வாய்ச்சொல்லில் வீரரடி!

காலையில அலுவலகம் முன்பக்க சாலையில் உலகமே இடிந்துபோகிற மாதிரி கத்தல். நூறு அடி தூரத்திற்குள், இரு டாஸ்மாக் இருக்க, இது அடிக்கடி நடப்பதுதான்.  ஆனால் 8 மணிக்கே எப்படி இப்படி சப்தம்? டாஸ்மாக் திறந்திருக்க மாட்டாங்களே? நேற்றே வாங்கி வெச்ச சரக்கா இருக்குமோ என்று ஆர்வமா(!) ஓடிப்போய் பார்த்தால் 20 வயது ஆண்கள் இருவர். ஒருவர் அதிகுள்ளம், ஒருவர் அதி உயரம். உயரமான ஆள் கொஞ்சம் அமைதி காத்தது போல் இருந்தது. பைக்கில் இருந்து இறங்கக்கூட இல்லை. குள்ளமாய் பர்முடாஸ், பனியன் போட்டிருந்த பையன் மாதிரி இருந்த ஆள் குதிகுதியென்று குதித்துக் கொண்டிருந்தார். அடைபட்டிருந்த கோபம், அணை உடைத்து வெளியேறுவதுபோல் ஓர் ஆக்ரோசம்.



ஒரு மூன்று நான்கு நிமிடம் கத்தலோ கத்தல். சவாலோ சவால். வெற்றிக்கொடிகட்டு படத்தில் வடிவேலு வாங்கிய திட்டை விட அதிகமோ என்றும் தோன்றியது. என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியாமல் பேந்த பேந்த முழித்துக்கொண்டே நிற்கும்போது, அருகில் குப்பை அள்ளிப்போடும் மாநகராட்சி தொழிலாளர்களும், மூட்டை தூக்குவோர் சங்க ஆட்களும் இருவரையும் விலக்கிவிட்டு சமாதனப்படுத்தி அனுப்பினர். 

கூட்டம் கலைந்தபிறகு என்னவென்று விசாரிக்க, பாதளச்சாக்கடைக்கு தோண்டி மூடியும் மூடாமலும், மேடுபள்ளமாய் உள்ள சாலையில் எதிரெதிராகக் கடக்கும்போது ஒருவருக்கொருவர் உரசுகிற மாதிரி வந்துட்டாங்களாம். அதில் உயரமாய் இருந்த ஆள் ஏய் என்று பதட்டத்தில் கத்தியிருக்கிறார். குள்ளமாய் இருந்தவர் சில அடிகளில் சட்டென தனது வண்டியை நிறுத்திட்டு, “டேய்… என்னடா ஏய்னு சொல்றேனு” சண்டையை ஆரம்பித்ததாக ஒருவர் திரைக்கதை வாசித்தார். ஒருவர் “ஏய்” சொன்னதுக்கு… ”டேய் என்னடா ஏய்னு சொல்றே” அடடா இது சூப்பரா இருக்கே எனத் தோன்றியது.

இந்தக் கோபத்தை, மூன்று மாதங்களுக்கு முன்பு பாதாளச்சாக்கடைக்கு தோண்டி மூடியும் மூடாமலும் விட்டதால் வளைந்து நெளிந்து சென்று உரசும் சூழலை இன்னும் அனுமதித்திருக்கும் மாநாகராட்சி மன்றத்திடமோ, அலுவலகர்களிடோம் காட்ட திராணியில்லாமல்தான், ஓங்கிய குரலில் அதுவும் இத்தனை காலையில் ஆக்ரோசமான சண்டைகளைப் போட்டு வீரத்தை தீர்க்கிறோம் என்பது ஆச்சரியமாக இருந்தது.

”பார்த்தா படிச்சவங்களாட்ட இருக்கு, அவிய அடிச்சுக்க, படிக்காத நாமதான் வெலக்கியுட வேண்டீதா இருக்கு” மூட்டை தூக்கும் ஒருவர் சிரித்தவாறே சொல்லிக்கொண்டு நகர்ந்தது என்னையும் அறைந்தது.

ஆர்வமாய் ஓடிவந்து வேடிக்கை பார்த்த எனக்கு ஏன் அவர்களை விலக்கிவிடத் தோன்றவில்லை. ஒவ்வொரு வீதிச் சண்டைகளிலும் பேண்ட் சட்டை போட்ட ஆட்களைவிட, இதுபோன்ற வீதி சார்ந்த ஆட்களே விலக்க முற்படுகின்றனர். அதிலும் சிறிது நேரத்திற்கு முன்பு அந்தச் சண்டை குறித்து என் மனது விபரீதமாய் கற்பனை செய்ததை நினைக்க அறுவெறுப்பாகவும், வெட்கமாகவும் இருந்தது, எகிறிக்கொண்டிருந்த அந்த குள்ள ஆள் உயரமான ஆளை எகிறி அடிப்பது போன்றும், அப்போது அந்த உயரமான ஆள் குள்ளமான ஆளை கழுத்தோடு அமுக்கிப் பிடித்து கும்முகும்மென்று கும்முவது போலவும், விநாடி நேரம் மனதுக்குள் படமாய் விரிந்து நீடித்த காட்சியை நினைக்க என் கற்பனைக்குதிரை மீது சொல்லொணா வெறுப்பு வந்தது. 

வீதிச் சண்டையைவிட பெரிய சண்டை எனக்குள்ளே நிகழத்தொடங்கியது!

-

தேங்கிக் கடக்கும் கணம்

இன்னும் சன்னல் திரைகளை ஒதுக்கவில்லை. அந்த வெளிச்சம் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவித உறக்கக்கலைப்பைத் தரலாம். எதிர்வீட்டு குட்டி நாய் சன்னமாய் குரைக்கிறது. க்ரீச் க்ரீச்சென ஒரு சைக்கிள் கடந்துசெல்லும் ஓசை கேட்கிறது. அநேகமாக பேப்பர் போடும் ஆளாக இருக்கலாம். பால், பேப்பர் என எல்லாவற்றிற்கும் எக்ஸல் சூப்பர் வந்த பிறகும் சைக்கிளில் பேப்பர் போடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அலுவலத்தின் எதிர் டீக்கடைக்கு மாலைமலர் பேப்பர் போடும் ஒல்லி மனிதர் நினைவுக்கு வந்தார். வேட்டியை மடித்துக்கட்டியவாறு வெவ்வேறு சாலைகளில் சைக்கிள் மிதிக்கும் அவரைப் பார்ப்பதுண்டு.

வெளிச்சம் சூழும் ஒரு நாளை எதிர்கொள்வதில் என்னென்ன சுவாரசியம் இருக்கின்றது என்பதைக்கூட யோசிக்க நேரமின்றி ஓடிக்கொண்டுதானே இருக்கின்றோம். ஏனோ இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்து ஏதாவது எழுத வேண்டுமென்று மனதில் ஒரு ஆசை. ஆனால் எதை எழுத?. எழுதி, செப்பனிடாமல் போட்ட கட்டுரைகள் நான்கைந்து இருக்கின்றன, கிட்டத்தட்ட திருப்தியுற்ற கவிதைகள் பத்துக்கும் மேல் கிடக்கின்றன. முடித்த ஒரு சிறுகதையும், சில பத்திகளோடு கிடக்கும் சிறுகதைகள்(!) மூன்று இருக்கின்றன

எழுதி கிடப்பில் போட்ட எதையும் எடுத்துச் செப்பனிட, செதுக்கிட முனைகையில் ஒரு சோம்பேறித்தனமும் அயர்ச்சியும் வந்துவிடுகிறது. ஆனாலும் எழுதனும் என விரல்களின் நுனிகள் தவித்தபோது இந்த விடியலைத் தவிர வேறு எது குறித்தும் எழுதத் தோன்றவில்லை.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் முழுதாய் பொழுது விடிந்துவிடும். இரவுகள் அடைகாத்த ரகசியங்கள் அனைத்தும் விலகுவதுபோலே, வெளிச்சம் இண்டு இடுக்கெல்லாம் பரவும். இருளும், உறக்கமும் ஒருவித வரம், அமைதி. உறக்கம்போல் நம்மை ஆசுவாசப்படுத்துவதும், அணைத்துக்கொள்வதும் எதிலும் இல்லை என மனதில் தோன்றியது.

ஒருமுறை காவிரித் தடுப்பணையில், மதகிடுக்கில் கசிந்துவரும் நீரில் குளித்த உற்சாகம் அப்படியே மனதிற்குள் நிரம்பியது. அது ஒரு கடும் மதிய வேளை. கசகசத்த வெயிலில் அவ்வழியே வந்துகொண்டிருந்தபோது, குளிக்கும் எந்தத் திட்டமுமின்றி, சட்டென தண்ணீரைப் பார்த்தவுடன், எல்லாம் உருவிப் போட்டுவிட்டு மதகிடுக்குள் பீறிடும் நீரில் நனைந்து, விழுந்து, புரண்டு என திகட்டத் திகட்டக் குளித்தது நினைவிற்கு வந்தது. அதற்கென நேரம் ஒதுக்கி ஒருமுறை போய்வரவேண்டும் எனவும் தோன்றியது. திட்டமிடாமல் அமையும் சந்தர்ப்பங்களைவிட, திட்டமிட்டு, எதிர்பார்த்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நிச்சயமாக சுவாரசியம் குறைவுதான்.



ஒரு விடியலை கொஞ்சம் லயித்து எதிர்கொள்வதில்தான் எத்தனை சுகம். இது எல்லா நாட்களிலும் கை வந்துவிடுகிறதா என்ன? இதோ என்னைக் கடந்துபோகும் இந்த நொடி எத்தனை புதுமையானது. ஆனால் கடந்தது கடந்ததுதானே. அற்ப ஆயுள் கொண்டதுதான் ஒரு கணமா.

இதோ இப்போது தழுவிச்செல்லும் காற்று, சன்னல் வழியே கசியும் இந்த மென் மஞ்சள் வெளிச்சம், மின்சாரம் தொலைந்த நகரத்திற்கே, வீட்டிற்கேயென்று இருக்கும் பிரத்தியேக அமைதி, அந்த அமைதியில் எங்கிருந்தோ கடந்து வரும் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத, அறிமுகமற்ற பறவையின் சப்தம், இவை எல்லாமே இப்போது, இந்தக்கணம் உருவான புதியவைகள்தானே… கடந்து செல்லும் அவை கரைந்துபோகும் ஒன்றுதானே. கொஞ்சம் ரசிக்க முற்பட்டால், இதில்தான் எத்தனையெத்தனை பொதிந்து கிடக்கின்றன.

ஆனாலும் நம்மை ஏதோ ஒன்றுதானே ஆண்டு கொண்டிருக்கின்றது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், நம்மை நாமே ஆளும் வாய்ப்பையும் கூட நாம் முற்றிலும் தூக்கிப் போட்டுவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது. ஒரு வல்லரசின் கீழ் சிக்குண்ட ஒரு காலணி நாடு, எப்படி ஒன்றைச் சுயமாய் சிந்தித்து, சுயமாய்த் திட்டமிட்டு செயல்படுத்திட வாய்ப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றனவோ, அதற்குச் சற்றும் கூடவோ குறையவோ நாமும் தடுக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்பதுதான் மிகுந்த அயர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு வரியை எழுதக்கூட யோசனை வந்துவிடுகிறது. ஒரு காலத்தில் போகின்ற போக்கில் எழுதிய வார்த்தைகளை, இன்றைக்கு எழுத ஏனோ தயக்கம் வந்துவிடுகிறது. நாம் நம்மேலோ, யாரோ நம்மேலோ கட்டமைத்திருப்பதாக நினைக்கும் அந்த மாய பிம்பமும் கூடக் காரணமாக இருக்கலாம். கண் விழித்த பொழுதிலேயே, அடுத்தடுத்துச் செய்தாக வேண்டிய காரியங்கள் மூளைக்குள் வரிசை கட்டி நிற்கும்போது, இயற்கையாய் நம்மைத் தழுவும் இவைகளில் லயித்து ரசித்துக் கடப்பது எங்கனம்? நானும் கூட எழுத்தை ரசிப்பதாக, எழுத்தில் லயிப்பதாக நினைத்துக்கொண்டு எதையோ நிரூபிக்க, நிறுவ இப்போது எழுதிக் கொண்டிருக்கின்றேனோ என்றும் சந்தேகமாக இருக்கின்றது.

சமீபத்தில் வண்ணதாசன் நாஞ்சில்நாடனுக்கு எழுதிய கடிதத்தில்//உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும்சீக்குஉண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல். ஆளை உள்ளே இழுக்கும்.// எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதை வாசித்ததில் இருந்து, இந்த சொரிமணல் எனும் வார்த்தை மட்டும் மூளைக்குள் அப்படியே ஒட்டிக்கொண்டது. பெரும்பாலான நேரங்களில் சிந்தனைக்குள் அது சுழன்றடித்துக் கொண்டே இருக்கின்றது. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள்பிளஸ், அரட்டை, அவ்வப்போது பேசும் இணைய நட்புகள் குறித்தவை, SMS, தொலைக்காட்சி செய்தி சானல்கள், அரசியல் பகடிகள், அரசியல் எரிச்சல்கள், அரசியல் குறித்த கையாலாகத்தனங்கள் என எத்தனையெத்தனையோ சொரிமணல் சூழல்கள், பாதத்தின் கீழே அப்படியே உள்வாங்க காத்திருக்கின்றதோ எனவும் தோன்றுகிறது.

இணையமும், அதில் இருக்கும் எழுத்தின் ருசியும் தனக்குள்ளே இழுத்து இழுத்து தின்றுகொண்டிருக்கின்றது என்பதை நினைக்கும்போது, இரையாகிக் கொண்டேயிருப்பது குறித்தும் ஒருவகையில் பரிதாபமாகவும் இருக்கின்றது. இப்போது எழுதிக்கொண்டிருப்பதும்கூட அப்படிப்பட்ட சொரிமணல் தானோ எனும் சந்தேகத்தை நேர்மையாகவே எழுப்ப வேண்டியிருக்கின்றது.

கணினியின் பின் புலத்தில் சமீபத்தில் தரவிறக்கம் செய்த Laya Project காணொளிகள் சில ஓடிக்கொண்டிருக்கின்றன. இசை மட்டும் காதுகளில் தளும்பிக் கொண்டிருக்கின்றது. பலதரப்பட்ட வகையான இசை, குரல், சூழல் என அதுவும் ஒரு சொரிமணலாக மீண்டும் மீண்டும் என்னை தன்னுள் இழுத்துக்கொண்டிருக்கின்றது. எத்தனையாவது முறையாகக் கேட்கிறேன் என்று தெரியவில்லை. எத்தனையாவது முறையில் அது சலித்துப்போகுமென்று தெரியவில்லை.

அறையின் கதவு திறக்கப்படுகிறது. நிமிர்ந்து பார்க்கும்முன்னே நாசி தழுவும் வாசனை, காபியின் வருகையை உணர்த்துகிறது. இன்ஸ்டன்ட் காபித் தூளின் கரைந்த வாசனை மெல்ல நாக்கில் ஒரு சுவையை முன்கூட்டியே கற்பனை செய்ய வைக்கிறது. அருகில் படுக்கையில் கவிழ்ந்தவாறு மகள் உறங்கிக்கொண்டிருக்கிறாள். சிறிது நேரத்திற்கு முன் போர்த்திவிட்டு வந்த போர்வை சுருண்டு வித்தியாசமான வடிவில் கிடக்கின்றது. காபியை அருந்துமுன்னே மிகமிகச் சின்னதாய் ஒரு தயக்கம் வருகிறது. காபியில் இருப்பது ப்ரிட்ஜில் இருந்த பால்தானே. பால்காரர் வர ஏழுமணிக்கு மேலாகும். ப்ரிட்ஜ் பாலுக்கென்று ஒரு சொதப்பல் சுவை இருக்கத்தான் செய்கின்றது. அதைச் ’சுவை’ என்று சொல்லலாமோ? எப்படிச் சொல்ல முடியும்….

அநேகமாக நான் இதையெல்லாம் எழுதிய நேரத்தில், இதை வாசிக்கும் நீங்கள் விழிக்காமல் இருந்திருக்கவும் சாத்தியமுண்டு. இதை வாசிக்கும் சாத்தியம் ஏற்படும்போது நகரத்தின் பரபரப்பும், நாளின் அழுத்தமும் கூடி வேறொரு மனோநிலையில் இருக்கக்கூடும். வாசிக்கும்போது குறைந்தபட்சம் ஒரு சிறு புன்னகை இதழோரம் சிந்தும் சாத்தியம் என்பது மட்டுமே எதிர்பார்ப்பு.

வேறென்ன…

இந்த நாளும் சிந்தனைகளாலேயே நிரம்பி, வெளியேறி, அழுத்தம் கொடுத்து, வெப்பமூட்டி, அலையடித்து, நனையவைத்து, குளிரூட்டி, சோகப்படுத்தி, மகிழ்வூட்டி என நகரப்போகின்றது.

-0-

கீச்சுகள் - 27


யார்யாரோ ஊட்டும் அவநம்பிக்கைகளை விட, யாரோ ஊட்டும் நம்பிக்கையில்தான் நகர்கின்றன நாட்கள்!

-



மரணம் பொதுவானது

-

உலகத்திலேயே வெளியான முக்கால் மணி நேரத்துலவெற்றி நடைபோடுவது தமிழ் சினிமா ஒன்றாகத்தான் இருக்கமுடியும்
#இந்த வெற்றிநடை ரவுசு தாங்க முடியல

-

அதுவேற’! இதுவேற’! #உலகத்தின் மிகஅரியதத்துவம்!

-



நிரம்பியிருக்கும் பணப்பைகளை விட, காலியாக இருக்கும் பணப்பைகளே 'சுமையானது

-

வாராத மழை வருமா!?. குளிக்காத என் பைக் இன்றாவது குளிக்குமா!?
#ய்ய்ய்யேக்கம்!

-

ஒருவரையே Blog Follow பண்ணி, Google+ Add பண்ணி, Twitter Follow பண்ணி கடைசியா Facebook Friend ஆக்கும்போது புரிகிறது உலகம் உருண்டையேதானு!

-

தக்கிமுக்கி IRCTC வேலை செஞ்சா பேங்க்காரன் பணம் தரமாட்டேங்கிறான். பேங்க பணம் தர்றேனு சொன்னா IRCTC தொங்குது.
#பேங்ல வேற காசு இருக்கனுமாமே!

-

பெரும்ப*லான சமரசங்கள், அதில் கிடைக்கும் லாபத்தை கவனத்தில்கொண்டே அமைகின்றன.
# * குறில் அல்லது பா நெடில் :)

-

என்கிட்ட  நல்லா நோட் பண்ணுங்க...  என்கிட்ட.... ஒருத்தர் போன்ல பேசிட்டே, அங்கே "நான் important call இருக்கேன், disturb பண்ணாதீங்கனு யார்கிட்டையோ சொன்னப்பத்தான் புரிஞ்சுது, ஊர்ல அடிக்கடி பலபேரு சொல்ற important callக்கு உண்மையான அர்த்தம் என்னானு! :))))



-

கரண்ட் கட் ஆனா (பதிலும்கூட வராதுனு தெரியாம) EB ஆபிஸ்க்கு போன் போட்டு, “கரண்ட் எப்ப சார் வரும்னு கேட்கும் அப்புராணிகள் நிறைந்த உலகம் இது

-

அழுக்கும் ஒரு நிறம் தான்!

-

Good Morning. Have a "Good Day"னு சொல்றதுக்குப் பதிலா Good Morning. Have a "Milk Bikis" Day-னு மாத்தி சொல்றது தப்பா! தப்பா!! தப்பா!!!?

-

எதிர்பார்த்த அளவு எது நமக்கு கிடைக்கலையோ அதுபத்தியே தான் சிந்தனை, பேச்சு இருக்கும் #காதல் - முத்தம் - குடி - பணம் - பதவி - இன்ன பிற! :)


ஹேப்பி நியூ இயர், ஹேப்பி கவ் பொங்கல், ஹேப்பி டமில் நியூ இயர், அப்புறம்... ஹேப்பி விநாயகர் பர்த் டே-னு கூட சொன்னீங்க...  சரி பரவாயில்ல... இப்ப ஹேப்பிபந்த்டே சொல்றீங்களே...  # உலகத்துல நீங்கெல்லாம் அம்புட்டு ஹேப்பியாவாடா இருக்கீங்க!

-

ஆழ்ந்த உறக்கம் ஒரு வரம்.


-

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து மட்டும் SMS சொல்லுங்க, கொஞ்சம் கொழுக்கட்டை, சுண்டல் கொடுத்தா கொறஞ்சா போய்ருவீங்க! # வரும் ஆனா வராஆஆதுடா!

-

அள்ளிக் கொடுத்தாலும், கிள்ளிக் கொடுத்தாலும்அன்பு = அன்பு

-



இறுதியாகக் கணக்கிட்டுப் பார்த்தால், வாழ்க்கையில் இழந்ததும், ஈட்டியிருப்பதும்வெறும்மனிதர்கள் மட்டுமே!

-

திருவள்ளுவர் ஏன் 1330 குறள்களோடு மட்டும் நிறுத்திவிட்டார்? # எதிர்காலத்தில் மனப்பாடம் செய்ய வேண்டிய பிள்ளைகள் பாவம் எனக்கருதி இருக்குமோ?


-

ஒரு கை பிடி திராட்சையை ஒன்றாய் தின்றாலும், ஒவ்வொன்றாய் தின்றாலும் அளவு ஒன்றுதான், ஆனால் சுவை வேறுவேறு

-

இலவசமாக ஒருநாள் கிடைக்கும் மரணத்தை, ஏன் சிலர் அவசர அவசரமாக விலை கொடுத்து வாங்குகிறார்கள்!

-


கடலை மிட்டாய்க்குள் இத்தனை சுவையை, ஒளித்து வைத்த(இறை)வன் ரசனை மிகுந்தவனாகத்தான் இருப்பான்

-

ஒரு கையில் புகை வழியும் சிகரெட், மறுகையில் ஆவி பறக்கும் தேநீர். அழைக்கும் அலைபேசியை ஆட்கொள்ள மூன்றாம் கை இன்றி தவிக்கிறான் தேநீர்க்கடையில்!

-

மத்திய அரசு செய்யும் காரியங்கள் குறித்து உங்களுக்கு சரிவர புரியவில்லையெனினும் கவலைப்படாதீர்கள், அது சர்வ நிச்சயம், உங்களுக்கு எதிரானதேதான்!

-