பகிர்தல் (29.03.2011)

தேர்தல் ஆணையக் கெடுபிடிகள்:

நமக்கு(ம்) ஏற்படும் சில கெடுபிடிகளைச் சிரமத்தோடு கடந்து போக வேண்டியிருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் சுற்றுப்புறங்களில் மிகப் பெரிய அமைதியை விளைவித்திருக்கிறது. அதே சமயம் தேர்தலை நம்பி இருந்த பல தொழில்களுக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஏமாற்றம். குறிப்பாக சுவரொட்டி, பிளெக்ஸ் அச்சிடுபவர்களுக்கு. பல நிபந்தனைகளுக்கு அடிபணிய வைத்த வகையில் தேர்தல் ஆணையம் வெற்றி கண்டிருக்கிறது. உதாரணத்திற்கு வாக்கு கோரும் விளம்பரப்பிரதிகளை அச்சிட வேட்பாளர் தானே எழுத்துப்பூர்வமாக அச்சகத்திடம் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும், மேலும் அச்சகத்திற்கான பணத்தைக்கூட, அவர் தேர்தலுக்காக தொடங்கியிருக்கும் வங்கிக் கணக்கு மூலமாகவே அளிக்க வேண்டும் என்பது புதிய நிபந்தனை. எந்தச் சாலையிலும் கட்சிகளின் பகட்டு விளம்பரங்களைக் காண முடியவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு இத்தனை சக்தி இருக்கிறது என்பதையும், அதை அவர்கள் செயல்படுத்தும் விதமும், வருங்கால அரசியல் மேல் நம்பிக்கையைப் பரவச்செய்கின்றது.

கொண்டாட்டங்களால் புதுப்பிக்கப்படும் நகரம்:

ஈரோடு நகரத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் கொண்டாடப்படும் பண்டிகை, பெரிய மாரியம்மன் திருவிழா. ஒருவாரகாலம் பிரப்சாலை அடைக்கப்பட்டு, பலவிதமான கடைகள், பல மணி நேரம் சாரைசாரையாய் காத்திருந்து கம்பத்திற்கு நீருற்றும் மகளிர்கள், தீர்த்தக்குடத்தோடு, உடலில் விதவிதமாய் அலகுகுத்தி தாரைதப்பட்டை முழங்க வேகநடையில் நகரும் கூட்டம், இரவுகளில் ஆங்காங்கே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் என நகரத்தை வழக்கம்போல் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது பெரிய மாரியம்மன் பண்டிகை.

புதுகைபூபாளம் கலைக்குழு:

சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற கலைஇரவு நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் குழுவினரின் திறன் வாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு, கடந்த ஞாயிறு அன்று எங்கள் அரிமா சங்கம் நடத்திய ஒரு மாநாட்டில் ஒரு மணி நேர கலை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தோம். 



மேடையில் மூன்று பேர் மட்டும் நடத்திய நிகழ்ச்சியை அரங்கு நிறைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இப்படி அப்படி நகராமல் கூர்மையாக கவனிக்க வைத்தமைக்காக பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு மனம்திறந்த பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும். மேலும் வரும் ஜூலை மாதம் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க விழா- ஃபெட்னா நிகழ்ச்சியில் பங்கெடுக்க அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள் என்பதை அறியும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தகுதியான நபர்களை அழைக்கும் ஃபெட்னா அமைப்பிற்கும் பாராட்டுகள்.


...ஆக்காட்டி ஆக்காட்டி - பாடல்

தவமாய் தவமிருந்து படம் வெளியாகும் முன்னே இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக கேட்கும் போது புரியவில்லை, ஆனாலும் மிகவும் பிடித்துப்போனது. என் கைபேசியில் சில மாதங்கள் இந்த பாடலை அழைப்பவர்கள் கேட்கும் இசையாக வைத்திருந்தேன். ”அதென்ன பாட்டு, ஒன்னுமே புரியலையே” என்று எல்லோருமே கேட்டார்கள். படத்தில் அந்தப் பாடல் இல்லையென்பது மிகப்பெரிய ஏமாற்றம். காலப்போக்கில் அதுகுறித்த நினைப்புகள் நீர்த்துப்போயிருந்த வேளையில், சமீபத்தில் வேறு எதையோ தேடும்போது அந்தப்பாடலின் நடனக்காட்சி கிடைத்தது. படத்தில் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இப்போது கூடுதலாகிவிட்டது.



தூள் கிளப்பும் தூரிகை:

மனதை இழுத்துப்பிடித்து நிறுத்தி, மீண்டும் மீண்டும் பார்வையை குவித்துப் பார்க்க வைக்கின்றன இளையராஜா அவர்களின் ஓவியங்கள். மிக நுணுக்கமாக உடையின் மடிப்புகள், ஆபரணங்கள், முடிக்கற்றைகள் என இது ஓவியம் தானா என ஆச்சரியப்படும் வகையில் எல்லா ஓவியங்களுமே இருக்கின்றன.



மனதைக்கவ்வும் நிழற்படங்கள்

படங்கள் மூலம் ஆவணப்படுத்துதலை மிகச் சிறப்பாக செய்து வரும் வினோத் அவர்களின் சமீபத்தைய படங்களின் தொகுப்பு. ஜவ்வாது மலைக் கிராமங்களில் குக்கூ குழந்தைகள் வெளி – சிறுவர் திருவிழாவில் எடுத்த சில படங்களில் ஒவ்வொரு படமும் ஒரு கவிதையை மனதுக்குள் பிரசவிக்கிறது.





தேர்தல் காமெடிகள்:

ஜெ பெயரை உச்சரிக்காத விஜயகாந்த், விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத ஜெ என ஒற்றுமையோடு களம்(!) இறங்கும் சேராமாறி அதிமுக கூட்டணி,

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு ”அய்யா, கிள்ளிவெச்சுட்டான்” என்ற பாணியில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக குறை சொல்லும் திமுக!

”கப்பல் ஓட்டினாத்தான் கேப்டன், நீ எப்டிய்யா கேப்டன்னு” கேள்வி கேட்கும், அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையாக ஜெ குறித்து வாய் திறக்க மறுக்கும் ’வைகைப்புயல்’ பட்டத்துக்கு விளக்கம் சொல்லாத வடிவேலுவும்ம்ம்ம்ம்….

மனப்பாடம் செய்ததை முக்கிமுக்கிப் பேசும் குஷ்பூ!, 

அண்ணா கனவில் (!....அடங்கொன்னியா… அண்ணா இந்த கூட்டணி வேலையெல்லாம் பார்க்கிறாரா!!!?) வந்து சொன்னதால் கூட்டணி அமைத்ததாக உளறும்(!) விஜயகாந்த்!

தள்ளுபடியாகும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்த தலைவர் மனைவி, வேட்புமனு தாக்கல் செய்யாத அதிகாரப்பூர்வ வேட்பாளர் என பூச்சாண்டி காட்டும் தங்கபாலு தலைமை தாங்கும் காங்கிரஸ்!

ஏதோ தங்கள் சொத்தை தானம் செய்வது போல், இலவச அறிவிப்புகள் மூலம் ஆதாயம் தேடும் இருபெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கை…… என தமிழகத்தின் தேர்தல் களம் மிகப்பெரிய நகைச்சுவையாக இருப்பதே மிகப்பெரிய துரதிருஷ்டம்தான்!

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நி………(ல்)ற்காதடா!


-0-

யதார்த்தம்



மரணம் கொய்துபோன நண்பன்
உயிர்த்தெழுந்து வருகிறான்
அதேபெயரைச் சொல்லி
யாரோ அழைக்கும்போது!

-0-

அடிக்குத்தப்பிய கொசு
கடிபட்ட அரிப்போடு
கூடவே தோல்வியையும்
சுமத்திவிட்டுச் செல்கிறது!

-0-
யாரோ கற்றுத்தந்த வார்த்தைகளால்
கட்டமைக்கும் கவிதைகளில்
யாரோ ஒருவரின் வாடை
வீசத்தான் செய்கிறது!

-0-

வெறுத்துப் பிரிந்தவர்கள்
பெயர் மாற்றி புனைப்பெயர்களால்
சந்திக்கும்போது துளிர்க்கிறது
புதிதாய் ஒரு உறவு!

-0-


இனிமே கண்டுக்காதீங்க சார்!!!

பிச்சைப்ப்ப்ப்பாத்திரம்ம்ம்ம் ஏந்ந்ந்ந்ந்திவந்தேன்.. எனச் சிணுங்கிய மொபைலை கையகப்படுத்தி அழைக்கும் எண்ணைக் பார்த்தேன், முன்பின் அறிந்திராத எண்ணாக இருந்தது. எடுத்து ஹலோ சொன்னவுடன் ”ரஞ்ஜித் சிங் மே போல்ரா”ன்னு…… கராமுரா ஹிந்தியில் எதிர்முனை ஏதோ உளறியது. அறியாத மொழிகள் எல்லாமே நமக்கு ஒரே மாதிரிதானே. அவனாகவே என்னுடைய பெயர் முகவரியைச் சொன்னான், நானும் ஆமாம் என்று சொல்லிவைத்தேன். என்னென்னவோ பேசினான், பேசிக்கொண்டேயிருந்தான் என் பெயர் முகவரி சொன்னது மட்டும் புரிந்தது அதுபோக குவாலியர் செசன்ஸ் & 3.30 மணி என்பது மட்டும் புரிந்தது.

அட வழக்கம் போல ஸ்டாக் மார்க்கெட் டிப்ஸ் ஃப்ரீ ட்ரையல் கொடுக்கிறவன் ஹிந்தியில் பேசுறான் போலன்னு தோணுச்சு. இது வழக்கமாய் நடக்கும் ஒரு நிகழ்வு. எப்படியோ மொபைல் எண்ணைத் திரட்டி தினமும் குஜராத்திலிருந்து மூன்று அழைப்புகளாவது வரும். சில அழைப்புகள் BTST (Buy Today Sell Tomorrow) டிப்ஸ்களாக இருக்கும். அது பெரும்பாலும் 3.15 மணிக்கு வரும். அவனுங்களா டிப்ஸ்னு சொல்லி மொபைல்க்கு 2 நாள் இலவசமா அனுப்பிட்டு மூனாவது நாள் சப்ஸ்கிரைப் பண்ணுனு அலப்பறை பண்ணுவாங்க. அனைத்து அழைப்புகளிலும் முதல் வரியும் நீங்க ஸ்டாக் மார்க்கெட் இருக்கீங்களான்னு கேக்கும், நானும் சாமி சத்தியமா இல்லீங்கன்னு சொல்லிடுவேன்.

ஆனால், ரஞ்சித் சிங்கோட அப்ரோச் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு, பெயர் முகவரி சரியாகச் சொன்னதில் கொஞ்ச ஆச்சரியமும் கூட, அடுத்து குவாலியர் செசன்ஸ்னு ஒரு கம்பெனி கேள்விப்பட்டதில்ல. சரி 3.30ன்னு சொன்னதால சந்தை முடியும் நேரத்தில் வாங்கச்சொல்றான்னு நினைச்சிட்டு தோள்பட்டையில் செல்போனைத் தாங்கிப்பிடிச்சிக்கிட்டு கன்ணியில் குவாலியர் செசன்ஸ்சை தேடிக்கொண்டே கேட்டேன்,

”இது BSE (மும்பை பங்குச் சந்தை)யா அல்லது NSE(தேசியப் பங்குச்சந்தை)யா”

அவன் இந்தியில் ”க்யா”ன்னு கத்தினான், மீண்டும் ஆங்கிலத்தில் கேட்டேன்.

”ஹிந்தி மாலும்? எனக் கேட்டான், ”மாலும் நஹி” என்றேன். எனக்கு ஹிந்தியில் மாலும் நஹி மட்டுமே மாலும்.

க்யாமுய்யா ஆங்கிலத்துக்குத் தாவியவன், ”நான் வெரிபிகேசன் ஆபீசர், நீ குவாலியர் செசன்ஸ் கோர்ட்டில் மாலை 3.30 மணிக்கு இருக்கனும், அலோக் சர்மா உன்மேல் வழக்கு கொடுத்திருக்கார்னு” சொன்னான்.

நானும் அதே க்யாமுய்யா இங்லீசில் ”நீ நினைக்கிற ஆள் நான் இல்லை, அலோக் சர்மாவைத் தெரியாது, இது ராங் நெம்பர்” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன். அடுத்த நிமிடம் மீண்டும் அழைத்து பெயர், முகவரி உறுதிசெய்துகொண்டு மீண்டும் அதையே சொன்னான். 3.30 க்கு கோர்ட்டில் இல்லாவிடில் கோர்ட் அவமதிப்பு ஆகிடும் என்றான். அடேய் வெண்ணைனு மனசுல நினைச்சிட்டு ’பட்டர்’னு எதுவும் திட்டாம? ”என்ன விளையாடுறியா, நான் தமிழ்நாட்ல இருக்கேன், எப்படி ஒரு மணி நேரத்தில் குவாலியர்ல இருக்க முடியும்”னு கேட்டேன்.

“அது எனக்குத் தெரியாது அலோக் சர்மாகிட்டே பேசிக்கோ”ன்னு சொல்லிட்டு கட் பண்ணிட்டான்.

”அடக் கொடுமையே நீ யாருடா? அது எவண்டா அலோச் சர்மா”ன்னு நினைச்சிட்டிருக்கும் போதே, குவாலியர் எங்கே இருக்குன்னு கூகிள் மேப்ஸ்சில் தேட ஆரம்பித்தேன். மீண்டும் முகம்தெரியா ரஞ்சித்சிங்கு ”யாரு(டா) அலோக் சர்மா, என்ன(டா) வழக்கு”ன்னு குறுந்தகவல் அனுப்பினேன்.

அதற்குள் புத்தி பலவாறு நினைத்தது, ”உள்ளூர்ல கேஸ் போடுற அளவுக்கே நாம வொர்த் இல்லையே, இதுல குவாலியர்ல கேஸா? என்னடா கொடுமை இது”ன்னு புலம்பிட்டிருக்கும் போதே, ரஞ்சித் சிங் பதில் அனுப்பினான், அதில் கேஸ் எண் என ஒரு எண்ணும், அலோக் சர்மாவின் மொபைல் எண்ணும். சிறிது நேர ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகு அலோக் சர்மா எண்ணிற்கு அடிக்க, ”வக்கீல் அலோக்சர்மா” என அறிமுகப்படுத்திக் கொண்டு என்னவென்று கேட்டான்.

நான் ”ரஞ்சித் சிங் இந்த நெம்பர் கொடுத்தான்” எனச் சொல்லும்போதே, ”ரஞ்சித் என் நெம்பரைக் கொடுத்துட்டானா”ன்னு கொஞ்சம் ஓவராவே சலிச்சிக்கிட்டு, கேஸ் நெம்பர் கேட்டுக்கொண்டு, 15 நிமிடம் கழிச்சு கூப்பிடச்சொன்னான்.

கடுப்போடு, பதட்டத்தோடு காத்திருந்து 15 நிமிடம் கழித்து அழைக்க மீண்டும் ஒரு முறை கேஸ் நெம்பர் கேட்டான் (வெண்ண அப்போ எதுக்குடா முதல்ல கேட்டே) சொன்னபிறகு 2 நிமிடம் காத்திருக்க வைத்து ”உங்க மேல குவாலியர் செசன்ஸ் கோர்ட்ல மரியாதைக்குரிய நீதிமான் கிருஷ்ணாபகத் முன்னிலையில் மோசடிக்கேஸ் ஃபைல் ஆகியிருக்கு, 3.30 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும், அடுத்து மாலை 5.30 மணிக்கும் 58,500 ரூபாய் பணம் கட்டனும்”னான்.

இதென்னடா புது வம்பா இருக்கே, மோசடிக் கேசா!!!? அந்த அளவுக்கு கொடுக்கல் வாங்கல் இல்லையேன்னு நினைச்சிட்டே, யாரு வழக்கு தொடுத்திருக்காங்கன்னு கேட்தற்கு ஒரு நிமிடம் என்று காத்திருப்பில் போட்டுவிட்டு “மேனேஜர் - பார்தி ஏர்டெல்” என்று சொன்னான். 


“அடி செருப்பால நாயே”ன்னு தமிழில் சொல்லிட்டு போனைத் துண்டித்தேன்.

அடுத்த நிமிடம் அவனே அழைத்தான். கொடுமை இங்கிலீஸ்ல கெட்ட வார்த்தையில் எனக்குத்திட்டத் தெரியல, அடுத்து ஹிந்தியும் தெரியாததால், தமிழில் மனசுக்குள் திட்டிக்கொண்டே “யோவ் 5.30 மணிக்கு என்னால வரமுடியாது, எங்க ஊர்ல ராக்கெட் சர்வீஸ் கிடையாது, அந்த வழக்குத் தொடுத்த நாதாரிய என்கிட்டே வந்து முடிஞ்சா 58,500 வாங்கிக்கச்சொல்லு”ன்னு சொல்ல நினைச்சத வேற மாதிரி ஆங்கிலத்தில் ராக்கெட், நாதாரி தவிர்த்துவிட்டு சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்.

அதன் பின்னும் நிறைய ஆத்திரமும், கொஞ்சம் அச்சமுமாக உள்ளூர் ஏர்டெல் பில் தொகைக்கு வழக்கமாய் வரும் வசூல்ராஜாவை அழைத்தேன்

(அதற்குமுன் ஒரு சிறு ப்ளாஷ்பேக். நான்குவருடங்களாக ஏர்டெல் அகன்ற அலைவரிசை இணைய இணைப்பு (8ஜிபி இலவச டவுன்லோடு) வைத்திருந்தேன். ஒரே தொகையில் வந்து கொண்டிருந்த பில் ஒரு மாதம் திடீரென அதிகரித்தது, உடனே 16 ஜிபி அளவு கணக்கிற்கு மாறிவிட்டேன். அடுத்த இரண்டுமாதம் சீராக வந்தது. மூன்றாவது மாதம் 1300 ரூபாய் பில்லிற்கு பதிலாக 7,000+ என வந்தது. வசூலுக்கு வரும் வசூல் ராஜாவிடம் இந்த பில் கட்டமுடியாது என்று சொல்லி அதை சரிபடுத்திக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டேன்.

பார்க்கிறோம் பார்க்கிறோம் என மூன்று மாதங்கள் ஓடியது, மூன்று மாதங்களுக்கும் பணம் வாங்கவில்லை. கடைசியாக நான்காவது மாதத்தில் விற்பனை மேலாளருடன் வந்த போது, நான்கு மாதத்திற்கும் வழக்கமாய் வரும் பில் தொகையை மட்டும் முழுதும் கட்டிவிடுகிறேன். அந்த 7000+ வந்ததை கட்டமுடியாது எனச் சொல்ல, அவர்களாக அவர்கள் கம்பெனி சார்ந்த ஆட்களுடன் ஏதேதோ பேசி ஒரு வழியாக அந்த நான்கு மாதப் பில் தொகையை மட்டும் பெற்றுக்கொண்டு, அந்த 7000+ல் வழக்கமான தொகை போக மீதத்தைத் தள்ளுபடி செய்துவிடுவதாகாச் சொல்லிப்போய்விட்டார்கள். 

அடுத்த இரண்டு மாதம் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. மூன்றாவது மாதம் அதிகமாக வந்த அந்தக் குறிப்பிட்ட மாதத்தொகை நிலுவையையை தள்ளுபடி செய்ய கம்பெனி மறுத்துவிட்டது, எனவே நீங்கள் அதையும் செலுத்தினால்தான் தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்த முடியும் என வசூல்ராஜா வந்து நின்றார். அவரே ஒரு யோசனையும் கொடுத்தார் நீங்க அப்படியே விட்டுட்டு வேற பேர்ல இணைப்பு வாங்கிக்குங்க என்றார். ”போங்கடா உங்க சங்காத்தமே வேண்டாம்” என்று வேறு நிறுவனத்திற்கு மாறிவிட்டேன்)

வசூல் ராஜாவை அழைத்து பெயர் மற்றும் இடம் சொன்னவுடன் அடையாளம் புரிந்து கொண்டு, ”என்ன சார் டெல்லியில கேஸ் போடுவேன்”னு யாராச்சும் மிரட்டினாங்களா என்றார். 

அடப்பாவிகளா இதென்ன கூட்டுக் களவானித்தனமான்னு நினைச்சிட்டு, ”என்னய்யா விளையாடுறீங்களா, எவனோ போன் பண்ணி ஹிந்தியில கராமுரான்னு பேசுறான், ரெண்டு மணி நேரத்துல குவாலியர்ல வந்து 58 ஆயிரம் கட்டுன்னு சொல்றான்” என்றேன்

”அவங்க ரெக்கவரி ஏஜண்ட்ஸ்ங்க சார், இந்த மாதிரி சிக்கலாக இருக்கும் பில் தொகை, வசூல் ஆகாத பில் தொகைக்கு போன் பண்ணி டெல்லியில கேஸ், மும்பையில கேஸ்னு மிரட்டுவாங்க, பயந்து போன கஸ்டமர்ஸ் ஏர்டெல் ஆபீஸ்க்கு வந்து பணம் கட்டிடுவாங்க. அப்படிக் கட்டும் பில் பணத்தில் பாதித்தொகையை கம்பெனி அந்த ஏஜண்ட்ஸ்களுக்கு கொடுத்துடும். உங்க மேட்டர் கம்பெனி ஏத்துக்கிட்ட பிறகுதான் வெய்வர் அனுப்பினோம், ரெண்டு மாசம் கழிச்சு தள்ளுபடி ஆனதுக்கு நீங்க என்ன பண்ணமுடியும். இப்படி யாராச்சும் கூப்பிட்டா இனிமே கண்டுக்காதீங்க சார்”னு சொன்னார்

“யோவ்வ்வ்வ்வ்வ்வ்………… உலகத்துல எது எதைத்தான் கண்டுக்காமையே போறது!!!?”

-0-

வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்?

சமீப காலங்களில் ஏதாவது நிகழ்ச்சி அல்லது விழாக்களில், பரிசு அல்லது நினைவுப்பரிசு என்ற பெயரில் வண்ண நெகிழித்தாளால் சுற்றப்பட்டு அளிக்கப்படுபவைகளில் புத்தக வடிவத்தையொத்த பரிசுகள் மேல் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்பு ஏற்படுவதுண்டு. அதே சமயம் அதுகுறித்து அச்சமும் அலுப்பும் சிலசமயம் தோன்றுவதுமுண்டு, காரணம் ஏற்கனவே நம்மிடம் இருக்கு புத்தகமாகவோ அல்லது ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படியென்ற சுயமுன்னேற்ற புத்தகமாகவோ அமைந்துவிடுவதால். அந்த நேரங்களில் இந்தப் புத்தகம் கொடுத்ததற்குப் பதிலாக ஒரு பொட்டலம் வெள்ளைக்காகிதம் கொடுத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமேயென்று நினைத்துக்கொள்வதுண்டு.

வருடந்தோறும் தமிழ்மணம் திரட்டி நடத்தும் போட்டியில், 2010 ஆண்டிற்கான போட்டியில் மட்டுமே கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இருவேறு பிரிவுகளில் ஒரு முதல் பரிசும், ஒரு இரண்டாம் பரிசு கிடைத்தது. பரிசுக்கான தொகைக்கு புத்தகமாக மட்டுமே வாங்க முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று. நியூ புக்லேண்ட்ஸ், நூல் உலகம் ஆகிய புத்தக நிலையங்களிலிருந்து தமிழ்மணம் சார்பாக பரிசாக நான் பெற்ற புத்தகங்களின் பட்டியல்:



நியூ புக்லேண்டில் இருந்து………….

1 .நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி - ராமச்சந்திர நாயர்
2. உறுபசி - எஸ்.ராமகிருஷ்ணன்
3. கள்ளி - வாமுகோமு
4. அரசூர் வம்சம் - இரா.முருகன்
5. சித்தன் போக்குபிரபஞ்சன்
6. என் வீட்டின் வரைபடம் - ஜே.பி.சாணக்யா
7. பேசாத பேச்செல்லாம் - .தமிழ்ச்செல்வன்
8. பீக்கதைகள் - பெருமாள் முருகன்
9. ஏழாம் உலகம்ஜெயமோகன்
10. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
11. ஒரு புளிய மரத்தின் கதை - சுந்தர ராமசாமி
12. லா.ச.ராமாமிர்தம் கதைகள்
13. மெல்ல சுழலுது உலகம் – செல்வராசு
14. யுத்தங்களுக்கிடையில் அசோகமித்ரன்



நூல்உலகம்.காம்-ல் இருந்து….

15. சுஜாதாட்ஸ் – சுஜாதா
16. கூண்டும் வெளியும் - சுப்ரபாரதிமணியன்
17. கொள்ளைக்காரர்கள் - பொன்னீலன்
18. மூடிய முகங்களில் - அழகியபெரியவன்
19. தேடல் - பொன்னீலன்
20. சொல்லாத சொல் - மாலன்
21. ரெண்டு – பா.ராகவன்
22. களை எடு - நம்மாழ்வார்
23. இருளர்கள் ஓர் அறிமுகம் – க.குணசேகரன்
24. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
25. நரிப்பல் - இறையன்பு
26. விசும்புஜெயமோகன்



வேண்டிவிரும்பிக்கேட்ட புத்தகங்கள் வந்தடைந்துவிட்டன. புத்தகத்தின் புது’மை’ வாசம், எடுத்துக்கொள் என இருகரம் விரித்து அழைக்கிறது.

அதேசமயம், வாசிக்காமல் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் பட்டியலில் இந்தப் புத்தகங்களும் இணைந்து, வாசிக்க நேரம் ஒதுக்கமுடியா சோம்பேறித்தனம் குறித்த குற்ற உணர்வின் அடர்த்தியை கூடுதலாக்கிக் கொண்டிருக்கிறது.

மனது குதூகலிக்கும் வகையில் பரிசளித்த தமிழ்மணம் திரட்டி, நியூபுக்லேண்ட், நூல்உலகம்.காம் மற்றும் வாக்களித்த பதிவுலக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

இயந்திரத்தனமான போக்கிலிருந்து கொஞ்சம் கூடுதல் நேரத்தை வாசிப்பிற்காக பதியனிடவேண்டும். வாசிப்பைத் தவிர வேறெதில் புதுப்பித்துக்கொள்ளமுடியும்.

-0-

சிரிச்சுட்டு அடுத்த வேலையப்பார்ப்போம், வேறென்ன பண்றது?


தொலைக்காட்சிகளில் புதிய சிறப்புச் செய்திகள் மின்னும் பொழுதெல்லாம், முந்தைய செய்திகளின் பரபரப்பு தானாய்ச் செத்துப்போகிறது. அந்தச்செய்திகள் செத்துப்போவதோடு, பின்புலத்தில் உள்ள மிகக் கொடிய அநியாயங்களும் கொலை செய்யப்பட்டுவிடுகின்றன. இது தொழில் நுட்பயுகம் என மார்தட்டுவதை விட, ஊழல்களின் யுகம் என்று நம் பொடனியில் படாரென்று அடித்துக் கொள்ளத் தோன்றவில்லை என்பதும் ஆச்சரியம்தான்.

ஒன்றா இரண்டா, எண்ணிப்பார்க்க விரல்களை இரவல் வாங்கவேண்டும் என்பது போன்ற எண்ணிக்கையில் உலகத்தின் மிகப்பெரிய ஊழல்களை பெருமையோடு தின்று கொழுத்து ஏப்பம் விட்டாயிற்று. ஏனோ ஒரு சிலர் மட்டும் அஜீரணித்தால் சி.பி.ஐயிடம் தற்காலிகமாக கசாயம் குடித்துக் கொண்டிருப்பதை, நின்று நிதானித்துக் கேட்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். கேட்டு மட்டும் என்ன கிழித்துவிடப்போகிறோம் எனும் பொதுப்புத்தி ஆழ வேரூன்றிவிட்டது. மிகப் பெரிய இன அழிவிற்கு கள்ளமௌனத்தோடு துணைபுரிந்ததையும், உலகத்தின் சின்ன உண்ணாவிரதத்தையும் கசப்போடு கடந்து, கடைசியில் மறந்தும் போனவர்கள்தானே நாம்.

இதோ அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் கொள்ளையடிக்க கூட்டுச்சேர்ந்து கொண்டிருக்கிறார்கள், கொள்கை என்ற ஒரு வார்த்தையை மலம் கழித்து துடைத்தெறிந்த கல்லாக தூர எறிந்துவிட்டு. எதற்காக இவர்கள் அரசியம் களம் பூண்டு நிற்கிறார்கள் என யோசிக்கும் போது எல்லோருக்குமே தெரியும், மக்களை வாழவைப்பதற்காக மட்டுமில்லை என்பது.

சாதிச்சாயம் பூசி புதிதுபுதிதாய்ப் பிறப்பெடுக்கும் கட்சிகளும் கூட, அது சார்ந்த மேல்மட்டத் தலைவர்களின் சொத்துபத்துக்களைப் விரிவாக்கம் செய்யவும், பெருகி நிற்பதைக் காப்பாற்றிக்கொள்ளவும் என்பதேயன்றி வேறெதுவுமாய்த் தோன்றவில்லை.

ஏதேதோ திசைகளில் நின்றிருந்த இந்தப் புண்ணிய ஆத்மாக்கள் எதன் பொருட்டு அணிசேர்ந்து கை உயர்த்துகிறார்கள் என்ற கேள்வியை நினைக்கும் போதே கவுண்டமணி காதுக்குள் கூவுகிறார் “இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா”

ஆளும்கட்சி போய் எதிர்கட்சி வந்தால் உருப்படலாமா என்று நினைத்தால் அங்கும் வெற்று மௌனமே பதில். வறுத்தெடுக்கப் புரட்டிக் கொண்டிருக்கும் தோசைக்கல்லிலிருந்து இன்னொரு தோசைக்கல்லுக்கு இடம் பெயர்வதுபோலத்தான் இந்தக் கட்சிக்கு அந்தக் கட்சி! அந்த தோசைக்கல்லுக்கு அடியே எந்த நிறுவனத்தின் எரிவாயு என்பதில் மட்டுமே வேறுபாடு இருக்கலாம், சூட்டில் என்ன வித்தியாசம் இருந்துவிடப்போகிறது.

எல்லாமட்டங்களில் சுருட்டப்பட்ட பணம் நேரிடையாக அடித்து சிதைத்தது விவசாய நிலங்களையும், அடித்தட்டு மக்களின் அன்றாடப் பொருட்களையும்தான். ஆசை காட்டியோ, விஷமிட்டாய் திணித்தோ, மிரட்டியோ நூதனமாய் விளைநிலங்களைப் பிடுங்கி, அதன் விலையை உயர்த்திக்காட்டும் யுக்தியைக் கையாண்டு இன்னொருவனுக்கு கை மாற்றி, அதை இன்னொருவனுக்கு கை மாற்றி என சூதானமாய் சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அரிசி விலையும், பருப்பு விலையும் ஆகாயத்திற்கு பறப்பதைக்குறித்து என்ன கவலை எப்போதும் ஏசிக்குளிருக்கு கம்பளி தேடும் அரசியல் மேதாவிகளுக்கு.

இலவச மின்சாரம் கொடுத்து, மானியம் கொடுத்து, கடன் தள்ளுபடி செய்து இங்கே உணவுப் பொருளை விளைவிக்க வேண்டுவது அவசியமா? ஏன் இறக்குமதி செய்யக்கூடாது என, இறக்குமதில் ஒரு கட்டிங் கிடைத்தாலும் கிடைக்குமே என்ற எண்ணத்தால் கேட்கும் இந்திய பொருளாதார மேதைகளுக்கு, இங்கிருக்கும் மக்கள் தொகைக்கு விளைவித்துப் போட எந்த நாட்டாலும் முடியாது என்பது குறித்து யோசிக்க நேரம் ஏது?

”அவன் அப்பமூட்டுக் காசையா கொடுக்குறான், அடிச்ச காசு தானே…… குடுக்கட்டுமே” என்ற கறைபட்ட மனோநிலையோடு விரல் நுனியில் கறைதாங்கத் துணிந்தாகிவிட்டது. ஓட்டுக்கு எவ்வளவு, ஊருக்கு என்ன செய்வாங்க என்றெ பேரம் உள்ளடங்கிய கிராமங்களிலும் தொடங்கிவிட்டது. கொடுப்பவன் ஜெயித்தால் என்ன தோத்தால் என்ன, எப்பவும் தோற்பது சாமானியர்கள்தானே!

இலவசக் காப்பீட்டை நம்பி ”டாக்டர் இல்லை, வேற ஆஸ்பிடல் பாருங்க” என்ற வார்த்தைகளை சுமந்துகொண்டு மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியவர்களுக்கு, தெரியாமல் போகலாம் அதில் தூங்கும் அரசியல். இந்திய ஆட்சிப்பணியில் தேறிய புத்திசாலிகளுக்குக் கூடவா தெரியவேண்டாம், காப்பீட்டிற்கு அரசு செலுத்திய பணத்தில், எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் மிகத் தரமான அனைத்து வசதிகளையும்கொண்ட மருத்துவமனைகளை நிர்மாணித்திருக்க முடியும் என்பது?

கோபம் இல்லாத மனிதன் இங்கு யாருமில்லை. பலரிடம் ”என்ன பாஸ் பண்ண முடியும், எல்லாமே இப்படித்தான்னு ஆயிப்போச்சு” என்ற அலுப்புதான் அதிகபட்ச அறச்சீற்றமாக இருக்கிறது. அதையும் தாண்டிப் பேசமுயலும் போது, ஏதோ கிசுகிசுவோ, டாஸ்மாக்கின் சரக்கின் மப்பு குறித்த கண்டுபிடிப்போ, கிரிக்கெட் ஸ்கோர் குறித்தோ பேச்சு தடம்புரண்டுபோய் அறச்சீற்றம் தற்கொலை செய்துகொள்கிறது.

எல்லாக் கோபங்களையும் சிதைத்து நகைப்பாக உருமாற்றி மிக எளிதாக உள்வாங்கிக்கொள்ள பழகிக்கொண்டதுதான் கொடுஞ்சாபமாய்ப் போய்விட்டது. குறுந்தகவல்களாகவும், மின்னஞ்சல்களாகவும், புனைவுகளாகவும், மாற்றப்பட்ட பாடல்களாகவும் கசப்பானதொரு புன்னகையோடு கடந்து போகிறோம். ஆனால் அந்தக் கசப்பு மட்டும் அடிநாக்கில் படிந்து கிடக்கிறது.

நம்மைநாமே முழுக்க முழுக்கத்தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது என்றைக்காவது புரியுமா? அல்லது நம் வாழ்நாள் தீர்ந்து போன பிறகும், புரியாதது போன்ற நடிப்பு மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் தொடருமா?

-0-

அவளா இருப்பாளோ?


மூலைத் தேநீர்க்கடையில்
ஆவிபறக்க நுரை ததும்பும்
தேநீர்க்குடுவையை ஏந்தி
உதட்டில் பொருத்தி
உடைபடும் நுரைக்குமிழ்களை
உறிஞ்சும்போது கவனித்தேன்…

தொட அஞ்சும் அழுக்கு
எண்ணைத் துளிகளை
தொட்டுப்பாராத சிக்கு மசிறு
எங்கெங்கோ கிழிந்த
வர்ணம் தொலைத்த சேலை

வெறுமை சூழ்ந்த விழிகளோடு
ஏந்தியகைகளோடு
நின்று கொண்டிருந்தவளை…
இன்னொரு முறை
பார்க்கும் துணிவில்லை …

அவசரமாய்த் துழாவி
எட்டி ஏந்திய கையில்
இரண்டொரு சில்லறையை
விட்டுவிட்டு பார்வையை
வேறொரு திசைக்கு
இடம்பெயர்த்தும் முன்
உள்ளடங்கிக் கிடந்த
அவள் கண்களில்
ஒருமுறை தேடிப்பார்த்தேன்..

எங்கேயோ ஓடிப்போய்
எந்ததகவலும் இல்லாமல்
கால ஓட்டத்தில் கரைந்துபோன
சின்னவயதில் சிட்டாங்கல் ஆடிய
எதிர்வீட்டு வசந்தாக்காவா
இருப்பாளோ?

-0-

3000 பிள்ளைகளின் தந்தை மரணம்

பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து 
3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை 
சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”  அய்யா 
இன்று இயற்கை எய்தினார்.
 
ஆழ்ந்த அஞ்சலிகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 
 
 
அவர் குறித்த முந்தைய இடுகைகள்
 
 

 
அவர் இந்த உலகில் விட்டுவிட்டுப்போகும் அடையாளம் 
இன்றோ நாளையோ அழிந்துவிடப் போவதில்லை. 
 

 இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி, 
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில்
அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு 
இருந்து கொண்டுதான் இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான கிளைகளும்
கோடிக்கணக்கான இலைகளும்
அஞ்சலி செலுத்த அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

நிறைவாய் வாழ்ந்து முடித்தவருக்கு
அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்


----- 
(விபரங்களுக்கு: ஏழூர் விஜயகுமார் 98423-44399)

-0- 

வாயுள்ள புள்ள எப்பவுமே பொழைச்சுக்குது

பேச்சை மூலதனமாக வைத்துக் கொண்டிருக்கும் ஜோசியக்காரர்கள் குறித்த கண்மணி குணசேகரனின் பகடி

வாய்ச் சொல்லின் வீரனாய் இருக்கும் ஜாதகம் பார்ப்பவரின் மகன் முருங்கைக்கீரை திருடப்போக, வீட்டுக்காரர்கள் கண்டு, அடித்து துவைத்து குப்பையில் தூக்கி வீசிவிடுகின்றனர்.

அடிபட்டுக்கிடந்தவன், தன் அப்பனுக்கு தகவல் சொல்ல வழியில் செல்பவனிடம் சொல்கிறான்.

ஒருவேளை தகவல் சொல்லப் போகின்றவன்  ”இந்தமாதிரி, ஒம்பையன் முருங்கக்கீரை திருடப்போயிருக்கான், கண்டுபிடிச்சு வெளக்குமாறு, செருப்பால அடிச்சு, குப்பையில் தூக்கிப் போட்டுட்டாங்கன்னு” சொல்லிடுவானோன்னு அப்பனுக்குத் தப்பாமல் பிறந்த பையன் சொல்லியனுப்புகிறான்

”வெள்ளிக்கண்ணன்
விஸ்வலிங்க தம்பிரான்
முருங்ககீர பதார்த்தம் கைப்பற்றப்போய்
அண்டம் தடுமாறி
பூமிப்பாரம் தாங்கி
அரண்மனையாளால் கண்டெடுத்து
சுத்தம் காப்பானால் துடைத்து
பசுமாட்டுச் சென்மத்தால் பரிமாறி
துர் மூத்தி மெத்தைமேல்
சயனித்திருப்பதாக
செப்புடா என் அப்பனிடம்!!!!” என்று.

ம்ம்ம்ம்ம்… வாயுள்ள புள்ள எப்பவுமே பொழைச்சுக்குது


----

குறிப்பு : 
சுத்தம் காப்பான் -  வெளக்குமாறு
பசுமாட்டுசென்மம் – மாட்டுத்தோல் செருப்பு 
துர் – குப்பை

-----
 
பொறுப்பி:
எங்கள் அரிமா சங்கக் கூட்டத்தில் நடுநாட்டுக் கதைகள் என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் ஒரு பகுதி!


-0-

அப்பா


வழக்கம்போல் சூழ்ந்த இருள் வழக்கத்திற்கு மாறான கருமையைக் கொண்டுவந்து சேர்க்குமென்று யாருக்கும் தெரியவில்லை. படிக்கட்டுப் பக்கம் இருட்டு அப்பிக்கிடந்தது. வாசலில் நின்ற மகளிடம் ”ஏங்கண்ணு இந்த லைட்டக்கூட போடலையா?” எனக்கேட்க, சிரித்துக்கொண்டே விளக்குப் பொத்தானை அழுத்தப்போனாள். மொட்டை மாடியில் இருக்கும் தலைகவிழ்ந்த ஒற்றை விளக்கு ஒளியைக் கொட்டத்தொடங்கியது. 

விடிந்தால் மாரியம்மன் கோவில் திருவிழா. நினைக்கவே மனம் முழுதும் மத்தாப்பாக பூத்தது. சாப்பிட்டுவிட்டு கோயில் பக்கம் எட்டிப்பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார். தொலைக்காட்சியில் தலைப்புச் செய்திகள் உரத்த குரலில் ஒலி(ளி)த்துக்கொண்டிருந்தது. கையில் ரிமோட்டோடு தரையில் கிடந்த தலையணைமேல் சாய்ந்திருந்த மாப்பிள்ளை சிநேகமாய் புன்னகைத்தார். அங்கே அமரத்தோன்றவில்லை. என்றுமில்லாத பதட்டம் ஏதோ வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே உருண்டு கொண்டிருப்பதாக உணரமுடிந்தது. ஓரிடத்தில் உட்கார முடியவில்லை. ஏதோ இம்சையாய் இருப்பதுபோல் உணரமுடிந்தது.

சமையல்கட்டில் இரவுச் சாப்பாட்டுக்கான பரபரப்பு தெறித்துக் கொண்டிருந்தது. இன்று ஏனோ கொஞ்சம் கூட பசிக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. ”சாப்பிடலாம் வாங்க” என்ற மனைவியின் அழைப்புகூட சாப்பிடலாம் என்ற எண்ணத்தைத் தூண்டவில்லை. இருந்தாலும் இரவில் உணவெடுக்க வேண்டுமே என்ற எண்ணம், உடலை தன்னிச்சையாய் கை கழுவும் இடத்திற்கு நகர்த்திச் சென்றது. கை கழுவக் குனியும்போது அதுவரை அடைபட்டுக்கிடந்த ஏதோ ஒன்று குமட்டிக்கொண்டு வந்தது. ”ஏன் குமட்டுகிறது, என்ன தின்றோம், எது சேரவில்லை” என நினைக்கும் போதே குபீரென கொப்பளித்து வந்தது வாந்தி அடர்த்தியான ரத்தக்குளம்பாய்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டும்மீளாமல், டப்பாவில் அள்ளிய தண்ணீரை ஊற்றி அடித்துவிட நினைக்கும்போதே, ஓங்காரமாய் குமட்டிய சப்தம்கேட்டு ஓடிவந்த மனைவி, நாலாபக்கமும் பரவும் இரத்தக் குளம்பைப் பார்த்து ”அய்யோ”வென அலறியது மிக மெதுவாய் காதுகளில் விழுந்தது. லேசாய் உடம்பு நடுங்கத்துவங்கியது. எனக்கு என்ன நடக்கிறது என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, மனைவி பிள்ளைகள் பரபரப்பாய் இயங்குவதும் மெதுவாய் புரிய ஆரம்பித்தது.

எங்கோ போனில் பேசுவது கேட்டது. சின்னவனிடமாக இருக்கும். மீண்டும் மீண்டும் என்ன நடக்கிறது எனக்கு, ஏன் உடம்பு நடுங்குகிறது, ஏன் கைகள் எல்லாம் துவளுகின்றன என நினைக்கும்போதே அருகில் இருக்கும் மனைவி, மகள், மருமகன், பேரக்குழந்தைகள் எல்லாம் அந்நியப்படுவதாய் தோன்றியது. குழந்தைகள் இரண்டும் ஒன்றும் புரியாமல் தங்களுக்குள் கைகோர்த்து வெளுத்த கண்களோடு அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தன.

ஆஸ்பிடலுக்கு போகலாம் என அவர்களாகவே அவசரமாகப் பேசி எடுத்த முடிவுக்கு என்னிடம் ஒப்புதல் கேட்கும் போது, சரி அல்லது வேணாம் என்று சொல்லும் திராணிகூட அற்றுப்போயிருந்தது. இமைச்செவுள்கள் தாங்களாகவே இழுத்து பூட்டிக்கொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தன. காருக்குள் திணிக்கப்பட்டு சாய்ந்து படுக்கவைக்கப்பட்டதை உணரமுடிந்தது. கார் வேகங்கொண்டு கிளம்பியது மனைவியும், முன்னிருக்கையிலிருந்து மகளும் ”ஒன்னுமில்ல..ஒன்னுமாகாது... மாரியாயா காப்பாத்து சாமி” என எட்டியெட்டி தடவிக் கொடுக்க முனைந்ததை உணரமுடிந்தது. கார் சன்னல் வழியே மாரியம்மன் கோவில் கோபுர விளக்கின் வெளிச்சம் ஒரு கணம் உள்ளே விழுந்து மறைந்தது தெரிந்தது. 

துவரை அவர் எனப்பட்டவர் அதுவாகிப்போனார். விரைந்து, சாலை நெருக்கடிகளுக்குள் சீறிப்பாய்ந்து மருத்துவமனையை எட்டுமுன்னே உடல் அதீதமாய்ச் சில்லிட்டுப்போயிருந்தது. உடன் வந்த எல்லோருக்கும் புரிந்து போயிருந்தாலும், ஒருவருக்கும் அதை அப்படித்தான் என ஏற்றுக்கொள்ள புரண்டு போராடத்தயாரான மனது, தயாராக இல்லை. மருத்துவமனை வாயிலுக்கே ஓடிவந்த மருத்துவர், சம்பிரதாயமாக சில சோதனைகள் செய்துவிட்டு உதட்டைப்பிளுக்கினார். ”உள்ளே வரவேண்டியதே இல்ல, நடந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சுங்க, ஒன்னும் வாய்ப்பில்லீங்க” என்றார்.

அவரோடு போன கார் அதுவோடு திரும்பிவந்தது. நிதானமாய் ஊர்ந்து ஊர் திரும்ப காருக்குள் நடுங்கும் கையோடு கைபேசியில் மகள் வெளியூரிலிருக்கும் சகோதரனோடு பேச, பின் புலத்தில் கதறும் அம்மாவின் குரல் காட்டிக்கொடுத்தது. மாப்பிள்ளை போனை வாங்கி கொஞ்சம் நிதானித்து விளக்கி, உடனே புறப்பட்டு வரச்சொன்னார்.

மூவருக்குமே உடலெல்லாம் படபடத்தது. எப்போது வீடு வந்து சேர்ந்தோம் என்று தெரியவில்லை. இருண்ட வாசலில் ஆட்கள் குழுமியிருப்பது காரின் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது. கூசும் விளக்கிற்கு கண்களை கைகளால் மறைத்துக்கொண்டு காரை நோக்கி கும்பலாக ஓடிவந்தனர். மகளிடம் சாவி வாங்கி வீட்டு நடை திறக்க யாரோ ஓடினர். பக்கத்துவீட்டுப் பெண்கள் இருவர் மனைவியை கட்டியணைத்து தூக்கியவாறு வீட்டிற்குள் இழுத்துச் சென்றனர்.

வாசலில் போடப்பட்ட கட்டிலில் அது இறக்கிப்படுக்க வைக்கப்பட்டது.

”காத்தால நோம்பிய வெச்சுக்கிட்டு சவத்த எப்படி வெக்கிறது” என காற்றில் மிதந்த குரல்களை எல்லோருமே தடவிப்பார்த்தனர்.

”பங்காளியூடு வரவேணும், பசங்க வரவேணுமேப்பா”

”பங்காளிக, பசங்க எல்லாமே வரட்டும், எப்டியிருந்தாலும் பொழுது வெடியறதுக்குள்ளே எல்லாமே முடிச்சாகனுமப்போய்” என்ற குரல் எல்லோருமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை கோவில் திருவிழா உருவாக்கியது.

எப்படி நடந்ததென்று தெரியவில்லை. எல்லாம் படபடவென முடிந்து வாசலில் தண்ணீர் கொட்டி அடித்து விடும்போது, காதுவரை மூடிக்கட்டிய துண்டோடு தினமும் பால் வாங்கவரும் பால்காரர், வந்த வேகத்தில் மணியடித்துவிட்டு, சூழ்நிலையைக்கண்டு விக்கித்து நின்றார். வண்டியைவிட்டு இறங்கி வந்த அவருக்கும் உடல் நடுங்கத் தொடங்கியது. ஒரு பாத்திரம் கொண்டு வரச்சொல்லி அதுவரை மற்ற கட்டுத்தரைகளில் வாங்கி வந்திருந்த பாலை அப்படியே கவிழ்த்து விட்டுக்கிளம்பினார். நடு ராத்திரியில் யாரோ எழுப்பி வந்திருந்த சமையல்காரர் காபி போடுவதற்காக பால் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றினார்.

”திடிர்னு இப்படியாயிப் போச்சேப்பா” என்ற துக்கமடர்ந்த வார்த்தைகளோடு கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தது. பொழுது விடிய விடிய விளக்குகள் தூங்க ஆரம்பித்தன.

சூரியன் வீரியமாய் கதிர் பாய்ச்சத் துவங்க, கொஞ்சம் கொஞ்சமாக, தகவல் கிடைத்த ஆட்கள் அடர்ந்து வரத்துவங்கினார். எல்லோர் முகத்திலும் அதிர்ச்சி அப்பிக்கிடந்தது.

“இதென்ன சாவற வயிசா?”

”அட ரெண்டு நாள் முன்னாடிதானப்பா பேசுனனே”

”நேத்து சாயந்தரம், மாமங்கூட பேசுலாம்னு நெனச்சனே” என்ற ஆயாச வரிகள் காற்றில் மிதந்து கொண்டேயிருந்தன.

வரிசையாய் நின்ற ஆண்களிடம் புடவைத் தலைப்பு சுருட்டிய கைகளை நீட்டிவிட்டு, உள்நுழைந்தவர்கள் பெரும்பாலும் ஒப்பாரியெடுத்து அழ ஆரம்பித்தனர். துண்டோ கைக்குட்டையோ கைகளில் வைத்து கை நீட்டிய ஆண்கள் ஓரமாய்க் கிடந்த நாற்காலிகளில் அமர்ந்து, அன்றைய செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டே அக்கம் பக்கம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தனர். நேரம் கடக்கக்கடக்க துக்கம் அடைத்த கண்களோடு வந்தவர்கள், கொஞ்சம் அழுது, ’ப்ச்’ கொட்டி, ஆசுவாசப்பட்டு, தேநீர் குடித்து கலைந்து கொண்டிருந்தனர்.

ஒன்றுமே புரியாமல் சுருண்டு கிடந்த மகளுக்கு எச்சில் கசந்தது. எல்லாம் அடைபட்டுக்கிடந்ததுபோல் இருந்தது. அப்பா இல்லையென்று நினைக்கக்கூடத் தோன்றவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நினைக்கவோ, நம்பவோ சற்றும் இடம் கொடுக்காமல் மனம் அடைபட்டுக்கிடந்தது. இறுக்கம் சற்றும் தளரவில்லை. ஒரு துளி அழுகை வரவில்லை. அழுவது எப்படி என்றுகூடத் தெரியாமல் மனம் கெட்டிப்பட்டுக்கிடந்தது.

அப்பாவின் நிலைகுத்தியகண்கள் மட்டும் மூடிய இமைக்குள் பரவிக் கிடந்தது. 

”பரவால்ல பாப்பா அழுவாம இருக்கா, என்னாயா பண்றது, நடந்தது நடந்து போச்சு, எல்லாம் நம்ம கையிலையா இருக்கு, தலசுழுப்பு அவ்வளவுதான்னு இருந்துருக்குது” என யாரோ பேசிக்கொண்டிருந்தது மெதுவாய் காதுகளில் விழுந்தது. கதறி அழும் அம்மாவையும், அவ்வப்போது கசிந்து வரும் அண்ணன், தம்பியின் அழுகுரல்களையும் நீண்ட நேரமாய் தனக்குள் அடர்த்தியாய் சேமிக்க மட்டுமே செய்தாள்.

ஒன்று சாப்பிடாமல் கசந்த வாயைக்கொஞ்சம் கொப்பளிக்கலாமே என்று எழுந்தவளை, அண்ணி என்னவென தலையசைத்துக் கேட்டாள். வாய் கொப்பளிக்கனும் என்று சைகை காட்ட, கைபிடித்து அணைத்து வெளியில் கொண்டுவந்தாள். அணைத்த அண்ணியின் கதகதப்பு கொஞ்சம் தேவையானதாக இருந்தது. வெளியில் தெறிக்கும் வெயில் கண்ணைக் கூசவைக்க இமை சுருக்கி பழக்கப்படுத்தினாள்.

வாசலையொட்டியிருந்த குளியலறைப் பக்கம் நகர்ந்தவளின் கவனத்தை ஒற்றைக் காக்கையின் குரல் மாடியை நோக்கி ஈர்த்தது. திக்கென்று நிமிர்ந்தவளின் கண்ணில் மாடி கைப்பிடிச்சுவர் மேலிருக்கும் விளக்குக் கம்பத்தில் உட்கார்ந்துகொண்டு கீழே பார்க்கும் ஒற்றை காகம் தெரிந்தது. காகத்தின் காலடியில் முதல் நாள் இரவு அப்பா போடச்சொன்ன விளக்கு வெயிலில் மிக மங்கலாய் இன்னும் எரிந்து கொண்டிருந்தது. ஏற்றிய விளக்கை அணைக்கும் முன் நிரந்தரமாய் இல்லாமல் போன அப்பாவை நினைக்க கண்கள் சுழன்றன. எங்கிருந்தோ வந்த அப்பா அப்படியே மனதுக்குள் பலமாய் இறங்கினார்.

அடிவயிற்றிலிருந்து எழுந்த ”அப்ப்ப்பாஆஆஆஆஆ....” என்ற அழுகுரல் அண்டமெங்கும் அதிரத்துவங்கியது.
-0-