேற என்ன செய்றது!

··· 

புது டச்-ஸ்க்ரீன் போனில் எண்களை ஒத்தும்போது தவறுதலாக விழ, ’இந்த புது டச்-ஸ்கீரின் படுத்துதுங்கனு மக்கள் வெட்கப்படுறதே ஒரு அழகியல்தான்!

··· 

சர்னு சீறும் கோபத்தை சட்டுனு பிடிச்சு, கசக்கி வாயில போட்டு மென்னு எச்சிலோடு கலந்து துப்பிட்டு, வேற வேலையைப் பார்க்கனும் என்பதைத்தான் பாரதி "ரௌத்திரம் பழகு"னு சொல்லியிருப்பாரோ!? 

···


துக்குனியூண்டு புழுவிற்குத்தான் பெரிய மீன் சிக்குகிறது!

···

அவ்வப்போதுமின் வெட்டுமூலமாக, தமிழகத்தில்தான் இருக்கிறோம் என்பதை மீண்டும் நினைவூட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

···

வாழ்க்கையெனும் பெருங்கடனை சக மனிதர்களிடம் செலுத்தும் அன்பின் மூலமே அடைக்க முடியும்!

···

ஒரு தவறை உணர்ந்து(ம்) ஏற்றுக்கொள்ள மறுக்கும்போதுதான், வாழைமரத்தடியில் கன்றுகள் முளைப்பதுபோல அடுத்தடுத்த தவறுகள் வேகமாய் முளைக்கின்றன.

···

நெகிழச் செய்யும் இறுக்கச் செய்யும் எது ஒன்றும் தரா இன்பத்தையும் வலியையும் சுகத்தையும் சுமையையும் கலந்தும் தரும்! #அன்பு

···

ஒரு பக்கம் ஆற்றில் கடும் வெள்ளம், மறு பக்கம் குடிநீர் கேட்டு சாலை மறியல்... ஊரையும் நாட்டையும் நல்லாத்தாம்யா வெச்சிருக்கோம்!

···

தமிழ் நாட்டிய(!) உலகம் கண்டுபிடித்த, தமிழ்ப்படுத்த முடியாத அருமையான ஒரு கலைச்சொல்கெமிஸ்ட்ரி”. # 6 முதல் 60வது வரை!

···

குழந்தைகள் குழந்தைத்தனமாய் செலுத்தும் தாயன்புக்கு முன்பு, தாயே கூட சில நேரங்களில் தோற்றுப் போய்விடலாம்.

···

முடியாது’ ’முடியும்என்ற இரண்டுமே நம்பிக்கைதான். ஆனால் இரண்டும் ஒன்றல்ல!

···

5 வருசம் 10 வருசம் படிச்சு IAS ஆகி ஆட்சியர் ஆகுறதுக்குப் பதிலா, 5வது / 10வது மட்டும் படிச்சுட்டு அரசியல்வாதி ஆகிடுங்க! #யாராருக்கோ

···

பொதுவாக அவர்கள் யாரிடமும் கருத்துக் கேட்பதில்லை ஆனாலும் யாரும் அவர்களிடம் கருத்து சொல்லாமல் போவதில்லை!

···

திருமதி தமிழ்” 100 நாள் வெற்றிவிழா கண்ட நிலையில்கூட எவரும் அதை திருட்டு DVDல் பார்க்காமலிருப்பதற்கு இன்னொரு பெயர்தான்அறம்

···

ஓசில கிடைக்குதேனு ஒரே நேரத்தில் மூனு எளநி குடிப்பதைத்தான் 'காஞ்ச மாடு கம்புல பூந்தமாதிரி'னு சொல்லியிருப்பாங்களோ!?

···

இயற்கையின் பெருங்கருணைக்கு முன் மனிதன் ஒரு யாசகன் மட்டுமே!

···

சீக்கிரம் ஒரு சபதம் எடுக்கவேண்டும்இனிமேல் சபதமே போடக்கூடாதுஎன்று!

···

வன்மம் உரமாகட்டும் அன்பு விதையாகட்டும்!

···

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் மிக அழகானதாக, நளினமானதாக இருப்பதில் "பச்சை மிளகாயும்" ஒன்று!

···

முந்தாநேத்து பொறந்த கொழந்தை ஒன்னுக்கு போறமாதிரி 4 துளி மழை அதுக்கு 7பேர் குடை #பெரியோர்களே தாய்மார்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா

···

ஓங்கிய மரங்கள் தாலாட்ட குளிர் தாவியணைக்க மென் இருள் மெலிதாய் உரச மனம் ஒப்பும் நட்புகளோடு புரியும் உரையாடல் உன்னதம்.

···

நிரம்பியோடும் நதி பேரழகு அன்பு தளும்பும் மனம் போல்.

···

உங்கள் மீது நான் புகாரின்றி இருப்பதற்கு முன் என்மீது நான் புகாரின்றிருத்தல் அவசியப்படுகிறது!

···

சாமி பார்க்க லேட்டாகும் எனசிறப்பு தரிசனம்எனும் பெயரில் கௌரவமாக காசு பிடுங்குவதற்குப் பெயரும் லஞ்சம் தான்!

···