தங்க நாற்கரச்சாலைகளின் தணியாத அகோர உயிர்ப்பசி

அதகளமாய் நிலங்களைக் கையகப்படுத்தி, எல்லாவற்றையும் இடித்துச் சிதைத்து, எல்லாவற்றிலும் மண் நிரப்பி, எந்திரங்களால் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இரண்டு பெரிய, இரண்டு சிறிய பட்டைக் கோடுகளாக நீண்டு கிடக்கிறது. எங்கள் பகுதியில் சேலத்திலிருந்து துவங்கிய தேசியநெடுஞ்சாலை 47 செங்கப்பள்ளிவரை 100 கி.மீ தூரத்திற்கு நீண்டு விரிந்து கிடக்கிறது ஒரு பசியெடுத்த பாம்பு போல. காலம்காலமாய் புழங்கியவனைக்கூட அந்நியப்படுத்திவிட்டு, அவன் புழங்கவும் காசு கேட்க நவீனத் தடுப்பு, கணினி துப்பும் துண்டுச் சீட்டு என சுங்கம் வைத்து சுகமாய் வசூலித்துக்கொண்டு சுறுசுறுப்பாய் ஓட்டச் சொல்லி அடிமைப் படுத்துகிறது மிகப் பெரிய நிறுவன முதலைகள்.

சமீபத்தில் அமைக்கப்பட்ட நான்குவழிச் சாலையில் கேவலமான ஒரு வடிவமைப்பு என்றால், யோசனைகள் இன்றி 47ம் எண் தேசிய நெடுஞ்சாலைக்கு விருது கொடுக்கலாம். சேலத்தில் முறுக்குச் சுத்துவது போல் சுற்றி மேற்கு நோக்கி துப்பும் தேசிய நெடுஞ்சாலையின் முதல் கோணலாய் திருச்செங்கோட்டுக்குப் பிரியும் வீரபாண்டிப் பிரிவில் மேம்பாலம் இன்றி எமனின் சமையல் கூடமாய் விரிந்து கிடக்கிறது. அடுத்தடுத்து ஊர்களுக்கு அருகே அமைக்கப்பட்டிருக்க வேண்டிய பக்கவாட்டுச் சாலைகள் ஆங்காங்கே கட்டமைக்கப்படாமல் அல்லது அமைக்கும் திட்டமே அற்று குழப்பத்தோடு கிடக்கிறது. 


குறிப்பாக சங்ககிரிக்குப் பிரியும் இடத்தை ஒரு பொடக்காலி சந்துபோல்,, போனால் போகிறதென்று எந்த இடத்தில் பிரிகிறது என்றே தெரியாமல் அமைத்திருக்கும் பெருமையை என்னவென்று சொல்வது. பக்கவாட்டுப் பிரிவுச் சாலைய கவனிக்கத் தவறினால் சங்ககிரி, ஈரோடு பிரிவு என எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு ஏழெட்டு கி.மீ தாண்டிதான் சங்ககிரியைத் தொலைத்த நினைவே வரும்.

அடுத்து காவிரி ஆற்றுப்பாலம் அருகில் குமாரபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் வலது பக்கம் திரும்ப பக்கவாட்டு இணைப்புச் சாலை இல்லாததால் சேலம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று உயிரைக் கையில் பிடித்து வலது பக்கம் அரைவட்டமாகத் திரும்பி, அதன் பின் இடதுபக்கச் சாலையில் தடம் பதித்து வருவதற்குள் சேலம் நோக்கிச் செல்லும் வாகனத்தில் பட்டுச் சிதறாமல் இருந்தால் அது உங்கள் தலைமுறை செய்த புண்ணியம். 

அடுத்து லட்சுமி நகர் வட்டச் சந்திப்பைக் கடந்து பாலம் ஏறும் முன் இடதுபக்கமாய் ஈரோட்டுக்குப் பிரிய முட்டாள் தனமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒற்றைச் சாலையில் பிரியத் துணியும் வாகனங்களில் உரசாமல், தப்பித்து பாலம் ஏறினால்தான் கொஞ்சம் சுகமாய் சுவாசிக்க முடியும். அதே இடத்தில் ஈரோட்டிலிருந்து அக்ஹரகாரம் வழியாக வரும் வாகனங்கள் எதும் கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தங்களை இணைத்துக்கொள்ள பக்கவாட்டு இணைப்புச் சாலை இல்லை. அப்படியே இணைய வேண்டிய தேவை இருப்பின் ரொம்ப தூரம் மேட்டூர் பிரிவுச் சாலையில் சென்று லட்சுமி நகர் வட்டத்தில் சுற்றி மீண்டும் வருவதற்குள் தோன்றும் “இந்த மசிருக்காடா, ரோடு போட்டு காசு புடுங்கறீங்க”ன்னு


இந்தப்பெருமைக்குரிய சாலையை அமைத்த புண்ணியவான்கள் IVRCL நிறுவத்தினர். இவர்களேதான் இப்போது செங்கப்பள்ளியிலிருந்து வாளையார் வரை சாலை அமைக்கும் பணியில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். IVRCL நிறுவனம் 47ம் எண் தேசிய நெடுஞ்சாலையில் அமைத்தது போன்ற அயோக்கியத்தனம் வேறு ஏதும் நாற்கரச் சாலைகளில் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. பவானி லட்சுமி நகர் அருகே இருக்கும் இரண்டு மேம்பாலம், காவிரியில் ஒரு பாலம் என IVRCL நிறுவனத்திற்காக பாலங்களை அமைத்தது ஆந்திராவைச் சார்ந்த KNR Construction நிறுவனம். இதில் ஈரோடு சாலை இணைப்பிற்காக காளிங்கராயன் வாய்க்கால் அருகே அமைக்கப்பட்ட பாலம் நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்குகளால் காலம் தாழ்ந்து இறுதியாக சுங்கச் சாவடிகள் அமைத்து வசூல் துவங்கி பிறகு அவசர அவசரமாய் அமைக்கப்பட்டது. 

ஏனோதானோவென்று அமைத்ததின் பலன் வெறும் ஓராண்டுக்குள் தெரிந்துவிட்டது. கடந்தவாரம் அந்தப் பாலத்தில் விழுந்த ஒரு பெரிய பள்ளத்தையொட்டி பாலம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் பால முகப்பில் ஏனோதானோவென்று தடுப்புகள் வைத்து வெறும் அம்புக்குறிகள் மூலம் ஈரோடு பிரிவு ஒற்றைச் சாலையில் திருப்பிவிடப்பட்டு, மீண்டும் பாலத்தின் அடியில் புகுந்து எதிர்பக்கச் சாலையில் இணைந்து பாலத்தைக் கடந்து, இடது பக்கச் சாலையில் இணைகிறது. இதற்காக எதிர்ப்பக்கச் சாலையும் அதேபோல் அம்புக்குறி பலகைகளால் மூடப்பட்டு, வரும் வாகனங்கள் அருகில் இருக்கும் அரசு போக்குவரத்து பணிமனையொட்டிய பக்கவாட்டு ஒற்றைச் சாலை மூலம் நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது. 

பழுதடைந்த பாலம் மூடப்பட்டதாலே நெடுஞ்சாலையில் காசும் கொடுத்துப் பயணப்படும் தங்களை காவு கொடுக்கும் நிலை நடந்து கொண்டேயிருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், ஓசூரிலிருந்து திருப்பூர் நோக்கிப் பத்தாயிரம் செங்கற்களுடன் வந்த பெரிய சரக்குந்து, பழுதடைந்த பாலத்தின் முகப்புவரை வேகமாய் வந்து அம்புக்குறியிட்ட பலகையைக் கண்டு அதிர்ந்து இடதுபக்க ஒற்றைச் சாலைக்குத் திரும்ப, திரும்பிய வேகத்தில் வலதுப்பக்கமாய்ச் சரிய தப்பிக்கலாம் என நினைத்து குதித்த ஓட்டுனர், செங்கல் இறக்க வண்டி மேல் உட்கார்ந்திருந்த தம்பதி என மூன்று பேர் செங்கற்களுக்குள் சிக்கி நசுங்கி மரணம். அவர்களோடு வந்த சிறுவன் மட்டும் தாய் தந்தையரை இழந்து அனாதையாய் மாறிப்போனான் அந்த 11 மணி இரவு நேரத்தில்.

எல்லா விபத்துகளும் சாவுகளின் எண்ணிக்கையைப் பொறுத்து சுவாரஸ்யங்களின் அடர்த்தி கொண்ட சம்பவங்களாக மாறிப்போன சமகாலத்தில் தேசிய நெடுஞ்சாலை அகோர உயிர்ப் பசியோடு காத்திருப்பது, சாகும் தருணம் வரை தெரிவதேயில்லை.

நகரத்திற்காக உருவாக்கப்பட்ட புறவழிச் சாலைப் பகுதி கிராமத்து மக்கள், தங்கள் ஒற்றைச் சாலையின் குறுக்கே ஆங்காரமாய் நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலையைக் கடக்கும் வித்தை தெரியாமல் தொடர்ந்து தொடந்து செத்துக் கொண்டேயிருக்கின்றனர். நாற்கரச் சாலையின் முகப்பில் ஏறும் வாகனங்களுக்கு இறக்கைகளும், கொம்புகளும் முளைத்துக் கொள்கின்றன.

சுங்கச் சாவடியில் காசு கொடுத்த பின் கூடுதல் வன்மம் அந்த சாலைமேல் உருவாகிறது, ”இது எங்கப்பனூட்டு ரோடுடா” என்பது போல், குறுகிய சாலைகளுக்குள் நெரிசலில் அறுபட்ட அழுத்தமும், போய்த்தான் பார்போமே என வேக முடுக்கியை அழுத்தும் ஆர்வமும் வேக காட்டியில் இருக்கும் அதிகபட்ச எண்ணைத்தொட தூண்டத்தான் செய்கிறது. 

இந்திய வாகனங்களுக்கு, இந்தியர்களின் இங்கிதமற்ற வேகத்திற்கு ஈடுகொடுக்கும் பிடிமானத்தோடு அமைக்கப்பட்டிராத சாலைகளில் மிக மிக எளிதாக விபத்துகள் முளைத்துக் கொண்டேயிருக்கின்றன. நாற்கரச் சாலைகளில் 200கி.மீ தூரம் நீங்கள் பயணித்தால் குறைந்தது ஐந்து இடங்களில் வாகனம் அடிபட்டோ, உருண்டு சிதைந்தோ கிடப்பதை அறிய முடியும். இத்தனைக்கும், சுங்கம் வசூலிக்கும் நிறுவனம், தாங்கள்  வசூலிக்கும் சாலையில் அடிப்பட்டுக் கிடக்கும் வாகனத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்தியும் கூட எப்போதும் அந்தச் சராசரியான 5 வாகனங்கள் அகோரமாய் கிடந்துகொண்டேதான் இருக்கின்றன.



யாருடைய நிலத்தையோ கையகப்படுத்தி, யாரோ பணக்கார நிறுவனங்கள் மூலம், மேல்தட்டு தொழில் வியாபாரிகள் விரைவாக நகர தேசமுழுதும் சாலையமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்திற்கு தினம் தினம் அடிபட்டு சிதைந்து, ஒட்டுமொத்தக் குடும்பத்தை சிதைத்தெடுக்கும் மரணங்கள் வெறும் பெட்டிச் செய்தியாகவே போய்விடுகின்றன.

பொறுப்பி : படங்கள் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்டது

-0-

உறையும் தனிமை


தனிமையில் இருக்கும் வீட்டை
பூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்

-*-

சோம்பேறித்தனத்திற்கு
வர்ணம் பூசும் போது மட்டும்
சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்

-*-

மனதுக்குள் கறை இருப்பதை
வசதியாய் மறந்து நிழற்படங்களில்
படிவது குறித்து பயம் கொள்கிறோம்!

-*-

எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!

-*-



அறிந்தும் அறியாமல்


பெருநகரத்தின் தழும்புகளான லைன் வீட்டுக்குள்
விதியால் வீழ்த்தி முடக்கிப்போடப்பட்ட
கிராமத்தின் வாடை இன்னும் வடியாத
வெள்ளைப் புடவைக்கு இணையாய் நரைகூடிய
அந்தக் கிழவி வாசலைப் பெருக்குகிறாள்
நிமிடத்துக்கு நிமிடம் பொறுமை தீர்ந்து

வாழ்க்கை தின்று தீர்த்ததில் வறண்டு தொங்குகின்றன
பருவ காலத்தில் எவரெவரோ கொண்டாடிய மார்புகள்
வெற்றுநெஞ்சின் நடுவே சுருண்டுபுரளும் மாராப்பு தாண்டி

படியும் பார்வையைவிட மேலதிக அழுக்குப் படிந்த
கண்ணாடியின் சட்டங்களில் எண்ணைப்பசையேறிய
நூல்சுருளில் உறங்கும் சிக்கு வாடை மறத்துப்போய்விட்டது.

எப்போதாவது விழும் மழைத்தூறலில் உயிர்த்தெழும்
தார்சாலையில் உரசித்தேய்ந்த டயர்களின் எச்சக்கவிச்சி பழகிப்போய்விட்டது
விதி வெக்கை புழுக்கம் புழுதி வெறுமையென எல்லாமே
அவளின் முனகலுக்குள் சுருண்டு பசியாறுகின்றன

தார் சாலையில் தலைவைத்துத் தூங்கும் தன் வாசலை
குறிப்பிட்ட இடைவெளியில் குனிந்து குனிந்து கூட்டுகிறாள்
எவரொருவரும் தன் வாசலில் குப்பையைத் தொலைப்பதை
நிறுத்தப் போவதில்லை என்பதை அறிந்திருந்தும்!

-0-

கிளி

ரைப் பரிட்சை லீவு முடிந்து பள்ளிக்கூடம் திறந்ததில் குமார் திடீர் கதாநாயகன் ஆகிவிட்டான். லீவில் அத்தை வீட்டுக்குப் போய் வந்த குமார், அத்தை பையன் வளர்த்து வரும் கிளி பற்றியே எப்போதும் புராணம் பாடிக்கொண்டிருந்தான். கண்கள் விரிய அவன், கிளி பற்றிச் சொல்லும் கதைகளைக் கேட்க கூட ஒரு கூட்டமே இருந்தது. யார் என்ன பேசினாலும் கிளி அதைத் திருப்பி பேசுவதாகச் சொன்னான். இவனை "துமாரு..துமாரு"ன்னு கூப்பிடுவதாக பெருமை வேறு அடித்துக் கொண்டேயிருந்தான்.

அந்தக்கிளி குஞ்சு பொறித்ததும் அவன் அத்தை பையன் குமாருக்கு ஒன்று தருவதாகச் சொன்னானாம். கிளிக்குஞ்சு வந்தவுடன் குமாரும் ஒரு கூண்டு செய்து அதில் வளர்த்துவேன், கட்டிலுக்கு பக்கத்திலேயே வைத்துக்கொண்டு தூங்குவேன், ஒரு நாளைக்கு பள்ளிக்கூடம் கொண்டுவந்து காட்டுவேன் என  பந்தா விட்டுக் கொண்டிருந்தான்.

அவன் கிளி பற்றிய பேச ஆரம்பித்த பிறகு மைதிலி குமாரிடம் மட்டும் அதிகம் பேசுவதாகத் தோன்றியது. அதென்னவோ மைதிலி குமாரிடம் போசும் போது கோபம் கோபமாய் வந்தது.

குமார் ஆரம்பித்த பிறகு மற்ற பசங்களும் கிளிகள் குறித்து விதவிதமாய் சொல்லும் விசயங்கள் ஒரு அதிசயக் கோர்வையாய் எப்போதும் மனதுக்குள் குறுகுறுத்துக் கொண்டேயிருந்தது. நாட்கள் போகப்போக கிளி வளர்க்க வேண்டும் என்ற ஆசை மனதுமுழுதும் அடைக்கத்தொடங்கியது. 


ப்போதாவது ஊருக்குப்போகும் போது பேருந்து நிலையங்களில் பெட்டிக்குள் இருந்து அவ்வப்போது கிடைக்கும் ஒரு சில நெல்மணிகளுக்காக பொறுப்பாக சீட்டெடுத்துப்போடும் கிளிகள் ஒரு போதும் அழகாய்த் தோன்றுவதில்லை. அழுக்கான கிளி ஜோசியக்காரனின் பிம்பமாகவே அந்தக்கிளிகள் தோன்றும். கீச் கீச்சென மெலிதாய் அலறும் அந்த குரல்களின் ஈர்ப்பால், எப்போதாவது பார்த்தாலும், உடனே அந்தக் கிளிகள் மீது ஒரு அந்நியத்தன்மை வந்து அமர்ந்துகொள்ளும்.

அவ்வப்போது திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும், வண்ண அச்சில் வரும் படங்களிலும் பார்த்துப் பார்த்து மனதிற்குள் உருவேறிப்போய்விட்டது. வாழ்நாளில் ஒரேயொரு கிளியாவது வளர்க்க வேண்டும் என்பதும் லட்சியத்தில் ஒன்றாய் இருந்தது. இந்த நிலையில் குமாரின் கிளி குறித்த பந்தா லட்சியத்தை உருவேற்றியது.

கிளி எங்கே கிடைக்கும், எந்தக் கடையில் கிடைக்கும் என்ற நச்சரிப்பிற்கு வீட்டில் ஒருவரும் மதித்துப் பதில் சொல்லவேயில்லை.

அப்பா மட்டும் ”கடையிலெலாம் கெடைக்காது, குருவி புடிக்கிறவன் வந்தா சொல்லி புடிச்சுத்தரச்சொல்றேன்”னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

குருவி புடிக்கிறவங்க எப்போ வருவாங்க என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. கிளி பற்றியே பேசிக்கொண்டிருந்தது ஏனோ அம்மாவுக்குப் பிடிக்கவில்லை, அப்படியே கிளி கிடைத்தாலும் வீட்டில் வளர்த்த விடமாட்டேன் என அம்மா திட்டியது கொஞ்சம் பயமாக இருந்தது. 

பழுத்த கோவைப்பழத்தைத் தேடி கிளிகள் கூட்டமாய் வரும் என முத்தாயிப்பாட்டி சொன்ன பிறகு, பள்ளிக்கூடம் போகவர வாய்க்காக்கரைமேல் சைக்கிள் மிதிக்கும் போது, அக்கம்பக்கம் மரங்களில் கோவைப்பழச்செடி படர்ந்திருக்கிறதா என்பதையும், அதில் கிளி இருக்கிறதா எனத் தேடுவதும் வழக்கமாகிவிட்டது. என்ன தேடியும், கிளிகள் மட்டும் கண்ணில் படவேயில்லை! பாட்டியிடம் கோவைப்பழச்செடி இருக்கிற மரத்திற்கு கிளிகள் வருவதேயில்லைபோல என்று சொன்னபோது,

”நல்லாத் தேடிப்பார்றா பையா, பழுத்த பழமிருந்துச்சுன்னா கிளி கண்டீப்பா வரும்” என பாட்டி சொன்னது.

டுத்த நாள் பள்ளிக்கூடம் போகும் போது, பசங்களை முன்னால் அனுப்பிவிட்டு, அடர்த்தியாய் கோவக்கொடி பிண்ணிப்பிணைந்து கிடந்த அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றித் தேடிப்பார்த்தான். முழுதும் குடைந்த வெறும் தொல்லியாய் மட்டும் ஓரிரு கோவைப்பழங்கள் கீழே கிடந்தன. அண்ணாந்து பார்த்துப் பார்த்து தேடியும் ஒரு கிளிகூட தென்படவில்லை.

வாய்க்கால் கரைமேல் யாரோ பரபரப்பாய் மணியடிக்கும் சப்தம் கேட்டது. வழக்கமாய் பள்ளிக்கூடத்திற்கு லேட்டாகவே வரும் துரையின் சைக்கிள் பறந்து கொண்டிருந்தது. போகும் வேகத்தில் “பள்ளிக்கோடம் வரமா என்றா பண்றே” என்பது காதில் விழுந்து. “வரேன் நீ போடா” என்று சொன்னது அவன் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லையென்று தோன்றியது.

கழுத்து வலிக்கத் தேடியும் கிளிகள் இருப்பதற்கான சுவடே இல்லை. ஆடு ஓட்டிப்போகும் ஒரு அம்மா கேட்டது, “ஏண்டாகண்ணு இங்க நின்னுக்கிட்ட? சைக்கிளுகீது பஞ்சராப்போச்சா கண்ணூ?” என்று. யோசிக்காமல் ஆமாம் என்று சொன்னான். ஆடுகள் எல்லாம் கடந்து போன பிறகு யோசிக்க ஆரம்பித்தான், அந்தக் கேள்வி பிடித்துப்போனது, சைக்கிள் பஞ்சராக இருந்தால் பள்ளிக்கூடம் போகாமல் கட்டடித்துவிடலாம் என்ற நினைப்பு வந்தது.

முள் எதாவது தென்படுகிறதா என்று தேடிப்பார்த்தான். கண்ணாடிமுள் கொத்து ஒன்று வேலியோரம் கிடப்பது தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு மெதுவாய் நகர்ந்து ஒரு விழுது முள் ஒடித்தான். எந்தச் சக்கரத்தில் குத்தலாம் என்ற யோசனையில் தடுமாறிக்கொண்டிருந்தான். ஒரு வழியாய் முன்சக்கரம் என முடிவெடுத்து டயரில் வைத்து அழுத்த நுனி சிதைந்து பின் முள் இரண்டாக உடைந்தது, அடுத்த முள்ளில் முயற்சி செய்ய அதுவும் நுணுங்கியது. கிடைக்காத கிளி, ஏறாத முள் என கோபம் மட்டும் கொப்பளித்து வந்தது. கண்ணாடி முள் ஆகாது என்று கண்களை வலை வீசியதில் பச்சை வேல மரம் கண்ணில் பட்டது. துரதிருஷ்டம் எல்லா முள்ளும் பச்சையாக மட்டுமே இருந்தது. 

கடந்து போன பக்கத்தூர் ஐஸ்காரர் அண்ணன் எம்-80யை நிறுத்தி, ”ஏண்டா தம்பி, பள்ளிக்கூடம் போகாம இங்கே ஏன் நின்னுக்கிட்டே?” என்றார்

”சைக்கிளு பஞ்சர்ணா”

”அடக்கெரவமே, எந்தச் சக்கரம்ட, பள்ளிக்கோடத்துக்கு நேராயிருக்குமே”

”முன்னாடி வீலுண்ணா”

சட்டென பார்வையை அங்கு ஓட்டியவர்

”என்றா பஞ்சர்ங்கிற, காத்து ஃபுல்லா இருக்ற மாதர தெரியுது”

திக்கென்றது அவனுக்கு திருதிருவென முழித்தான்.

“இல்லண்ணா பஞ்சர் தான்” என்றவன் முகமெல்லாம் வெளுத்தது!

இவனுடைய பதட்டமும், திருதிருமுழியும் ஐஸ்காரருக்கு சந்தேகத்தை வரவழைத்தது!

”என்னடா சிகரெட்கீது குடிக்றதுக்கு நிக்கிறியா” என்றவாறு வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வர ஒரு மாதிரி இவனுக்கு உடம்பு நடுங்கியது. முள் சதி செய்ததில் பஞ்சர் ஆகாத சக்கரம் குறித்து கூடுதல் கோபமும் அதையொட்டிப் பதட்டமும் வந்தது.

அருகில் வந்த ஐஸ்காரர் முன் சக்கரத்தை அழுத்திப்பார்த்துவிட்டு, ”என்னடா காத்து ஃபுல்லா இருக்குது” என்றவாறே பின்சக்கரத்தையும் அழுத்திப்பார்த்தார்.

திருதிருவென முழித்தவனைப் பார்த்தவரின் பார்வையில் கடுமை ஏறியிருந்தது.

”இல்லீங்ணா, காத்து கம்மியாயிருந்துச்சு, பஞ்சர்னுதான் நிறுத்தினேன்”

“டேய் என்னமோ மொள்ளமாறித்தனம் பண்றே நீ, இரு இரு ங்கொப்பாகிட்ட சொன்னாத்தான் சரிப்படுவே”

”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்ணா”

“செரிடா நீ கெளம்பு பர்ஸ்டு, பள்ளிக்கோடத்துக்கு நேரமாச்சு பாரு”

ஒன்றும் புரியவில்லை அவனுக்கு, அவனையறியாமல் சைக்கிள் ஸ்டேண்டைத் தள்ளி, ஏறி மிதிக்க ஆரம்பித்தான்.

கீழே கிடந்த காலி கோவைப்பழம், வராத கிளி, உடைந்த கண்ணாடி முள், பச்சவேல மரம் என ஒவ்வொன்றும் பகையாய்த் தோன்றியது. குமார்  ஏனோ மனதுக்குள் மிகப்பெரிய எதிரியாய் விஸ்வரூபம் எடுத்து நின்றான். இனம் புரியா வன்மம் குமார் மேலும், இனம்புரியா ஆசை கிளி மேலும் தோன்றியது.

பள்ளிக்கூடத்தை அடையும் போது, ப்ரேயர் முடிந்து சாரை சாரையாய் வகுப்பறைக்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

பி.டி வாத்தியார் பிரம்போடு கேட் அருகே நின்று கொண்டிருந்தார். தாமதமாக வந்த பசங்க நிற்பது தெரிந்தது. அதில் துரையும் இருப்பது நினைத்து மனதுக்குள் பூவின் ஒரு இதழ் பூத்தது!

“ஏண்டா லேட்டு…” என்ற  பி.டியின் குரல் மனதைக் கிடுகிடுக்க வைத்தது. துரை பார்ப்பது கூடுதல் அவமானமாய்த் தோன்றியது

“சார்…. வந்துங்க சார், சைக்கிள்லைங்க் சார்… காத்துங்க சார்ர்ர்ர்ர்ர்” என என்னவோ உளறும் போது துரை பாக்கிறானா என்றும் பார்த்தான்! விஷ்க்கென பின்னாடி விழுந்தது ஒரு பிரம்படி,

“ராஸ்கெல் இனிமே லேட்டா வந்தா, தோல உறிச்சுப்புடுவேன், ஓட்றா கிளாசுக்கு” என்றவாறு ஆளுக்கொன்று விஷ்க் விஷ்கென பிரம்பால் வீசினார்.

வகுப்பறை கதவுக்கு அருகில் வரும்போது, வகுப்பாசிரியர்  பெயர் கூப்பிட்டிக்கொண்டிந்தார். இவன் தலையைப் பார்த்தவுடன், வா என்று தலையை ஆட்டிவிட்டு பெயர்களைத் தொடர்ந்தார்!

அவன் இடத்தில் அமர்ந்தவன், வன்மத்தோடு குமார் இருக்கும் இடத்தைப் பார்த்தான். குமார் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

மைதிலி மட்டும் ஒருமுறை இவன் பக்கம் திரும்பி என்னவோ சொன்னாள். அவள் மீதும் போதும் கோபம் கனன்றது! மீண்டும் திரும்பிப் பார்த்தாள், அவள் முகபாவம் எதோ சொல்ல முயல்வதுபோல் இருந்தது. கடுப்பில் ஒன்றும் புரியவில்லை!

ஒரு காகித மடிப்பை இவன் மேசைக்குத் தள்ளினாள். மடிப்பைப் பிரித்தான் “குமார் அத்தை பையனோட கிளி செத்துப்போச்சாம்” அவள் கையெழுத்தில் அவனுக்கு கிளி சிரித்தது.

”ஹைய்யா, அப்போ குமாருக்கு கிளிக் குஞ்சு கிடைக்காது” என்ற மகிழ்ச்சி குப்பென ஒரு நிம்மதியை மனதிற்குள் பூக்கச்செய்தது. கொஞ்ச நாட்களாக அவனுக்குள் முளைத்திருந்த கிளியின் சிறகுகள் உதிரத் தொடங்கியது. மனசு முழுதும் பசுமையாய் சிறகடித்துக் கொண்டிருந்த கிளியின் அடர்இளம்பச்சை நிறம் வெளுக்கத் துவங்கியது!

-0-



மரண வாசனை


’கடைசியா முகம்பாருங்க’
மயானத்தில் தீமூட்டும்முன்
எட்டிப்பார்க்கும் விழிகளில் படிவது
மரணத்தின் கொடூரமுகமே   

**

மரணம் எதனினும்
வலிமையானது என்பதை
மரணங்களின் வாயிலாகவே
உணர்த்துகிறது

**

பிறப்பு கல்வி காதல்
கல்யாணம் பணி தொழில்
உறுதியற்ற எதற்கும் நாள் குறிப்பவன்
ஒருபோதும் குறிக்கத்துணிவதில்லை
உறுதியான மரணத்தின் நாளை

**

ஒவ்வொரு மரணமும்
உண்மையாய் உள்வாங்குவோருக்கு
அதுவரை கற்றறியாப் பாடத்திற்கு
பாஸ்மார்க் போட்டுவிட்டுப்போகிறது

**

தன்னைத் தழுவும்வரை
தனக்கு மரணம் வருமென்பதை
யாரும் நம்புவதில்லை
நம்பும் தருணத்தில்
மரணம் விட்டுவைப்பதில்லை

**

செருக்குகள் உதிர்த்து
நெருங்கிய மரணங்களைச்
செரிக்க முடியாமல் நிற்கையில்
கைகளில் பற்றுவதையெல்லாம்
அன்பால் நிரப்பச்செய்வதும் கூட
செரிக்கமுடியாத அதே மரணம்தான்

**
ஒரு உயிரை மட்டும்
கொய்துபோவதா மரணத்தின் பணி
வாழ்க்கைமேல் உடனிருப்போர்
வைத்திருக்கும் நம்பிக்கையைக்
கொஞ்சம் உதிர்க்கச் செய்வதும்தான்

**


மே-18 சொல்ல வார்த்தை இல்லை

இதுவும் ஒரு நாள் எனக் கடந்து போய்விடவே முடியாது இந்த கொடிய தினத்தை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிரை வேரோடு பிடுங்கி, அந்த வேரின் மீது விசம் தோய்ந்த வெந்நீரை ஊற்றியவர்கள் இன்னும் அதையே செய்து கொண்டிருக்கும் கொடியதொரு சமூகச் சூழலில்தான் நமது நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு ஆண்டு இடைவெளியில் அவ்வப்போது ஆவணங்களாய் வெளிவரும் காட்சிகளில் தமிழின மக்கள் மேல் நிகழ்த்தப் பட்ட கொலை வெறித் தாக்குதலில் உலகத்தின் அத்தனை வக்கிரமும் குவிந்து கிடப்பதைக் காண முடிகிறது.

வக்கிரம் என்பதற்கு ஒரு அகராதி தயாரித்தால், அதற்கு ராசபக்சேவின் இராணும் கையாண்ட யுக்திகளை, அவர்கள் தமிழர்கள் சதை மேல் நிகழ்த்திய கோழைத்தன வக்கிரங்களின் படங்களை வைத்தால் போதும், அதைக் காண்பவன் கூட இனி அந்த வக்கிரத்தின் மேல் வெறுப்பு வந்து அதைக் கைவிட்டிடுவான்.

கடைசி யுத்தத்தில் மாண்டவர்கள், மறைந்தவர்கள், முகாமுக்குள் சிறைப்பட்டவர்கள், சிறைக்குள் ஒடுக்கப்பட்டவர்கள் என எதற்கும் சரியான கணக்கு இல்லை. அப்படியே கணக்கு காட்டினாலும் உண்மை வேறாகவே இருக்கின்றது. கடைசி யுத்தம் என்றுதான் அங்கிருக்கும் மக்களும் அதைச் சொல்கிறார்கள். இனியொரு யுத்தத்திற்கு யாரும் தயாரில்லை என்றபோதிலும் எஞ்சியிருக்கும் தமிழர்கள் மீது சிங்கள அரசாங்கம் நிகழ்த்தும் உளவியல் யுத்தம் முடிந்த பாடில்லை.

அநீதியாய்ப் போரை நிகழ்த்திய பாவத்தில் நிகழ்த்தியவனுக்கு மட்டும் பங்கில்லை, துணை புரிந்தவர்களுக்கும் பங்குண்டு என்பதை அவ்வப்போது ஏதேனும் சம்பவங்கள் ஆங்காங்கே நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கின்றன.

ஒரு லட்சிய வேட்கையோடு புறப்பட்ட இனம், சூழ்ச்சிகளாலும், நயவஞ்சகங்களாலும் சிதறிப்போனதை மனது ஒருபோதும் செரிக்க முடியாமல் தவிக்கிறது. இன்னும் முகாமுக்குள் அடைபட்டு சிதைந்து கொண்டிருப்பர்களுக்குச் சொல்ல வார்த்தையின்றி தொண்டை வறண்டு போகிறது. 

ஒரு இனத்தின் உரிமைக்கான போராட்டத்தை, இன அழிப்புப் போராக மாற்றி, வெற்றி கண்ட இந்தக் கரிய தினத்தில்...
விதையாய் வீழ்ந்த தியாக உள்ளங்களுக்கு வீரவணக்கங்களைச் சமர்ப்பித்து, நயவஞ்ச சூழ்ச்சியில் உயிர் நீத்த எம் மக்களின் ஆன்மாவிடம் அஞ்சலிகள் செலுத்தி, மன்னிப்பு வேண்டி, இன்னும் முகாமில் சிதைந்து கொண்டிருக்கும் சக உயிர்களுக்கு ஒரு நல்லது பிறக்க வேண்டும், தமிழர்கள் தமிழீழத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற மனம் உருகும் வேண்டுதல்களோடு இந்தக் கரிய தினத்தைக் கடந்து போகிறேன் மிகக் கனத்த மனதோடு!

-0-


இழப்பு…
அந்த நிமிடத்து மகிழ்ச்சியை
சேமிக்க ஆசை கொள்கிறோம்
அடுத்த நிமிடங்களில்

இடமாறு…
அங்கேயே இருக்கும் காற்றை
இடம்பெயர்த்து தருகிறது
காற்றாடி

இயல்பு…
வைக்கும்போதிருக்கும் விருப்பம்
எழுப்பும்போது இருப்பதில்லை
அலாரங்களின் மேல்

இலக்கு…
தெருச்சண்டை வேடிக்கைகளில்
எப்போதும் இலக்குகள் ஒன்றுதான்
சண்டையின் உச்சம்

-0-

தூரிகையும் சித்திரமும் என் இதயமும்




எதிர்பாராத தருணத்தில்
மேகத்திற்குப் பிரசவம் நடந்தது
அந்த ரயில் நிலையத்தில்

தெறிக்கும் சாரல்களில் ஆசிர்வதிக்கப்பட்டு
ஒரு சித்திரமும் தூரிகையும்
கைகள் பற்றி நின்றிருந்தன

தாமதமாய் வந்த ரயில் வண்டி
கொட்டும் பெரு மழைக்குள்
பெருமூச்சுவிட்டபடி நீண்டு கிடந்தது

தூரிகையிடம் விடைபெற்று
சித்திரம் மட்டும் ஓடி ஏறியது
ஒரு முன்பதிவு பெட்டியில்!

சாரல் தெறிக்கும் படியில் நின்று
மழைச்சரங்களை ஊடுருவி
அவனோடு விழிகளால் கதைத்துக்கிடந்தது

ஆயிரம் அபிநயங்கள் பேசிய
அவள் விழிக் கத்திக்கு முன்
அவன் விழிகள் உயிரற்றுக் கிடந்தன

கண்ணைத்துடை என்ற சாடையோடு
கைப்பையை தலைக்குப்பிடித்து
அவனருகே ஓடிவந்து ஏதோ கிசுகிசுத்தாள்
வர்ணத்தோடு நிமிர்ந்து மலர்ந்தது தூரிகை

திரும்பியவள் படியில் பாதம் பதிக்கும்முன்
மழைத்துளிகள் சொட்டச் சொட்ட
ஒரு முறை திரும்பி புன்னகையை உதிர்த்தாள்
கண்ட உயிர்களுக்குள் எல்லாம் பூ பூத்தது

மழையும் விடவில்லை வண்டியும் நகரவில்லை
புருவங்களை அசைத்து விழிகளால் கதைத்தவள்
மெதுவாய் விழி மூடி அவனை அருகே அழைத்தாள்

புத்துயிர்கொண்ட அந்தத் தூரிகையையும்
அழகாய் தீட்டியிருக்கும் அந்தச் சித்திரத்தின்
அருகில் வண்ணக்குழம்போடு ஆசையாய் ஓடியது

அவன் கைக்குள் கையைப் பொருத்தி
ஏதேதோ காதில் கிசுகிசுத்தாள்
அவன் விரல்களை அழுத்திப் பிசைந்தாள்

கதவோரம் ஒடுங்கி நின்றவள்
விழிமூடி இழுத்த சுவாசத்தில்
அவனைப்பிடுங்கி அவளுக்குள் நட்டுக்கொண்டாள்

வண்டி ஒரு குலுங்கலோடு நகர முற்பட
அவன் முதுகில் அழுந்தக் கை பதித்து
பிரசவம் போல் வெளியே தள்ளிவிட்டாள்….

தூரிகை மழையில் கரைந்து போனது
சித்திரம் உள்ளே காணாமல் போனது
நகரும் சக்கரங்களில் என் இதயம் கசங்கியது

கை நீட்டி ஒரு மழைத்துளியை கையகப்படுத்தி
விரல் மூடி மெதுவாய் விரித்துப் பார்த்தேன்
மொட்டாய் சிரித்த மழைத்துளி கண்சிமிட்டி
காதலித்துப்பார் என்றது கிசுகிசுப்பாய்

-0-

வர்ணம் கலைந்(த்)த கிராமத்து கூத்து!

உள்ளூர் திருவிழாக்களின் மேல் படிந்திருக்கும் சாயம் சிறிது சிறிதாக வெளுத்திருந்தாலும், அதன் மேல் இருக்கும் ஈர்ப்பு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறைந்து போனதாகத் தெரியவில்லை. எங்கள் கிராமத்தில் சில வருடங்களாக கோவில் புனரமைக்கப்படும் பணி நடந்ததால் திருவிழா மோகம் அற்றுப்போயிருந்தது. சமீபத்தில் நடந்த குடமுழுக்குக்குப் பிறகு வரும் முதல் திருவிழா. ஆனாலும், சில வாரங்களுக்கு முன் நிகழ்ந்த பாட்டியின் மறைவையொட்டி எங்கள் குடும்பத்திற்கு சில காலங்கள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதால், இந்த ஆண்டின் திருவிழா குறித்த கனவுகள் சுருண்டு படுத்துக்கொண்டது.

அந்தச் சூழலில் உறவினர் கிராமத்தில் திருவிழா, கெடா வெட்டு என அழைப்பு வர, ஆண்டெனா அந்த திசையை நோக்கி திரும்பிக்கொண்டது. மதியம் விருந்துக்குச் சாப்பிடப் போகலாம் என நினைத்து திட்டம் தீட்டும் போது, கெடாவெட்டு குடும்பத்திலிருந்து அழைப்பு வந்தது “அண்ணா, கூத்துப் பாக்கணும்னு ரொம்ப நாளாக் கேட்டீங்களே, இன்னிக்கு ராத்திரி இங்கே கூத்து நடத்துறாங்களாம்” 

கடகடவென நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டு சொந்த கிராமத்திற்கு ஒரு எட்டு போய்விட்டு, மாலை கெடாவெட்டுக்கு போகலாம் என்ற திட்டத்தோடு, கெடாக்கறியை விட கூத்துதான் முக்கியம் எனும் அடிப்படையில் ”எதோ மிச்சம் மீதியிருக்கிறத எடுத்து வை ராசா, லேட்டா வந்து கவனிச்சுக்குறேன்” என முன்பதிவு செய்த பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு வந்தது. ”காலையில இறக்கின ’பனம் பால்’ நீங்க வராதால தீர்ந்து(!!) போச்சு, மத்யானம் இறக்குறதையாவது ருசி பாருங்க” என்று. பனம்பாலின் ருசி குறித்த குஷி வேகவேகமா விரட்டியது அங்கே செல் என. 

ஒருவழியாய் உள்ளூரில் மதியம் உண்டு முடித்து, ஆடி அசைந்து கெடாவிருந்துக்குச் செல்லும் போது, வீடே காலியாக இருந்தது. எல்லாம் கழுவிக் கவிழ்த்திய நிலை, இருந்தாலும் ஆறுதலாய் ”தனியே எடுத்து வெச்சிருக்கோம், கவலைப்படவேணாம்” என வார்த்தைப் பாலை வார்த்துவிட்டு, மெதுவாய் கிணற்று மேட்டுக்குக்கு கடத்திப்போனார்கள். மூன்று மணிக்கு முட்டியைவிட்டு இடம்பெயர்ந்து வந்த பனம்பால் கொஞ்சம் புளிப்பேறும் முனைப்பில் காத்துக்கிடந்தது.

உதடுகளின் வழியே நரம்பு வரை சிலுசிலுத்த மின்சாரம், சித்தெறும்புக் கடியென சீண்டிப்பார்த்தது. இரவு விருந்தை முடித்து ”கூத்துப்பார்க்கப் போறோம்” என்றவர்களை விந்தையாகப் பார்த்தார்கள். ”இதென்னடாது, டவுன்ல இருக்கிறவங்க கூத்தெல்லாம் பாப்பீங்ளா”

ஒருவழியாய் கோவில் அருகே வந்தால் கூத்து நடப்பதற்கான அறிகுறி எதையும் காணவில்லை. சூழலைப்பார்க்கும் போது நிஜமாவே கூத்துதானா இல்ல பைப்ல ஷவர் செஞ்சு விடுற ரெக்கார்டு டேன்ஸா இருக்குமோ என கொஞ்சம் பயம் வந்தது. ”அட அந்த டேன்ஸா இருந்தா இந்நேரம் கூட்டம் பிச்சுக்காதா?, ஒரு பயலையும் காணோம் பாருங்க, இது கூத்துதான்” என்று உடன்வந்தவர்களின் வார்த்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.

அங்கிருந்த ஒருவரை நெருங்கி “ஏனுங்க, கூத்து ஆடுதுன்னு சொன்னாங்க, ஒன்னுமே காணோமே” எனக் கேட்டபோது அப்போதுதான் கூத்து ஆடுபவர்கள் வந்ததாகவும், கொஞ்ச நேரத்தில் ஆரம்பித்துவிடும் என்று கூறினார். கூத்து பார்த்து குறைந்தது 20 - 25 வருசம் இருக்குமென நினைக்கிறேன். ஆனாலும் புழுதி பறக்கும் அந்தக்கூத்து அவ்வப்போது மனதுக்குள் ஆடிக்கொண்டுதான் இருக்கின்றது.

கூட்டத்துக்குள் தூங்கும் குழந்தைகளைத் தூக்கிப் போவது, தூங்கி விழும் பெருசுகளின் காதில் துணியை முறுக்கி விடுவது என கோமாளி செய்யும் அலப்பறையும், குதர்க்கமாய்ப் பேசிப்பேசி, சாட்டையில் வாங்கும் அடி கோமாளியும், ஒத்து ஊதி, கூடவே பாடும் வாத்தியக் குழுவும், ஒவ்வொரு பாத்திரத்துக்கும் கொடுக்கும் அறிமுகப் பில்டப்பும், ஓங்கிய குரலில் முழங்கும் பாடலும் வசனமும், அந்த சிறிய சதுர இடைவெளிக்குள் எதுமில்லாமல் அவர்கள் நடத்தும் கதையின் களத்தை அப்படியே மனதுக்குள் படிய வைப்பதில் கூத்துக்கலைஞர்கள் என்றுமே வெற்றியடைந்திருக்கிறார்கள்.

ஒரு பக்கம் சரிந்த மாதிரி கோணல்மாணலாக இழுத்துக்கட்ட பதாகைக்கு முன்பு, செங்கற்களை அடுக்கி உயரம் ஊட்டப்பட்ட பலகைகள் மேல் ஆர்மெனியம், தபலா, ஒத்து என கசங்கிய சட்டையும், லுங்கியுமாக சுதி சேர்த்துக்கொண்டிருந்தார்கள். மாரியம்மன் கோவில் பந்தலடியில் ஏற்கனவே கட்டியிருந்த குழல் விளக்குகளுக்கு அடியில் தோரயமான சதுரமாய் இடம் விட்டு ஆங்காங்கே சிறியது முதல் பெரியது வரை சாக்கு, ஜமுக்காலம் என விரித்து அமர்ந்திருந்தனர்.

பொறுமை தீரும் வரை, வெறும் சுதி மட்டுமே சேர்ப்பார்களோ, கூத்து துவங்காது போல என நினைக்கும் போதே, கோமாளி வெளியில் வந்தார். வழக்காமான கோமாளிகளின் உடையல்லாமல், புள்ளிபோட்ட சட்டையும், ஜிகு ஜிகு பேண்டுமாய் கோமாளிக்குரிய கோமாளித்தனமில்லாத உடை. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் அவர் தொண்டையிலிருந்து வெளிவரும் சப்தத்தை விட காற்றுதான் அதிகம் வந்தது. என்ன செய்தும் குரல் எட்டவில்லை. கொஞ்ச நேரத்தில் கோமாளிக்கு பேச்சு, ஏச்சுத் துணைக்கு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு வந்த ஆள், கோமாளி பச்சை பச்சையாகப் பேச, அதற்கேற்றார் போல், வேண்டுமானவரை கோமாளியை சாட்டையில் அடிப்பது என நேரத்தை தின்று துப்பிக்கொண்டிருந்தார்களே ஒழிய கூத்தை முனைப்போடு முன்னெடுக்கும் முயற்சி அற்றிருந்தது.

அடுத்து வந்த கூத்து வாத்தியார் இது என்ன கூத்து என விளக்குகிறேன் என கொஞ்சம் பேசி நிறையப்பாடிவிட்டு மறக்காமல் கோமாளியையும் நாலு சாத்து சாத்திவிட்டுச் சென்றார்.  ஒரு காலத்தில் கூத்தில் கோமாளியை அடித்தால் விழுந்து விழுந்து சிரிக்கும் கூட்டம், இப்போது அதற்கெல்லாம் ஒன்றும் அசந்ததாகத் தெரியவில்லை.

சரி எப்போதான் கூத்து ஆரம்பிக்கும் என நெளிந்து கொண்டிருந்த போது, 
பின்பக்கம் இருந்த ஒப்பனைப் பகுதி தடுக்குகளின் இடைவெளியில் முழுதாய் அரச வேடமிட்ட ஒரு ஆள் ”பக் பக்” என பீடியை இழுத்துக்கொண்டிருப்பது கொஞ்சம் விநோதமாகப்பட்டது. வேசமிட்டவனை அந்த ராசாவாகவே மனதில் வரிந்து கொள்ளும் பொதுப்புத்தி மனதுக்கு, பீடி இழுப்பதை ஏனோ ஏற்றுக்கொள்ளச் சிரமமாக இருந்தது.

ஒருவழியாய் கோமாளியும் கூத்து வாத்தியாரும் என்ன கூத்து என்று சொல்லி முடிக்கவும், உள்ளேயிருந்து ஓங்காரமான குரலில் வந்தார் துரியோதன மகராஜாவான அந்த பீடிப் பார்ட்டி! என்னதான் ஓங்காரம் போட்டாலும் குரல் தேய்ந்துதான் வந்தது, கூடவே வெளியேறிய வார்த்தைகளுக்கும் நிகராக மூச்சும் வாங்கியது. விடியும் வரை துரியோதனன் என்ன பாடுபடப்போராறோ என்ற நினைப்போடு என்னுடன் வந்தவர்களைப் பார்க்க, இனம் புரியாத ஒரு கொலை வெறியை என் மேல் செலுத்த விரும்பாமல் சமாளித்தபடியே இருப்பது புரிந்தது. நானே வலிய அழைத்தேன் “ஒரு டீ சாப்ட்டு வரலாமா” துள்ளி எழுந்தன உடன்பிறப்புகள்.
அப்படியே ஒதுங்கி திருவிழாவிற்காக முளைத்த கட்டில் கடைகளை ஒட்டிய டீக்கடையில் டீ கேட்க ”சில்வர் கிளாசா, இல்ல ப்ளாஸ்டிக் கிளாசா” எனக் கேட்க, ப்ளாஸ்டிக்கிற்கு எதிரானா கொம்பு சர்ரென நீண்டது. உடனிருந்தவர் ”பரவால்ல சில்வர் டம்ளர்யே குடுங்க, புழங்குற சாதிதான்” என்றார். அப்போதுதான் சுருக்கென தைத்தது, ”அடப் பன்னாடைகளா இது ரெட்டைக் குவளை வெங்காயம் போல” என.

தேநீர் உறிஞ்சி முடிக்கும் போது துரியோதன் உள்ளே சென்றிருக்க, மஞ்சள் பைஜாவும் லுங்கியுமாக(!!) அடுத்த ஆள், தேங்காய் நாரை வண்டி மையில் நனைத்தது போல் மீசை, தாடி தலைமுடியென உலகமகா(!!!) ஒப்பனையில் வீராவேசமாக ஏதோ கதை சொல்லி சவால் விட்டுக்கொண்டிருந்தார். அருகில் இருந்தவரிடம் இது யார் எனக் கேட்டேன் “சகுனி மகாராசா” என்றார். கைபேசியை எடுத்துப் பார்த்தேன் ஒரு மணிக்கு அருகாமையில் காட்டியது, உடன் வந்தவர்களைப் பார்த்தேன், என்னைப் பரிதாபமாகப் பார்த்தபடி தலையை அசைத்தார்கள். அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஈரோட்டில் வீட்டில் நிதானமில்லாமல் உறங்கிக்கொண்டிருந்தோம். கனவில் கூத்தின் மேல் இருந்த வர்ணம் கலைந்தோடியது, விடிந்து எழும் போது, எல்லாம் கனவு போல் தோன்றியது!







-0-