தூக்கி வீசப்பட்ட திறவுகோல் - என்விகடன் கட்டுரை




தையோ பெற, எதையோ இழப்பது வாழ்க்கையின் நியதி. ஆனாலும், பெறுவதற்காக நாம் இழப்பது எல்லாம் மிகப்பெரிய இழப்பாக இருப்பது வாழ்வின் நியதி எனும்போது, அது தாங்கமுடியாத இழப்பு என்பதை வெளுத்த விழிகளோடும் அடைத்த மனதோடும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவே இருக்கின்றன.

நானாகவே சூழலின் பொருட்டு நகரச்சிறைக்குள் என்னை அடைத்து, எனக்கான கதவுகளை அடைத்துப்பூட்டி சாவியையும் வெகுதூரத்தில் வீசிவிட்டதாகவே உணர்கிறேன். இழந்தது எனப் பட்டியலிடும்போது, மிக நீண்ட பட்டியல் வரும் என்பதாலும், பட்டியலை வாசிக்கவே அயர்ச்சியாய் இருக்கும் என்பதாலும், அவை எல்லாவற்றையும் அலசும் திராணி துளியும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தாய் மடியின் கதகதப்பைத் தருவதில், கிராமம் சற்றும் சளைத்ததல்ல. விளைநிலமும் விவசாயமும் சார்ந்த வீட்டுச்சூழல் அது. வீட்டைச் சுற்றிலும் சூழ்ந்துகிடக்கும் பலரின் நிலம் எனும்போது, மையத்தில் இருப்பதே ஒரு சோலையில் பூத்த பூ போலத்தான் இருக்கும் அந்தக் காட்சி.

விளைநிலங்களுக்கு மத்தியில் இருக்கும் வீடு என்பதால், ஒருபோதும் கதவுகளையும், சன்னல்களையும் அடைத்துவைக்க வேண்டும் எனும் நிர்பந்தம் ஏதும் இருப்பதில்லை. விடியல்கள் என்பது விடியலுக்கான இலக்கணத்தோடே இருக்கும். வீட்டைவிட்டு வெளியே வரும்போது உலகம் பரந்து விரிந்து கிடக்கும் பொழுதுகள் அவை.

எந்தத் திசையில் பார்வையை வீசினாலும், விதைக்கப்பட்டவையோ, விளையத் தயாராக இருப்பவையோ, விளைந்து நிற்பவையோவந்து கண்களைக் குளிர்விக்கும். கொஞ்சம் பார்வையை விசாலப்படுத்தினால், அருகில் இருக்கும் தென்னை மரங்களோ, வேப்ப மரங்களோ இன்னும் கொஞ்சம் பார்வையை நகர்த்தினால், அருகாமையில் இருக்கும் தடத்தின் வழியே பார்வை நகர்ந்து அதையட்டி இருக்கும் மரவரிசை அல்லது அதில் நடந்து செல்பவர் யார் எனத் தேடல் என ஏதேதோ விழிகளுக்குள் நிரம்பிக்கொண்டேயிருக்கும்.

பார்வைவீச்சை இன்னும் கொஞ்சம் விசாலமாய் வீசினால், ஊர்வழியே கோடுகிழித்துச் செல்லும் சாலையில் நகர்ந்துகொண்டிருக்கும் ஏதாவது ஒரு வாகனம் கண்ணில்படும். இதையெல்லாம் ஒவ்வொன்றாய் கண்ணில் நிரப்பிக்கொண்டிருக்கும்போதே, எங்கிருந்தோ கூவும் ஒரு குயிலோ, இசைக்கும் ஒரு பறவையோ காதுவழியே கடந்து ஊடுருவி, கண்களை அங்கே கவ்விட அழைக்கும்.


ஊருக்கு அருகில் இருக்கும் சாலையில், வழக்கமாய் கடந்துபோகும் பேருந்தின் ஒலிப்பான், தன்னையும் ஒரு முறை நினைவுபடுத்திவிட்டுக் கடக்கும். ஒலி வழியே தன்னை, நம்மை ஈர்த்த பேருந்தை, தூரத்தில் மரங்கள் விட்டுவைத்த சிறு இடைவெளி வழியே பார்க்கக் கண்களைத் தூண்டும்.

இரண்டு மூன்று கல் தொலைவுக்கு அப்பால் இருக்கும் கரடு, மலையின் உச்சியை நோக்கியும் கண்கள் வலைவீசும். எட்டியவரை எதையும் நோக்கும் கண்களுக்குப் பார்க்கும் எல்லா வாய்ப்புகளையும் தங்கு தடையின்றி சூழல் வாரி வழங்கும்.

நகர்ந்து நகர்ந்து நகரத்துக்குள் அடைபுகுந்த எனக்கு இன்றைக்கும் பொழுதுகள் விடிகின்றன. பறவைகள் இங்கு இல்லை. ஏதாவது ஒரு வாகனத்தின் ஒலிப்பானோ, வழக்கமாய்வரும் பால்காரரின் மணி அல்லாத மணியோசையோ, மின்சாரம் தடைபட்டதில் சுற்றமறுக்கும் காற்றாடி திணிக்கும் அமைதியோ, நமக்கு முன்னே எழுந்தவர் இயக்கும் தொலைக்காட்சிப் பெட்டி எழுப்பும் ஓசையோதான் வந்து எழுப்புகிறது.
வீட்டைவிட்டு வெளியேசென்றாலும், உள்ளேயே இருந்தாலும் வீட்டுக்கதவுகளை மூடியே வைத்திருக்கவேண்டும் எனும் பாடத்தைத்தான் நகரம் முதன்முதலில் கற்றுக்கொடுக்கிறது. அப்படியே கதவுகளைத் திறந்து வந்தாலும் வரவேற்க 20 அடி அகல சாலையும் எதிர்வீட்டின் முகப்போ, பக்கவாட்டுச் சுவரோ தயாராக இருக்கும். இடம் வலம் எங்கு திரும்பினாலும், 20 - 30 அடிகளுக்குள்ளேயே உயர்ந்தோங்கி நிற்கின்றன இன்னொரு வீட்டின் சுவர்கள்.

இங்கு விழிகள் வலைவீசிட அடிக்கணக்கிற்குள் தொலைவுகள் சுருங்கிக்கிடக்கின்றன. அதிலும் நாம், ரொம்பவும் மெனக்கெட்டு வளர்த்தெடுக்கும் அடுத்த தலைமுறைக்குத் தங்கள் விழிகளின் பார்வையைச் செலுத்தி, அதன் பார்வைத்திறனைப் பரிசோதிக்க, 10 - 20 அடி தூரத்துக்குள் வீற்றிருக்கும் தொலைக்காட்சியும், சில 10 அடிதூரத்திற்குள் எழும்பி நிற்கும் சுவர்களும் மட்டுமே வாய்ப்பாக இருக்கின்றன.


பள்ளிசெல்லக் கிளம்பும் குழந்தைகளை வீட்டு வாசலுக்கே வரும் வாகனம் மிக அழகாய் தனக்குள்ளே பதுக்கி, ஊரையும் உலகத்தையும் காட்டாமல், உயரமாய் சுற்றுச்சுவர் இருக்கும் பள்ளிக்குள் உதிர்த்துவிடுகின்றது. எப்போதாவது விளையாட அனுமதிக்கும்போது, அதிகபட்சமாக மைதானத்தின் நீளத்தை மட்டும் இமை சுருக்கி கூர்ந்துநோக்கிட அந்தக் குழந்தைகளின் பிஞ்சு விழிகளுக்கு அனுமதியுண்டு.

'யான் பெற்ற துன்பம்(!) எம் பிள்ளை பெற்றிடலாகாது’ எனும் மாய மயக்கத்தில், எனக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பிள்ளைகளுக்குக் கிடைத்திடாமல் முறித்துப்போடுகிறேன் என்பதை அறியாமாலே, நலமாய் வாழ்வதாய் நம்பிக்கொண்டிருக்கிறேன் நகரத்துச் சிறைக்குள். நானே பூட்டிக்கொண்டு தூக்கியெறிந்த திறவுகோல் ஏதோ ஒரு எட்டமுடியா தொலைவில் கொஞ்சம் கொஞ்சமாய்த் துருவேறிக்கொண்டிருக்கின்றது. 
எப்போதாவது மனது விசாலாமாகித்  தேடும்போது, அங்கே குவிந்துகிடக்கின்றன ஓராயிரம் திறவுகோல்கள் ஒரு குப்பைமேடாய். அவைகள் ஒவ்வொன்றும் மெதுவாய் எழுந்து மிரட்டும் தோரணையில் பயந்து பதுங்கிக்கொள்கிறேன் அதே சிறைக்குள்.

விடுதலை என்று அறியாமலே எப்போதாவது சில மணி நேரம், கிராமத்துக்குள் புகுந்து வருகிறேன், நகரத்தின் வீச்சம் சற்றும் தீராமல், மீண்டும் ஓடிவந்து பதுங்கிக்கொள்ளும் பதட்டம் நிறைந்த பயத்தோடே!


-

ன்றி : என்விகன்

-

மறக்க முடியாத பெண்கள் - குங்குமம் தோழி



படம் : குங்குமம் தோழி ஃபேஸ்புக் பக்கம்


மிக வேகமாக வீங்கி வரும் இந்தப் பெருநகர விளிம்புகளில் நீங்கள் அது போன்ற பெண்மணியைப் பார்த்திருக்கலாம். 

கருத்துப்போய் இருப்பார்கள். புடவையின் வர்ணம் அழுக்கின் வர்ணமாக மாறியிருக்கும். ரவிக்கை உடலைவிட ரொம்பவும் தளர்ந்திருக்கும். நம்மிடமிருந்து தொலைதூரத்திற்கு அந்நியப்பட்டிருப்பார்கள். எனக்கும் அந்நியப்பட்டுத்தான் இருந்தார்கள், மாநகராட்சி குப்பைத்தொட்டி ஒன்றை மிக நேராக என் அலுவலக வாசலின் எதிர்புறத்தில் வைக்கும் வரை.

குப்பைத் தொட்டி வந்த சில நாட்களில் ஒவ்வொருவராய் அதனருகே எப்போது சுற்றிக்கொண்டே இருப்பதைக் கண்டேன். யாராவது ஒருவர் எந்நேரமும் குப்பைத்தொட்டியைக் குடைந்துகொண்டே இருப்பதைக் காணுகையில் என்னதான் நடக்கிறது அங்கே என்று அறியும் ஆவலும் எழுந்தது. 

காலையில் ஒரு ஆள், முன் மதியத்திலிருந்து முன் மாலை வரை ஒரு பெண், மாலையில் ஒரு வயதான நபர் என மாறி மாறி சில நேரம் தொட்டிக்குள்ளே, பலநேரம் தொட்டியருகே நின்று பாட்டில்கள், பிளாஸ்டிக் என விதவிதமாய் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டேயிருப்பதைக் காணுகையில், 

குப்பைத் தொட்டியும் ஒரு அமுத சுரபி, போதி மரமென புரிபட ஆரம்பித்தது.

அந்த நடுத்தர வயதைக் கடந்து, கூடுதல் முதுமையைத் தன்மேல் சுமந்துகொண்டேயிருக்கும் ஒற்றைக்கண் பெண்மணி யாரோ ஒருவரின் சாயலை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தார். ஒருமுறை யாரோ ஒரு பெண்ணிடம் குடுமிப் பிடி சண்டை, ஒருமுறை அருகிலிருக்கும் தேநீர் கடையில் சிரிக்கச் சிரிக்க கிண்டல், ஒருமுறை பரபரப்பாய் ஓடிவந்து குப்பைத் தொட்டியோரம் மண்டிபோட்டு உட்கார்ந்து அப்படியே ஒரு ஹாஃப் பாட்டிலைத் திறந்து கடகடவெனக் குடித்தது என்று பல பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்தார்.

அன்று ஒரு வழக்கமான நாள்தான், அந்தப் பெண்ணும் வழக்கம் போல் கிளறிக்கொண்டிருந்தார்.  நான் நிற்கும் இடம் கொஞ்சம் உயரமானது என்பதால் எதைக் கையில் எடுத்தாலும் தெரியவே செய்யும். எதையோ கிளறிக்கிளறி ஒரு எச்சில் வாழையிலையில் சேகரித்துக் கொண்டிருந்தார். அருகாமை உணவகங்களிலிருந்து கொட்டப்படும் எச்சில் இலைகளிலிருந்து உணவுகளைச் சேகரிக்கப்பது புரிந்தது. ஆனால் எதற்காக? சாப்பிடுவதற்காக இருக்குமோ என்றவொரு பதட்டம் என்னுள் சட்டென புகுந்தது. 

வயிற்றில் காற்றுப் பந்து, மனதில் திடீர் எடை என ஒரு சிரமத்தை உணர்ந்தேன்.

என்ன செய்யலாம்..?? ஒன்றும் பேசாமல் உள்ளே போயி உட்கார்ந்துக்கலாமா? 
ஒருவேளை அதை உண்ண ஆரம்பித்தால், சப்தம்போட்டு தடுத்து கொஞ்சம் காசு கொடுத்து பக்கத்து மெஸ்ஸில் சாப்பிடச் சொல்லலாமா என ஏதேதோ மனதில் ஓடிய கணத்தில், இருகைகளிலும் இலையை ஏந்தி குப்பைத்தொட்டி அருகே குனிந்து கீழே வைத்தார். உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிச்சுட்டா என்ன பண்றது எனப் பதட்டத்தோடு போலாமா, வேணாமா எனத் தடுமாறிய கணத்தில் வாயைக் குவித்து ஏதோ ஒரு ஒலி எழுப்பினார், குப்பைத் தொட்டியின் இன்னொரு புறம் இருந்த ஒரு நாய் ஓடிவந்தது, அதற்குக் கை காட்டிவிட்டு மீண்டும் குப்பைத் தொட்டியைக் கிளற ஆரம்பித்தார், நாய் வேகமாய்த் தின்ன ஆரம்பித்தது.

எனக்குள் இனம்புரியா ஒரு
பதட்டமும்...
வெளிச்சமும்...
கலக்கமும்.... 
கனிவும்...
அன்பும்...
குற்ற உணர்வும் ...
கலந்து தோன்றி வித்தியாசமாக உருளத் தொடங்கியது. 

அவளை மானசீகமாக வணங்க ஆரம்பித்தேன்..

தெருப்புழுதிக்குள்.. 
ஒதுக்கப்பட்ட பதர்களுக்குள்.. 
எச்சில் ஒழுக்குகளுக்குள்..
ஊராரின் கசம் அனைத்திற்குள்.. 

ஒரு ஞான போதியாய் ஒளிர்ந்தாள் அவள்..




-0-
குங்குமம் தோழி “மறக்க முடியாத பெண்கள்” தொகுப்பிற்காக எழுதியது.